திருத்தந்தையின் நவம்பர் மாத இறைவேண்டல் கருத்து!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
தற்கொலை எண்ணங்களுடன் போராடுபவர்கள் தங்கள் சமூகத்தில் அவர்களுக்குத் தேவையான ஆதரவு, கவனிப்பு மற்றும் அன்பைக் கண்டறிந்து, வாழ்க்கையின் அழகிற்குத் திறந்த மனம் கொண்டிருக்க வேண்டும் என்று நாம் இறைவேண்டல் செய்வோம் என்று மொழிந்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
நவம்பர் 4, செவ்வாயன்று, இம்மாதத்திற்கான தனது இறைவேண்டல் கருத்தை காணொளிக்காட்சியாக வெளியிட்டுள்ள திருத்தந்தை அதில் இவ்வாறு கூறியுள்ளார்.
ஆண்டவராகிய இயேசுவே, சோர்ந்துபோனவர்களையும் பெரும்சுமை சுமந்தவர்களையும் உம்மிடத்தில் வந்து உம்முடைய இதயத்தில் இளைப்பாற அழைக்கிறீர் என்றும், இருளிலும் விரக்தியிலும் வாழும் அனைத்து மக்களுக்காகவும், குறிப்பாக தற்கொலை எண்ணங்களுடன் போராடுபவர்களுக்காகவும், இந்த மாதத்தில் உம்மை வேண்டுகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
அவர்களை வரவேற்கும், கேட்கும், அவர்களுடன் செல்லும் ஒரு சமூகத்தை அவர்கள் எப்போதும் கண்டுபிடிக்கட்டும் என்றும், நம் அனைவருக்கும் ஆறுதலையும் ஆதரவையும் வழங்கக்கூடிய, கவனமுள்ள மற்றும் இரக்கமுள்ள இதயத்தையும், தேவையான தொழில்முறை உதவியையும் வழங்குவாராக என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மரியாதையுடனும் இளகிய மனமுடனும் நெருக்கமாக இருப்பது எப்படி என்பதை நாம் அறிந்துகொள்வோம், காயங்களை குணப்படுத்தவும், பிணைப்புகளை உருவாக்கவும், எல்லைகளைத் திறக்கவும் உதவுவோம் என்று உரைத்துள்ளார் திருத்தந்தை,
வாழ்க்கை ஒரு கொடை என்பதையும், வலி மற்றும் துன்பத்தின் மத்தியிலும் கூட, அழகும் அர்த்தமும் இன்னும் இருக்கிறது என்பதையும் நாம் ஒன்றாக மீண்டும் கண்டுபிடிப்போம் என்றும், ஆண்டவரே, உம்மைப் பின்பற்றுபவர்கள் நம்பிக்கையின்றி சோகத்திற்கு ஆளாகிறார்கள் என்பதை நாங்கள் நன்கு அறிவோம் என்றும் செபித்துள்ளார்.
ஆண்டவரே, நீர் எங்களுக்குக் கொடுக்கும் வாழ்க்கையில் எங்கள் நம்பிக்கையைப் புதுப்பிக்க, கையைப் பிடித்து எங்களை வழிநடத்தும் இறைத்தந்தையின் எல்லையற்ற அன்பை நாங்கள் அடையாளம் கண்டு அனைவருக்கும் அறிவிக்கும்படி, உம்முடைய அன்பை எப்போதும் எங்களுக்கு உணர்த்தும்படி உம்மிடம் வேண்டுகிறோம் என்றும் இறைவேண்டல் செய்து இம்மதத்திற்கான தனது இறைவேண்டல் கருத்தை நிறைவு செய்துள்ளார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
