தேடுதல்

லாத்வியா நாட்டின் திருப்பயணிகளுடன் திருத்தந்தை லாத்வியா நாட்டின் திருப்பயணிகளுடன் திருத்தந்தை   (ANSA)

திருப்பயணிகள் இறையருளால் வலிமை பெற திருத்தந்தை அழைப்பு!

"நம்பிக்கை என்பது எல்லா பதில்களையும் கொண்டிருப்பது என்று அர்த்தமல்ல, மாறாக கடவுள் மீது நம்பிக்கை வைப்பது மற்றும் கிறிஸ்துவை இன்னும் நெருக்கமாகப் பின்பற்றுவது" : திருத்தந்தை பதினான்காம் லியோ.

ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்

உக்ரைனில் இடம்பெற்றுவரும் போரின் தாக்கத்தை அதிகமாக சந்தித்துவரும் லாத்வியா நாட்டின் திருப்பயணிகளிடம், "மோதல் காலங்களில் இறைவனை நோக்கித் திரும்பி, அவருடைய அருளால் வலிமை பெறுவது மிகவும் முக்கியமானது" என்று மொழிந்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

நவம்பர் 24, இத்திங்களன்று,லாத்வியாவிலிருந்து உரோமைக்கு முதல் திருப்பயணம் தொடங்கி நூறு ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, அந்நாட்டிலிருந்து வந்த கிறிஸ்தவப் திருப்பயணிகளின் பிரதிநிகளைச் சந்தித்தபோது இவ்வாறு தெரிவித்தார் திருத்தந்தை.

லாத்வியா நாட்டுத் தலைவர்களுக்கும் திருப்பீடத்திற்கும் இடையிலான கலந்துரையாடல்கள் அங்குக் கிறிஸ்தவ நம்பிக்கையின் நேர்மறையான பங்களிப்பை வழங்குகின்றன என்று வலியுறுத்தினார் திருத்தந்தை.

'எதிர்நோக்கின் திருப்பயணிகள்' என்ற தலைப்பில் கொண்டாடப்படும் இந்த யூபிலி ஆண்டைப் பற்றிக் குறிப்பிட்ட திருத்தந்தை, நம்பிக்கை என்பது எல்லா பதில்களையும் கொண்டிருப்பது என்று அர்த்தமல்ல, மாறாக கடவுள் மீது நம்பிக்கை வைப்பது" மற்றும் கிறிஸ்துவை இன்னும் நெருக்கமாகப் பின்பற்றுவது என்றும் மொழிந்தார்.

அன்றாட இரைச்சலிலிருந்து விடுபட்டு, கடவுளின் குரலுக்குச் செவிசாய்க்கவும், தங்கள் விசுவாசத்தை ஆழப்படுத்தவும், உலகம் தர முடியாத அமைதியைப் பெறவும், உரோமையில் தங்கள் நேரத்தை பயன்படுத்த திருப்பயணிகளை ஊக்குவித்து தனது உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.

இந்தத் திருப்பயணத்தில் கலந்துகொண்ட அந்நாட்டுப் பிரதமர் எவிகா சிலினா அவர்கள், திருத்தந்தை மற்றும் திருப்பீட அதிகாரிகளுடன் தனிப்பட்ட சந்திப்புகளை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 நவம்பர் 2025, 12:52