தேவையில் இருப்போருக்கு இரக்கத்துடன் பதிலளியுங்கள்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
இயேசு ஆண்டவருக்குச் செவிசாய்ப்பதன் வழியாக மட்டுமே நாம் ஒருவருக்கொருவர் உண்மையாகக் கேட்கக் கற்றுக்கொள்கிறோம் என்று கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
நவம்பர் 6, வியாழனன்று, இயேசு - மரியா மற்றும், புனித சார்லஸ் போரோமியோவின் மறைபரப்பு சகோதரிகளின் துறவு சபையினரை அவர்தம் பொதுப்பேரவைகளை முன்னிட்டு திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை.
தேவையில் இருப்போருக்கான அன்பில் வேரூன்றிய இந்த இரண்டு துறவு சபைகளின் பகிரப்பட்ட பணியைப் பற்றி சிந்தித்த திருத்தந்தை, அவர்தம் நிறுவுனர்களின் பணியையும் எந்தக் காரணத்திற்காக இந்த இரு சபைகளும் தோற்றுவிக்கப்பட்டன என்பதையும் தனது உரையில் எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.
கடவுளின் முன்முயற்சியையும் மனித அக ஆய்வை வெளிப்படுத்தும் "இயேசு நெருங்கி வந்து அவர்களோடு நடந்து சென்றார்" (லூக்கா 24:15) மற்றும் "நீர் செல்லும் இடத்திற்கே நானும் வருவேன்" (ரூத் 1:16) உள்ளிட்ட அந்தந்த அதிகாரங்கள் வழிகாட்டும் கருப்பொருள்களைத் திருத்தந்தை நினைவுகூர்ந்து பாராட்டினார்.
பிரெஞ்சுப் புரட்சியின் போது புனித கிளாடின் மற்றும் பெருந்திரளான இடம்பெயர்வின் துயரத்திற்கு மத்தியில் ஆயர் ஸ்கலாப்ரினி உள்ளிட்ட இரு துறவு சபைகளும் எதிர்கொண்ட சிரமங்களை ஒப்புக்கொண்ட அதேவேளை, உயிர்த்த இயேசுவை அவர்கள் சந்தித்ததன் வழியாக நிலைநிறுத்தப்பட்ட அவர்களின் விடாமுயற்சியையும் பாராட்டினார் திருத்தந்தை.
அவர்கள் தங்கள் நம்பிக்கையில் வலிமையைப் பெறவும், தேவையில் இருப்போருக்கு இரக்கத்துடன் பதிலளிக்கவும், மற்றவர்களில் கடவுளின் பிரசன்னத்தின் பிரதிபலிப்பைக் காணவும் அவர்களுக்கு அழைப்பு விடுத்தார் திருத்தந்தை.
தேவைப்பட்டால் புதிய பாதைகளில் பயணிப்பதற்கான சவாலை ஏற்றுக்கொண்டு, கடவுளுக்கும் அவர்களது உடன் பயணிக்கும் சகோதரிகளுக்கும் கவனமுடன் செவிசாய்க்கும்படி அவர்களை வலியுறுத்தினார்.
மேலும் உலகளவில் அவர்களின் பணிக்காக நன்றி தெரிவிப்பதாகவும் அவர்களுக்காக இறைவேண்டல் செய்வதாகவும் கூறி தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கி தனது உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
