திருத்தந்தையுடன் பாலஸ்தீன அதிபர் சந்திப்பு
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
நவம்பர் 6, இவ்வியாழனன்று திருத்தந்தை லியோ அவர்கள் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் அவர்களை திருப்பீடத்தில் சந்தித்து மகிழ்ந்தார் என்று கூறியுள்ளது திருப்பீடச் செய்தித் தொடர்பகம்.
இச்சந்திப்பின்போது காசாவில் மனிதாபிமான உதவிக்கான அவசரத் தேவை குறித்து இருவரும் விவாதித்தனர் என்றும், மேலும் இரு நாடுகள் தீர்வு மூலம் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதன் முக்கியத்துவத்தை திருத்தந்தை வலியுறுத்தினார் என்றும் அதன் அறிக்கைத் தெரிவிக்கின்றது.
அதற்கு முந்தைய நாள், பாலஸ்தீனிய அரசுத்தலைவர் அப்பாஸ், இறைபதமடைந்த முன்னாள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை கௌரவிக்கும் விதமாக புனித மேரி மேஜர் பசிலிக்காவிற்குச் சென்றார் என்றும் பாலஸ்தீனத்திற்கு பிரான்சிஸ் அளித்த ஆதரவை அங்கீகரிக்கும் விதமாக அவரது கல்லறையில் பூங்கொத்து ஒன்றை வைத்து மரியாதை செலுத்தினார் என்றும் அதன் அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.
கடந்த 2015-ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட திருப்பீடத்திற்கும் பாலஸ்தீன அரசுக்கும் இடையிலான விரிவான ஒப்பந்தத்தின் 10-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக திருப்பீடச் செய்தித் தொடர்பகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த ஒப்பந்தம் பாலஸ்தீனிய சுயநிர்ணய உரிமை, இரு அரசுத் தீர்வு மற்றும் யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எருசலேமின் பகிரப்பட்ட முக்கியத்துவத்திற்கான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியது என்றும் அச்செய்திக் குறிப்பு மேலும் தெரிவிக்கிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
