புனித ஜான் ஹென்றி நியூமன், உர்பானியானா பல்கலைக்கழகத்தின் பாதுகாவலர்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
அனைத்துப் புனிதர்களின் பெருவிழாவான நவம்பர் 1-ஆம் தேதியிட்ட ஆவணம் ஒன்றில் அறிவிக்கப்பட்டுள்ளபடி, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், புனித ஜான் ஹென்றி நியூமனை பாப்பிறை உர்பானியானா பல்கலைக்கழகத்தின் பாதுகாவலராக அறிவித்துள்ளார்.
நவம்பர் 1, சனிக்கிழமை சிறப்பிக்கப்பட்ட அனைத்துப் புனிதர்கள் பெருவிழாவன்று, புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் இடம்பெற்ற உலகக் கல்வி விழாவிற்கான திருப்பலியின் போது நியூமன் திருஅவையின் மறைவல்லுநராக அறிவிக்கப்பட்டதோடு இந்த அறிவிப்பும் அத்தடன் இணைந்து வெளியிடப்பட்டது.
இக்கல்லூரியின் அதிபராக செயல்படும் பாப்பிறைப் பிரதிநிதி பேராசிரியர் வின்சென்சோ புவோனோமோவின் முன்மொழிவைத் தொடர்ந்து, பல்கலைக்கழகத்தின் வேந்தர் கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள் திருத்தந்தைக்கு இந்த கோரிக்கையை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது ஆணையில், திருத்தந்தை லியோ அவர்கள் நியூமனை விசுவாசத்தின் முன்மாதிரியாகவும், உண்மையைத் தேடுபவராகவும் வர்ணித்து, பல்கலைக்கழகத்தின் மறைபரப்பு பணிக்காகப் பரிந்து பேசுமாறு அவரிடம் வேண்டிக்கொண்டார்.
திருத்தந்தை லியோ அவர்கள் தனது மறையுரையின்போது, நியூமனின் கலாச்சார மற்றும் ஆன்மிக உயர் நிலையைப் பாராட்டியதுடன், உண்மையைத் தேடுபவர்களுக்கும் துயரங்கள் வழியாக வெற்றியை நோக்கிச் செல்வோருக்கும் அவர் ஓர் உத்வேகமாகத் திகழ்கின்றார் என்று குறிப்பிட்டார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
