சகோதரத்துவத்தை ஏற்பதே தீவிரவாத்திற்கு எதிரான அருமருந்து!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
ஒருவரையொருவர் சகோதரர் சகோதரிகளாக அங்கீகரிப்பது அனைத்துத் தீவிரவாதத்திற்கும் எதிரான மருந்தாகும் என்று கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
நவம்பர் 20, இவ்வியாழனன்று வத்திக்கான் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள "நற்செய்தியின் வலிமை: 10 வார்த்தைகளில் கிறிஸ்தவ நம்பிக்கை" என்ற தனது புதிய நூல் ஒன்றில் இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை.
கிறிஸ்தவ வாழ்க்கையின் மூன்று மைய வார்த்தைகளான கிறிஸ்து, ஒன்றிப்பு மற்றும் அமைதியைப் பற்றி இப்புதிய நூலில் தனது சிந்தனைகளை வழங்கியுள்ளார் திருத்தந்தை.
விசுவாசம் என்பது நமது முயற்சியால் அல்ல, மாறாக கிறிஸ்துவைச் சந்திப்பதன் வழியாகவும் இயேசுவில் நமக்கு நெருக்கமான கடவுளை வரவேற்பதன் வழியாகவும் தொடங்குகிறது என்பதை வலியுறுத்திக் கூறியுள்ள திருத்தந்தை, இந்த நட்பின் மூலம், நாம் கடவுளின் சொந்த வாழ்க்கையில் பங்கு கொள்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கிறிஸ்து உறவை ஏற்படுத்தும் ஒரு பாலமாக இருப்பதால், திருஅவை என்பது பல்வேறு மக்கள் ஒன்றிப்புடன் வாழும் ஒரு சமூகமாக இருக்க அழைக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார் திருத்தந்தை.
மேலும் புனித அகுஸ்தினார் வாழ்க்கையை எடுத்துக்காட்டியுள்ள திருத்தந்தை, அனைத்து இறையழைத்தல்களும் வாழ்க்கை நிலைகளும் ஒரே இணக்கமான "தோட்டத்திற்கு" (விண்ணகத்துக்கு) சொந்தமானது என்று கூறியுள்ள அதேவேளை, மோதல்களால் காயமடைந்த உலகில் கிறிஸ்தவர்கள் உடன்பிறந்த உறவிற்குத் சான்று பகர்ந்திட வேண்டும் என்று விண்ணப்பித்துள்ளார்.
அமைதி என்பது வன்முறையால் திணிக்கப்படுவதில்லை, மாறாக, கிறிஸ்துவிடமிருந்தும் உறவின் ஒன்றிப்பிலிருந்தும், அன்பு, மன்னிப்பு மற்றும் அகிம்சையிலிருந்தும் உண்மையான அமைதி பிறக்கிறது என்று சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை.
சமத்துவமின்மையை ஆழமாக்கும் மற்றும் வெறுப்பை வளர்க்கும் அநீதிகளைக் கண்டித்துள்ள திருத்தந்தை, ஒருவரையொருவர் சகோதரர் சகோதரிகளாக அங்கீகரிப்பதுதான் தீவிரவாதத்திற்கு எதிரான உண்மையான மாற்று மருந்தாக அமைய முடியும் என்றும் கூறியுள்ளார்.
இறுதியாக, Christian de Chergé என்பவரின் இறைவேண்டலை கோடிட்டுக்காட்டி, நாம்தான் காலங்கள் என்றும், நமது விருப்பத் தேர்வுகள் (choices) உலகை வடிவமைக்கின்றன என்றும் கூறி தனது சிந்தனைகளை நிறைவு செய்துள்ளார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
