துருக்கி மற்றும் லெபனோன் திருத்தூதுப் பயணம்-ஒரு முன் தூது!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
அன்பர்களே, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், நவம்பர் 27, வியாழக்கிழமை முதல் டிசம்பர் 2, செவ்வாய்க்கிழமை வரை 6 நாள்களுக்கு துருக்கி மற்றும் லெபனோன் நாடுகளுக்கு தனது முதல் திருத்தூதுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். ஆகவே இவ்வேளையில் இவ்விரு நாடுகளின் வரலாற்று, அரசியல், சமூக, சமய சூழல் பற்றி அறிந்துகொள்வோம்.
முதலாவதாக துருக்கி – இது தென்கிழக்கு ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியாவைக் கடந்து செல்லும் ஒரு நாடு. இது கிரீஸ் மற்றும் பல்கேரியாவுடன் வடமேற்கில் எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது; வடக்கே கருங்கடல்; வடகிழக்கு ஜார்ஜியா; கிழக்கில் ஆர்மீனியா, அஜர்பைஜான் மற்றும் ஈரான்; தென்கிழக்கு ஈராக்; சிரியாவும் தெற்கே மத்தியதரைக் கடலும்; மற்றும் மேற்கில் ஈஜியன் கடல். இங்கே மிகப்பெரிய நகரமான இஸ்தான்புல் நிதி மையமாகவும், அங்காரா தலைநகராகவும் உள்ளன. துருக்கியர்கள் நாட்டின் பெரும்பான்மையான மக்கள்தொகையை உருவாக்குகின்றனர், மேலும் இங்கே குர்துகள் மிகப்பெரிய சிறுபான்மையினராக உள்ளனர்.
இன்றைய துருக்கியின் பெரும் பகுதியை உள்ளடக்கிய, அனத்தோலியா என்றும் அழைக்கப்பட்ட, அனத்தோலியக் குடாநாடு தொல்பழங் காலத்திலிருந்தே தொடர்ச்சியாக மக்கள் வாழ்ந்த பகுதிகளுள் ஒன்று. இங்குள்ள புதிய கற்காலக் குடியேற்றங்களான சட்டல்ஹோயுக், சயோனு, நெவாலி கோரி, ஹசிலர், கோபெக்லி தெபே, மேர்சின் என்பன உலகின் மிகப் பழைய குடியேற்றங்களுள் அடங்குவன. திராய் குடியேற்றம் புதிய கற்காலத்தில் தொடங்கி இரும்புக் காலம் வரை தொடர்ந்துள்ளது. பதிவு செய்யப்பட்ட வரலாற்றுக் காலத்தில், அனத்தோலியர்கள் இந்திய-ஐரோப்பிய, செமிட்டிய, கார்ட்வெலிய மொழிகளையும், எக்குழுவைச் சேர்ந்தவை என்று தெரியாத வேறு பல மொழிகளையும் பேசி வந்துள்ளனர். அனத்தோலியாவில் இருந்தே இந்திய-ஐரோப்பிய மொழிகள் உலகம் முழுதும் பரவியதாகச் சில அறிஞர்கள் கருதுகிறார்கள்.
இப்பகுதியில் உருவான மிகப் பழைய பேரரசு ஹிட்டைட் பேரரசு ஆகும். இது கி.மு. 18-ஆம் நூற்றாண்டு முதல் 13-ஆம் நூற்றாண்டு வரை நிலைத்திருந்தது. பின்னர் இந்திய-ஐரோப்பிய மொழி பேசிய பிரிஜியர்கள் உயர்நிலை அடைந்தனர். இவர்களது அரசு கிமு ஏழாம் நூற்றாண்டளவில் சிமேரியர்களால் அழிக்கப்பட்டது. பிரிஜியர்களுக்குப் பின்னர் பலம் வாய்ந்த அரசுகளை நிறுவியவர்கள் லிடியர்களும், காரியர்களும், லிசியர்களும் ஆவர். லிடியர்களும், லிசியர்களும் பேசிய மொழிகள் அடிப்படையில் இந்திய-ஐரோப்பிய மொழிகளே ஆயினும், ஹிட்டைட் மற்றும் ஹெலெனியக் காலங்களுக்கு முன்னரே இம்மொழிகள் பெருமளவு பிற மொழிக் கூறுகளைப் பெற்றுக்கொண்டன.
கிமு 1200 அளவில் தொடங்கி அனத்தோலியாவின் மேற்குக் கரையோரப் பகுதிகளில் எயோலியக் கிரேக்கர்களும், அயோனியக் கிரேக்கர்களும் குடியேற்றங்களை அமைத்தனர். கி.மு. ஆறு மற்றும் ஐந்தாம் நூற்றாண்டுகளில் இப்பகுதி முழுவதையும் பாரசீக ஆக்கிமெனிட் பேரரசு கைப்பற்றி வைத்திருந்தது. பின்னர் கிமு 334-இல் அலெக்சாண்டரிடம் வீழ்ச்சியடைந்தது. இதன் பின்னர் அனத்தோலியா பல சிறிய அரசுகளாகப் பிரிவடைந்தது. இவை அனைத்துமே கி.மு. முதலாம் நூற்றாண்டின் நடுப்பகுதியளவில் உரோமப் பேரரசிடம் வீழ்ச்சி கண்டன. கிபி 324-இல் இப்பகுதியிலிருந்த பைசன்டியத்தை "புதிய ரோம்" என்னும் பெயருடன் உரோமப் பேரரசின் தலைநகரம் ஆக்கினான். இது பின்னர் கான்ஸ்டண்டினோப்பிள் எனப்பட்டது. இதுவே இன்றைய இஸ்தான்புல் ஆகும். மேற்கத்திய ரோமப் பேரரசு வீழ்ச்சியடைந்த பின்னர், இது பைசன்டியப் பேரரசின் (கிழக்கத்திய ரோமப் பேரரசு) தலைநகரம் ஆனது.
அரசியல்
முதலாம் உலகப் போரில் தோல்வியைத் தழுவிய, அன்றைய ஒட்டோமான் அரசை ஆண்ட அரசன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, அரசியல் உள்நோக்கம் கொண்ட கெமல் அட்டடுர்க் என்ற இராணுவ அதிகாரி துருக்கியின் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு அது நவீனமடைய தொடங்கியது. மேற்கு ஐரோப்பிய பாணியில் கல்வி, ஒரு கலாச்சார புரட்சியை உருவாக்கியது. பழமைவாதத்தை ஆதரித்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். மதச்சார்பற்ற கொள்கை வலியுறுத்தப்பட்டது. இவ்வாறு அட்டடுர்க் அரசு ஒருபுறம் முற்போக்கானதாக இருந்தாலும், மறுபுறம் பாசிச மயமாகி சிறுபான்மை இனங்களை அடக்கி, துருக்கி மொழி திணிப்பு இடம்பெற்றது. ஆர்மேனிய மொழி பேசும் மக்கள் இந்தப் பேரினவாதத்திற்கு அதிக விலை கொடுத்தனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டு, மிகுதிபேர் தமது குடியிருப்புகளை விட்டு விரட்டப்பட்டனர்.
அந்த இனப்படுகொலைக்குப் பிறகு எஞ்சியிருந்தோரும், பிற இனத்தவரும், துருக்கி மொழி மட்டுமே பேச வேண்டுமென கட்டாயப்படுத்தப்பட்டனர். அவ்வாறே தென் கிழக்கு மலைப்பிரதேசங்களில் வாழும் குர்து மொழி பேசும் மக்களின் இன அடையாளமும் புறக்கணிக்கப்பட்டு, அவர்கள் "மலைநாட்டு துருக்கியர்" என்று அழைக்கப்பட்டனர். இஸ்லாம் என்ற மதம் மட்டுமே இவ்விரு இன மக்களுக்கும் பொதுவானது. மத்திய ஆசியாவில் இருந்து வந்து குடியேறிய துருக்கி மொழி பேசுவோரும், இந்தோ-ஈரானிய மொழி பேசும் பூர்வ குடிகளான குர்த்தியரும், கலாச்சார ரீதியாக வேறுபட்டவர்கள். இத்தகையக் கலாச்சாரப் பாரம்பரியம் கொண்ட மக்கள், தமக்கென பாடசாலை இன்றி துருக்கி மொழியில் கல்வி கற்க வேண்டிய நிலை. எந்தப் பெற்றோரும் தமது பிள்ளைகளுக்கு குர்து மொழிப் பெயர் இட்டால் சிறை செல்ல வேண்டும். குர்து மொழியை வீதியில் பேசுவது கூட தடை செய்யப்பட்டது. அந்த இன மக்களுக்கே உரிய "நெவ்ரோஸ்" எனப்படும் புத்தாண்டு கொண்டாடுவது கூட அண்மைக்காலமாகத் தடை செய்யப்பட்டிருந்தது.
துருக்கி-குர்து கலப்பினப் பெற்றோருக்குப் பிறந்த அப்துல்லா ஒச்சலான், குர்திய தொழிலாளர் கட்சி (pkk) என்ற ஆயுதப்போராட்ட வழியில் நம்பிக்கை கொண்ட அமைப்பை நிறுவிய பிறகு, அந்த மாநிலத்தில் வன்முறைக் கலாச்சாரம் பரவியது. துருக்கியின் காவல்துறை, இராணுவத்தைக் குறிவைத்து கெரில்லாக்கள் தாக்கத் தொடங்க, பதிலடியாக இராணுவம் அப்பாவி பொதுமக்களைக் கொன்று, அவர்களின் குடியிருப்புக்களை அழித்து, பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கி, சொத்துகளை நாசமாக்கி, அடக்குமுறையை ஏவி விட்டது. இதனால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போராளிகளாக மாற, தனது போராட்டம் முன்னேறி, அது ஒரு மக்கள் புரட்சியாக மாறும் என்று ஒச்சலான் கணக்குப் போட, தள நிலைமை எதிர்பாராத அளவு மோசமடைந்தது.
துருக்கி இராணுவம் பெருமளவு குர்து மக்களை, அவர்களது கிராமங்களில் இருந்து பலவந்தமாக வெளியேற்றி, ஆயிரம் மைல்களுக்கு அப்பால், துருக்கியின் மேற்கு பகுதியில் குடி அமர்த்தியது. நேட்டோ அமைப்பில் உறுப்பினராக இருந்ததால், அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளிடம் இருந்து இராணுவ ஆலோசனைகள், ஆயுத தளபாடங்கள் ஆகியனவற்றை பெற்றுக் கொண்டது. (நன்றி: தமிழ் விக்கிபீடியா)
அதிபர் தய்யீப் எர்டோகன்
அதிக பணவீக்க விகிதம் மற்றும் பூகம்பத்தால், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி இருந்ததை தொடர்ந்து, துருக்கி நாடு, பெரும் இன்னலில் சிக்கி தவித்து வரும் நிலையில் அங்கு இடம்பெற்ற மறுதேர்தலில், அதிபர் தய்யீப் எர்டோகன் மீண்டும் வெற்றி பெற்றார். அவரின் பதவிக்காலம், மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்டு உள்ள நிகழ்வு, அவரது வலிமையை, துருக்கியில் மட்டுமல்லாது, அனைத்துலக அளவிலும் அதிகரிக்கச் செய்து உள்ளது. நேட்டோ அமைப்பில், துருக்கி முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், எர்டோகனின் இந்த வெற்றி, அங்காரா மட்டுமல்லாது, ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளிடையேயும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது
துருக்கியில் கிறிஸ்தவம்
துருக்கியின் பரப்பளவு 7,74,815 கிமீ² இதன் மக்கள் தொகை 8.77 crore. இங்கு 33,000 கத்தோலிக்கர்கள் உள்ளனர். 7 மறைமாவட்டங்களும், 40 பங்குத்தளங்களும் 18 மேய்ப்புப்பணி மையங்களும் உள்ளன. 10 ஆயர்களும், 18 மறைமாவட்ட அருள்பணியாளர்களும் 58 துறவு சபை அருள்பணியாளர்களும், 58 இறுதி அர்ப்பணம் வழங்கிய அருள்சகோதரிகளும் மற்றும் 56 மறைக்கல்வி ஆசிரியர்களும் உள்ளனர்.
திருத்தந்தையின் திருத்தூதுப் பயணம்
"ஒரே ஆண்டவர், ஒரே நம்பிக்கை, ஒரே திருமுழுக்கு" (எபே 4:5) என்ற விருதுவாக்குடன் நவம்பர் 27 முதல் 30 நண்பகல் வரை துருக்கியில் திருத்தந்தை திருத்தூதுப் பயணத்தை மேற்கொள்கிறார்
02 லெபனோன்
லெபனோன், பனிக் கண்ணிமலைகள் (“லபன்” அரமேயத்தில்) என்ற பெயரில் அழைக்கப்படுகிறது, இந்நாட்டின் பெயர் செமித்திய மொழியில் வெள்ளை என்னும் பொருள்படும் வேராகிய ல்-வ்-ன் என்பதில் இருந்து லுப்னான் அல்லது லெப்னான் என்று பெறப்பட்டது. வெள்ளை என்பது வெண்பனி மூடிய லெபனான் மலையைக் குறிப்பதாகும்..!
பழங்கால போனீசியர்கள் வாழ்ந்த வீட்டு நிலம் மற்றும் நீண்டகாலமாக நாகரிகங்கள் மற்றும் மதங்களின் சந்திப்புக் கண்ணோட்டமாக அமைந்துள்ளது, லெபனான், அதிகாரபூர்வமாக 18 மத சமூகங்களை அங்கீகரிக்கிறது.
16-ஆம் நூற்றாண்டில் ஒட்டுமான் பேரரசால் சேர்க்கப்பட்ட பின்னர், முதலாவது உலகப்போருக்குப் பின் பிரஞ்சு மண்டேட் கீழ் வந்தது, மேலும் 1943-இல் சுதந்திரத்தைப் பெற்றது. மண்டேட் காலத்தில், மதப் பகிர்வுகளின் அடிப்படையில் அரசியல் அதிகாரத்தை ஒதுக்கிவைப்பதற்கான லெபனோனின் சமய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டது, இது 1943 தேசிய ஒப்பந்தத்தில் முறையாக ஒப்பந்தப்படுத்தப்பட்டது: அரசுத்தலைவர் மரோனைட் கிறிஸ்துவர், பிரதமர் சன்னி முஸ்லிம், பாராளுமன்ற பேச்சாளர் ஷியா முஸ்லிம்.
லெபனோன் நிலைத்தன்மை மற்றும் நெருக்கடிகளின் மாறும் காலங்களை அனுபவித்தது, இது அராப்-இஸ்ரேல் போர்போல உள்நாட்டுச் சண்டைகள் மற்றும் பாலஸ்தீன புலம்பெயர்ந்தோர் வரவால் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியது, இதனால் பி.எல்.ஓ.வுடன் மோதல்கள் ஏற்பட்டன. இந்த மோதல்கள் லெபனோனிய உள்நாட்டுப் போரின் (1975–1990) வருகைக்குக் காரணமானது,
1989-இல் நிகழ்ந்த தாஃஃப் ஒப்பந்தங்கள் போருக்கு முடிவை அளித்தது, கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு இடையிலான அரசியல் அதிகாரத்தை சமப்படுத்தியது, மேலும் சிரியக் கண்காணிப்பை ஏற்படுத்தியது, இது 2005-இல் சீடர் புரட்சியால் முடிவடைந்தது. எனினும், சமய பிரிவுகள், ஹெஸ்போலாவின் ஆயுதக் கருத்து, தீராத பாலஸ்தீன பிரச்சனைகள் மற்றும் ஊழல் நிலை லெபனோனை இன்னும் பதற்றமாக்கி வருகிறது.
உண்மையில், லெபனானில் எந்தவொரு கட்சியும் அல்லது மதப் பிரிவும் ஒட்டுமொத்த அதிகாரத்தையும் கொண்டிருக்கவில்லை. அரசாங்கங்கள் கூட்டணிகளால் உருவாக்கப்படுகின்றன. மேலும், அனைத்து பெரிய முடிவுகளும் ஒருமித்த கருத்துடன் எடுக்கப்பட வேண்டும். இதனால் அங்கு அடிக்கடி அரசியல் முடக்கம் ஏற்படுகிறது.
லெபனோனில் கிறிஸ்தவம்
லெபனோனின் பரப்பளவு 10,400 கிமீ² இதன் மக்கள் தொகை 58.5 இலட்சம். இங்கு 13.4 இலட்சம் கத்தோலிக்கர்கள் உள்ளனர். 24 மறைமாவட்டங்களும், 1,116 பங்குத்தளங்களும் 47 மேய்ப்புப்பணி மையங்களும் உள்ளன. 49 ஆயர்களும், 917 மறைமாவட்ட அருள்பணியாளர்களும் 647 துறவு சபை அருள்பணியாளர்களும், 1,698 இறுதி அர்ப்பணம் வழங்கிய அருள்சகோதரிளும், 402 மறைக்கல்வி ஆசிரியர்களும் உள்ளனர்.
திருத்தந்தையின் திருத்தூதுப் பயணம்
"அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்" (மத் 5:9) என்ற விருதுவாக்குடன் நவம்பர் 30 மாலை முதல் டிசம்பர் 2 நண்பகல் வரை லெபனோன் நாட்டிற்குப் பயணம் மேற்கொள்கிறார் திருத்தந்தை
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
