தேடுதல்

திருத்தந்தை திருத்தந்தை   (ANSA)

மனித மாண்பைப் பாதுகாக்க துறவற குழுமங்களுக்குத் திருத்தந்தை அழைப்பு!

"அர்ப்பண வாழ்விற்கு அழைக்கப்பட்ட இருபால் துறவியரும் மற்றவர்களை மரியாதையுடனும் இளகிய மனதுடனும் அணுகி, அவர்களின் துயரங்களுக்குச் செவிசாய்த்து, உண்மையான அக்கறையை வழங்க வேண்டும்" : திருத்தந்தை பதினான்காம் லியோ

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கடவுள் ஒவ்வொரு மனிதருக்கும் மாண்பை வழங்குகிறார், மனித மாண்பு என்பது ஒரு கொடை என்றும், அதை தகுதியினாலோ அல்லது கட்டாயத்தினாலோ பெற முடியாது என்றும் கூறினார் திருத்தந்தை பதினான்காம்  லியோ.

பாலியல் முறைகேடுகளிலிருந்து சிறாரைப் பாதுகாப்பதற்கான பாப்பிறை ஆணையத்தால் நடத்தப்பட்ட கலந்தாய்வுக் கூட்டம் ஒன்றின் பங்கேற்பார்களுக்கு வழங்கிய உரையில் இவ்வாறு கூறிய திருத்தந்தை, கடவுளின் நன்மைத்தனத்தின் செயல்பாடுகளை எந்த வலியும் அணைக்க முடியாது என்றும் உறுதிப்படக் கூறினார்.

ஒவ்வொரு நபரின், குறிப்பாக பாலியல் முறைகேடுகளால் பாதிக்கப்படக்கூடிய சிறார்களின் மாண்பை  மதிக்கும் சமூகங்களை கட்டியெழுப்ப அர்ப்பண வாழ்விற்கு அழைக்கப்பட்ட துறவியருக்கு அழைப்பு விடுத்தார் திருத்தந்தை.

மனித மாண்பு என்பது கடவுளிடமிருந்து கிடைத்த கொடை, அது சம்பாதிக்கப்பட்டதல்ல என்றும், துன்பங்களைப் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு மனித முகத்திலும் அது பிரதிபலிக்கிறது என்றும் அவர்களிடம் எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.

அர்ப்பண வாழ்விற்கு அழைக்கப்பட்ட இருபால் துறவியரும் மற்றவர்களை மரியாதையுடனும் இளகிய மனதுடனும் அணுகி, அவர்களின் துயரங்களுக்குச் செவிசாய்த்து, உண்மையான அக்கறையை வழங்க வேண்டும் என்று அவர்களுக்கு அழைப்பு விடுத்தார் திருத்தந்தை.

மேலும் அவர்களின் கற்பு, ஏழ்மை, மற்றும் கீழ்ப்படிதல் வார்த்தைப்பாடுகள், தன்னலமின்றி மற்றவர்களுக்கு சேவை செய்ய உதவுகின்றன, உண்மையான அன்பை வளர்க்கின்றன என்பதை அவர்களுக்கு நினைவூட்டினார் திருத்தந்தை.

பாலியல் முறைகேடுகளைத் தடுப்பதிலும், நம்பிக்கையும் உரையாடலும் செழித்து வளரும் சமூகங்களை உருவாக்குவதிலும் கவனம் செலுத்துமாறு பங்கேற்பாளர்களிடம் வலியுறுத்திய திருத்தந்தை, திருஅவையில்  பாதுகாப்பு கலாச்சாரத்தை ஊக்குவிப்பதில் ஆணையத்தின் பணிக்குத் தனது ஆதரவைத் தெரிவித்துக்கொண்டு தனது உரையை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 நவம்பர் 2025, 13:28