நலவாழ்வு அமைப்புகள் மனித மாண்பைப் பாதுகாக்க வேண்டும்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
நலவாழ்வு அமைப்புகள் செயற்கை நுண்ணறிவை ஒருங்கிணைப்பதால் அவை மனித மாண்பைப் பாதுகாக்க வேண்டும் என்று வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
நவம்பர் 17, இத்திங்களன்று, இலத்தீன் அமெரிக்க தனியார் நலவாழ்வு அமைப்புகள் சங்கத்தின் (ALAMI) உறுப்பினர்களை திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு விண்ணப்பித்த திருத்தந்தை, செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்பம் அதிகரித்து வரும் நலவாழ்வு அமைப்புகளை வடிவமைக்கும் நிலையில், நெறிமுறை தரங்களைப் பராமரிக்குமாறு அவர்களைக் கேட்டுக்கொண்டார்.
நோயாளர்களைப் பராமரிப்பதில் பாகுபாடு காட்ட வழிவகுக்கும், தனிநபர்களை வெறும் புள்ளிவிவரங்களாக மாற்றும் செயற்கை நுண்ணறிவில் சார்புகளைத் தவிர்ப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய திருத்தந்தை, பொருளாதார அல்லது அரசியல் ஆதாயத்திற்காக செயற்கை நுண்ணறிவைத் தவறாகப் பயன்படுத்துவதற்கு எதிராக எச்சரித்ததுடன், இது நலவாழ்வு நிர்வாகத்தை சிதைக்கக்கூடும் என்றும் எடுத்துக்காட்டினார்.
மனித மாண்பிற்கு முன்னுரிமை அளிக்கும், இலாபத்தை விட ஒன்றிப்பு மற்றும் பொது நன்மையை வலியுறுத்தும் ஒரு நலவாழ்வு அணுகுமுறைக்கு அழைப்பு விடுத்தார் திருத்தந்தை.
தொழில்நுட்பம் மனித உறவுகளையும், ஒருவருக்கொருவர்மீது காட்டும் அக்கறைக்குத் தடையாய் இருக்கக் கூடாது, மாறாக அவற்றை மேம்படுத்த வேண்டும் என்றும், அனைத்து நோயாளர்களும் மரியாதையுடனும் இரக்கத்துடனும் நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்திக் கூறினார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
