தேடுதல்

இருபால் துறவு சபைகள் அமைப்பின் உயர் தலைவர்களுடன் திருத்தந்தை இருபால் துறவு சபைகள் அமைப்பின் உயர் தலைவர்களுடன் திருத்தந்தை   (ANSA)

'மெய்நிகர் இணைப்பு' மனித உறவுகளை மாற்ற முடியாது!

துறவு வாழ்வில் பாரம்பரிய ஒன்றிப்பு வடிவங்களான பொதுப்பேரவைக் கூட்டங்கள் மற்றும் நேரடிச் சந்திப்புகள் போன்றவற்றை முழுமையாக இணையவழிக்கு (online) மாற்றக்கூடாது : திருத்தந்தை பதினான்காம் லியோ

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

எண்மமுறை (டிஜிட்டல்) தொழில்நுட்பம், பணி மற்றும் இணைப்புக்கான முக்கிய வாய்ப்புகளை வழங்கினாலும், உண்மையான மனித உறவுகளை ஒருபோதும் மாற்றக்கூடாது என்று எச்சரிக்கை ஒன்றை விடுத்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

நவம்பர் 26, இப்புதனன்று, திருப்பீடத்தில், இருபால் துறவு சபைகள் அமைப்பின் உயர் தலைவர்கள் ஏறத்தாழ 160 பேருக்கு அவர்களின் பொது அமர்வை முன்னிட்டு உரையாற்றியபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை, தொழில்நுட்பம் தொலைதூரத்தில் உள்ள மக்களைச் சென்றடைய உதவும் என்றாலும் கூட, அது உறவுகள் எவ்வாறு உருவாகின்றன மற்றும் பராமரிக்கப்படுகின்றன என்பதையும் சிதைத்துவிடும் என்று தெரிவித்தார்.

கிறிஸ்தவச் சமூகத்திற்கு அவசியமான கூறுகளான உண்மையான இருத்தல், கவனத்துடன் செவிசாய்த்தல் மற்றும் ஆழமான பகிர்வுக்கு பதிலாக மெய்நிகர் தொடர்பை மாற்றுவதற்கான சோதனைக்கு எதிராக அவர்கள் எச்சரித்தார் திருத்தந்தை.

துறவு வாழ்வில் பாரம்பரிய ஒன்றிப்பு வடிவங்களான பொதுப்பேரவைக் கூட்டங்கள் மற்றும் நேரடிச் சந்திப்புகள் போன்றவற்றை முழுமையாக இணையவழிக்கு (online) மாற்றக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.

வசதி, செயல்திறன் அல்லது நிர்வாக மனப்பான்மைகள் மேய்ப்புப் பணியின் மீது ஆதிக்கம் செலுத்த அனுமதிப்பதற்கு எதிராகவும் எச்சரித்த திருத்தந்தை, இது ஆன்மிகப் பயணத்தை ஓர் அதிவேகமான ஓட்டமாக மாற்றி அதன் நோக்கத்தை இழக்கச் செய்யும் என்றும் சுட்டிக்காட்டினார்.

மேலும் அதற்கு பதிலாக, உடன்பிறந்த உறவில் ஒன்றித்துப் பயணிப்பதன் முக்கியத்துவத்தை அவர்களிடம் வலியுறுத்திக் கூறிய திருத்தந்தை, நாம் அனைவரும் உடன்பிறந்தோரே என்ற முன்னாள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் திருத்தூது மடலை நினைவுபடுத்தி நான் என்பதை விடுத்து நாம் என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

எல்லாவற்றிற்கும் மேலாக, மிக முக்கியமான உறவு கடவுளுடனானது, இது இறைவேண்டல் மூலம்  வளர்க்கப்படுகிறது என்று மொழிந்த திருத்தந்தை, மக்கள் படைப்பாளரை நம்பவும், பெறவும், ஒப்புக்கொள்ளவும் கற்றுக்கொள்ளும் இடம் அது என்றும் எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.

புதியதையும் பழையதையும் பொறுப்புடன் ஒருங்கிணைக்க, அதாவது, கடவுளுடனும் ஒருவருக்கொருவருடனும்  உண்மையான உறவுகளைப் பாதுகாக்கும் அதேவேளையில், எண்மமுறை  கருவிகளை அறிவார்ந்த விதத்தில் பயன்படுத்தவும் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 நவம்பர் 2025, 15:09