தேடுதல்

நற்செய்தியின் உண்மைக்கு உறுதியான சான்றுகளாவோம்!

“கத்தோலிக்கத் திருஅவைக்கும் கீழைத் திருஅவைகளுக்கும் இடையேயான ஒன்றிணைந்த அனைத்துலக இறையியல் உரையாடல் ஆணையம் அதன் பயனுள்ள பணியைத் தாமதமின்றி மீண்டும் தொடங்க முடியும் என்று நான் நம்புகிறேன்” : திருத்தந்தை பதினான்காம் லியோ

ஜான்சி ராணி - வத்திக்கான்

நவம்பர் 30, ஞாயிறன்று, காலை 09.30 மணிக்கு திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் இஸ்தான்புல்லின் அப்போஸ்தலிக்கப் பேராலயத்தில் அர்மீனிய முதுபெரும் தந்தை இரண்டாம் சஹாக் அவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின்போது வழங்கிய அருளுரை.

கிறிஸ்துவில் அன்பு நிறைந்த சகோதரரே! 

உங்களைச் சந்திக்க வருவது எனக்கு மிகப் பெரும் மகிழ்வை அளிக்கிறது, அதிலும் குறிப்பாக, மறைந்த பேராயர்கள் முதலாம் ஷெனொர்க், இரண்டாம் மெஸ்ரோப் எனது முன்னோர்களை வரவேற்ற அதே இடத்தில் நிற்பது நிறை மகிழ்ச்சியளிக்கிறது.

வரலாறு முழுவதும், குறிப்பாகப் பல வேளைகளில் துயரமான சூழ்நிலைகளுக்கு மத்தியில், அர்மீனிய மக்கள் அளித்த துணிவுமிகு கிறிஸ்தவ சான்றுக்காக கடவுளுக்கு நன்றி சொல்ல இந்த வருகை எனக்கு வாய்ப்பளித்துள்ளது. அர்மீனிய அப்போஸ்தல திருஅவைக்கும் கத்தோலிக்கத் திருஅவைக்கும் இடையே உள்ள நெருக்கமான உறவு மற்றும் உடன்பிறந்த ஒன்றிப்புக்காக நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

1970, மே மாதம், கத்தோலிக்கோஸ் முதலாம் வாஸ்கன் அவர்கள், திருத்தந்தை ஆறாம் பவுலுடன் இணைந்து, திருத்தந்தைக்கும் கீழை வழிபாட்டுமுறை திருஅவையின் தலைவருக்கும் இடையேயான முதல் கூட்டறிக்கையில் கையெழுத்திட்டார் என்பதையும் நான் நினைவில் கொள்கிறேன். இந்த அறிக்கை, தங்கள் விசுவாசிகளை கிறிஸ்துவுக்குள் சகோதரர் சகோதரிகளாகத் தங்களைக் கண்டறிந்து, ஒன்றிப்பை வளர்க்க அழைப்பு விடுத்தது. அதுமுதல்,கடவுளின் அருளால், நமது திரு அவைகளுக்கு  இடையேயான அன்பின் உரையாடல் செழித்தோங்கி வருகிறது.

முதல் கிறிஸ்தவ ஒன்றிப்புத் திருச்சங்கத்தின் 1700-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இந்தப் பயணம் நீசேயா  நம்பிக்கை அறிக்கையைக்  கொண்டாடும் வாய்ப்பை எனக்கு வழங்கியுள்ளது  உரோமைத் திருஅவைக்கும் பழமையான கீழைத் திருஅவைகளுக்கும் இடையே தொடக்கத்தில் இருந்த ஒன்றிப்பை மீண்டும் நிலைநாட்டுவதற்காக, நாம் இந்த நம்பிக்கை அறிக்கையிலிருந்து ஊக்கம் பெற வேண்டும். முழுமையான உறவை  மீண்டும் நிலைநாட்டுவதற்காக, நாம் தொடக்ககால திருஅவையின் அனுபவத்திலிருந்தும் ஊக்கம் பெற வேண்டும்.

இந்த உறவு, ஒரு திருஅவையை மற்றொன்று உள்ளடக்கிக் கொள்வதையோ அல்லது ஆதிக்கம் செலுத்துவதையோ குறிக்கவில்லை. மாறாக, அது தந்தையாகிய கடவுளின் மகிமைக்காகவும் மற்றும் கிறிஸ்துவின் திரு உடலைக் கட்டியெழுப்புவதற்காகவும் நமது திருஅவைகள் தூய ஆவியானவரிடமிருந்து பெற்ற வரங்களை பரிமாறிக் கொள்வதைக் குறிக்கிறது.

மேலும் கத்தோலிக்கத் திருஅவைக்கும் கீழைத் திருஅவைகளுக்கும் இடையேயான ஒன்றிணைந்த அனைத்துலக இறையியல் உரையாடல் ஆணையம் அதன் பயனுள்ள பணியைத் தாமதமின்றி மீண்டும் தொடங்க முடியும் என்று நான் நம்புகிறேன்.

இது, திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் அவர்கள், எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக' (யோவா 17:21) என்ற தனது திருமடலில் கூறியவாறு முழுமையான உறவிற்கான ஒன்றிப்பைத் தேடி அடைய உதவும் இந்தப் பயணத்தில், நாம் சான்றளிக்கும் ஒரு கூட்டமாக காணப்படுகின்றோம்.

உங்கள் அன்பான வரவேற்புக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான புனித நோக்கத்திற்காக எனது முழு அர்ப்பணிப்பை வழங்குவேன் என உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.

நற்செய்தியின் உண்மைக்கு இன்னும் உறுதியான சான்றுகளாகவும், கிறிஸ்துவின் ஒரே திருஅவையின் பணிக்கு சிறந்த ஊழியர்களாகவும் திகழ்ந்திட திறந்த இதயங்களுடன் கடவுளிடமிருந்து இந்தக் கொடையை பெற்றுக்கொள்வோமாக!

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 நவம்பர் 2025, 13:41