எதிநோக்கின் திருப்பயணிகளாகத் திகழ திருப்பீடத் தூதரக அதிகாரிகளுக்கு அழைப்பு!
ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்
நவம்பர் 17, இத்திங்களன்று, உலகம் முழுவதும் பணியாற்றும் திருப்பீடத் தூதரக அதிகாரிகளுடன் திருப்பீடத்தில் நிகழ்ந்த சந்திப்பொன்றில், அவர்களை எதிர்நோக்கின் திருப்பயணிகளாக இருக்க வேண்டும் என்றும் . குறிப்பாக, நீதி மற்றும் அமைதி இன்றித் தவிக்கும் இடங்களில் மக்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
சவாலான சூழல்களில் பணியாற்றும்போது, தங்கள் விசுவாசத்தை வலுப்படுத்தவும் மற்றும் தங்கள் பணியைப் புதுப்பிக்கவும் அழைப்பு விடுத்ததோடு, திரு அவைக்கு அர்ப்பண உணர்வுடன் அவர்கள் ஆற்றிவரும் பணியையும் பாராட்டினார் திருத்தந்தை.
இறைவேண்டல்,, அருளடையாளங்கள் மற்றும் குழும வாழ்வு மூலம் தங்கள் அருள்பணித்துவ வாழ்வின் அடையாளத்தைத் தக்கவைத்துக் கொள்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அதேவேளை, தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளும் சோதனையை எதிர்த்து நிற்கவும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
மேலும் கிறிஸ்துவின்மீது தாகம் கொண்ட சீடர்களாக தூதரக அதிகாரிகள் இருக்க வேண்டும் என்றும், தங்கள் பணிவாழ்வில் நற்செய்தியை மையப்படுத்தி வாழும் ஒரு பாணியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்ட திருத்தந்தை, தங்கள் இல்லங்களில் ஆன்மிக மையமாகத் திகழும் சிற்றாலயத்தை நினைவுகூர்ந்து, தங்கள் கவலைகளைப் போக்கவும், தங்கள் பணிகளுக்கு வழிகாட்டவும் அதன் அருளைச் சார்ந்து இருக்குமாறு அவர்களை ஊக்குவித்தார்.
இறுதியாக, உலகெங்கிலும் அதிகம் தேவைப்படும் இடங்களுக்கு அமைதி, நீதி மற்றும் நற்செய்தியைக் கொண்டு செல்லும் தங்கள் பணியில் தூதரக அதிகாரிகள் உறுதியுடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி தனது உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
