அனைத்துக் கிறிஸ்தவர்களிடையேயும் ஒன்றிப்பை மீட்டெடுக்க உறுதியேற்போம்!
ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்
நவம்பர் 29, சனிக்கிழமையன்று, மலை 03.30 மணிக்கு இஸ்தான்புல்லில் உள்ள புனித ஜார்ஜ் பேராலயத்தில் இடம்பெற்ற இறைபுகழ்ச்சி வழிபாட்டில் திருத்தந்தை பதினான்காம் லியோ வழங்கிய அருளுரை.
கிறிஸ்துவில் அன்பு நிறைந்த சகோதரர்களே!
இந்தக் கோவிலுக்குள் நான் நுழையும்போது திருத்தந்தையர் ஆறாம் பவுல், இரண்டாம் ஜான் பால், பதினாறாம் பெனடிக்ட், பிரான்சிஸ் ஆகியோரின் அடியொற்றி வந்திருக்கின்றேன் என்பதை உணர்வுபூர்வமாக உணர்கிறேன்.
முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயு அவர்கள் என்னுடைய அன்புக்குரிய முன்னோடிகளை தனிப்பட்ட முறையில் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றார்கள் என்பதையும், திரு அவையும் உலகமும் எதிர்கொள்ளும் பல முக்கிய சவால்கள் குறித்த பகிரப்பட்ட விசுவாசம் மற்றும் ஒரு பொதுவான பார்வை ஆகியவற்றின் அடிப்படையில் அவர்களுடன் ஓர் உண்மையான மற்றும் உடன் பிறந்த உறவை வளர்த்துக் கொண்டார்கள் என்பதையும் நான் அறிவேன். நம்முடைய இந்தச் சந்திப்பும் நம்முடைய உறவின் பிணைப்பை வலுப்படுத்த உதவும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
இறைவேண்டலிலும், விசுவாசத்திலும் ஒன்றித்திருக்கும் நம்முடைய சகோதரர் சகோதரிகளுடன் இணைந்து, முதல் நீசேயா திருச்சங்கத்தின் 1700-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடியபோது, நாம் ஆசிர்வாதத்தின் தருணங்களை அனுபவித்தோம்.
அந்த முக்கியமான நிகழ்வை நினைவு கூர்வதன் மூலமும், எல்லாவற்றிற்கும் மேலாக, தம்முடைய சீடர்கள் அனைவரும் ஒன்றாய் இருப்பார்களாக! என்ற இயேசுவின் இறைவேண்டலால் (யோவா 17:21) நாம் ஈர்க்கப்பட்டு, அனைத்து கிறிஸ்தவர்களிடையேயும் முழுமையான ஒன்றிப்பை மீட்டெடுக்க உறுதி ஏற்றுள்ளோம். இது கடவுளின் உதவியுடன் நாம் தொடர்ந்து மேற்கொள்ளும் பணியாகும்.
இந்த ஒன்றிப்புக்கான விருப்பத்தால் தூண்டப்பட்டுத்தான், கிறிஸ்தவ ஒன்றிப்புத் திருஅவையின் பாதுகாவலரான திருத்தூதர் அந்திரேயாவின் விழாவை நாம் இன்று கொண்டாடுகிறோம். இந்நாளில் இறைத்தந்தையை நோக்கி நாம் எழுப்பும் அனைத்து மன்றாட்டுகளுக்கும் அவர் செவிசாய்ப்பாராக!
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
