தேடுதல்

திருத்தந்தையுடன் பங்கேற்பாளர்கள் திருத்தந்தையுடன் பங்கேற்பாளர்கள்   (ANSA)

செயற்கை நுண்ணறிவு சிறார்களின் மாண்பைப் பாதுகாக்க வேண்டும்!

பெற்றோர்களும் கல்வியாளர்களும் இந்த இயக்கவியல் தொழிநுட்பம் குறித்து விழிப்புடன் இருப்பதும், தொழில்நுட்பத்துடனான இளைஞர்களின் தொடர்புகளைக் கண்காணித்து வழிநடத்துவதற்கான கருவிகளை உருவாக்குவதும் அவசியம் : திருத்தந்தை பதினான்காம் லியோ

செல்வாஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

"செயற்கை நுண்ணறிவு யுகத்தில் சிறார்களின் மாண்பைப் பாதுகாக்கும் கொள்கைகளை வடிவமைத்து செயல்படுத்த வேண்டிய பொறுப்பு நாடுகளின் அரசுகளுக்கும், பன்னாட்டு அமைப்புகளுக்கும் உள்ளது" என்று கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

"செயற்கை நுண்ணறிவு யுகத்தில் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரின் மாண்பு" என்ற தலைப்பில் இடம்பெறும் மாநாடு ஒன்றின் பங்கேற்பாளர்களுக்கு வழங்கியுள்ள உரையொன்றில் இவ்வாறு மொழிந்தார் திருத்தந்தை

செயற்கை நுண்ணறிவு, கல்வி, பொழுதுபோக்கு மற்றும் சிறார்களின் பாதுகாப்பு உள்ளிட்ட நமது அன்றாட வாழ்க்கையின் பல அம்சங்களை மாற்றியமைத்து வருகிறது என்று குறிப்பிட்ட திருத்தந்தை, இதன் பயன்பாடு  சிறார்களின் மாண்பு மற்றும் நல்வாழ்வைப் பாதுகாப்பது தொடர்பான முக்கியமான நெறிமுறை கேள்விகளை எழுப்புகிறது என்று தெரிவித்தார்.

குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் குறிப்பாக அவர்களின் முடிவுகள் மற்றும் விருப்பங்களை பாதிக்கக்கூடிய செயற்கை நுண்ணறிவு வழிமுறைகள் மூலம் தவறாகப் பயன்படுத்தப்படும் நிலைக்கு ஆளாக நேரிடும் என்றும் எச்சரித்தார்.

பெற்றோர்களும் கல்வியாளர்களும் இந்த இயக்கவியல் தொழிநுட்பம் குறித்து விழிப்புடன் இருப்பதும், தொழில்நுட்பத்துடனான இளைஞர்களின் தொடர்புகளைக் கண்காணித்து வழிநடத்துவதற்கான கருவிகளை உருவாக்குவதும் அவசியம் என்றும் அவர்களுக்கு எடுத்துக்காட்டினார்.

"செயற்கை நுண்ணறிவு யுகத்தில் சிறார்களின் மாண்பைப் பாதுகாக்கும் கொள்கைகளை வடிவமைத்து செயல்படுத்த வேண்டிய பொறுப்பு நாடுகளின் அரசுகளுக்கும், பன்னாட்டு அமைப்புகளுக்கும் உள்ளது" என்று   சுட்டிக்காட்டிய திருத்தந்தை, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களால் ஏற்படும் புதிய சவால்களை எதிர்கொள்ள தற்போதுள்ள தரவு பாதுகாப்பு சட்டங்களைப் புதுப்பிப்பது மற்றும் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி மற்றும் பயன்பாட்டிற்கான நெறிமுறை தரங்களை மேம்படுத்துவது இதில் அடங்கும் என்றும் குறிப்பிட்டார்.

இருப்பினும், சிறார்களின் மாண்பைப் பாதுகாப்பதை கொள்கைகளுக்குள் மட்டும் அடக்கிவிட முடியாது; அதற்கு எண்மமுறை (டிஜிட்டல்) கல்வியும் தேவைப்படுகிறது என்று உரைத்த திருத்தந்தை, இத்தாலியில் உள்ள மூன்று முக்கிய கத்தோலிக்க அமைப்புகளால்  ஊக்குவிக்கப்பட்ட ஒரு பாதுகாப்புத் திட்டம் குறித்து முன்னாள் திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிட்டது போன்று, பெரியவர்கள் "கல்வி கைவினைஞர்கள்" என்ற தங்கள் பணியை மீண்டும் கண்டுபிடித்து அதற்கு உண்மையாக இருக்க பாடுபட வேண்டும் என்றும் கேட்டுகொண்டார்.

நெறிமுறை வழிகாட்டுதல்களை வரைந்து அமல்படுத்துவது உண்மையில் முக்கியம், என்றாலும் கூட அது மட்டுமே போதாது என்று குறிப்பிட்ட திருத்தந்தை, கூட்டு முயற்சிகளின் வலையமைப்புகளால் (networks) பயிற்சியளிக்கப்பட்டு ஆதரிக்கப்படும் பெரியவர்களால் மேற்கொள்ளப்படும் தினசரி, தொடர்ச்சியான கல்வி முயற்சிகள் தான் தேவைப்படுகின்றன என்றும் எடுத்துரைத்தார்.

மேலும் இந்தச் செயல்முறை, செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு மற்றும் முன்கூட்டிய, வரம்பற்ற மற்றும் மேற்பார்வையற்ற எண்மமுறை அணுகல் ஆகிய இரண்டும் இளைஞர்களின் உறவுகள் மற்றும் வளர்ச்சிக்கு ஏற்படுத்தக்கூடிய ஆபத்துகளைப் புரிந்துகொள்வதை உள்ளடக்கியது என்றும் அவர்களுக்கு எடுத்துக்காட்டினார்.

இத்தகைய ஆபத்துகள் மற்றும் அவர்களின் தனிப்பட்ட மற்றும் சமூக வாழ்க்கையில் ஏற்படும் விளைவுகளைக் கண்டறிவதில் பங்கேற்பதன் வழியாக மட்டுமே, சிறார்களுக்கு எண்மமுறை (டிஜிட்டல்) உலகத்தை அணுகுவதில் ஆதரவளிக்க முடியும் என்றும், இது அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் பொறுப்பான தேர்வுகளைச் செய்யும் திறனை வலுப்படுத்தும் ஒரு வழியாக அமையும் என்றும் கூறினார் திருத்தந்தை.

இது, மனித உண்மைத் தன்மை மற்றும் இணைப்பைப் பாதுகாப்பதில் ஒரு முக்கிய பயிற்சியாகும் என்றும், இது எப்போதும் மனித மாண்பை ஒரு அடிப்படை மதிப்பாக மதிப்பதன் மூலம் வழிநடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார் திருத்தந்தை,

மேலும் கல்வி, நெறிமுறை மற்றும் பொறுப்பான அணுகுமுறையை மேற்கொள்வதன் வழியாக மட்டுமே, குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் செயற்கை நுண்ணறிவு ஒரு துணைவனாகச் செயல்படுகிறது, அச்சுறுத்தலாக அல்ல என்பதை உறுதி செய்ய முடியும் என்றும் கூறி தனது உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 நவம்பர் 2025, 14:21