தேடுதல்

புதுப்பிக்கப்பட்டு நேர்ந்தளிக்கப்பட்ட புனித பெனடிக்ட் பேராலயம் புதுப்பிக்கப்பட்டு நேர்ந்தளிக்கப்பட்ட புனித பெனடிக்ட் பேராலயம்  (©Arcidiocesi Spoleto-Norcia)

நோர்சியாவில் புதுப்பிக்கப்பட்ட புனித பெனடிக்ட் பேராலயம்!

கடந்த 2016-ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் கடுமையாக சேதமடைந்த இப்பேராலயம், புனரமைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு பணிகளுக்குப் பிறகு இப்போது அதன் பழைய நிலைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

"வரலாற்று மற்றும் கலை மதிப்புமிக்கதும், பெனடிக்டைன் ஆன்மிகத்தின் முக்கிய மையமுமான இந்த முக்கியமான பேராலயத்தின் மறுசீரமைப்பு, அண்மைய ஆண்டுகளில் முழு மறைமாவட்டச் சமூகமும் மேற்கொண்ட துறவற புதுப்பித்தலின் கடினமான பயணத்தின் ஒரு புலப்படும் அடையாளமாக நிற்கிறது" என்று கூறியுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

நோர்சியாவில் உள்ள புனித பெனடிக்ட் பேராலயத்தை மீண்டும் புதுப்பித்துத் திறப்பதற்கான பெருவிழா நிகழ்விற்கு நவம்பர் 1, சனிக்கிழமையன்று வழங்கியுள்ள வாழ்த்துச் செய்தியொன்றில், இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை. இந்தச் செய்தியை திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் வாசித்து வழங்கினார். 

உம்பிரியா மக்கள் மட்டுமல்ல, இத்தாலி மற்றும் பிற நாடுகளிலும் உள்ள பலரால் மிகவும் விரும்பப்பட்டு எதிர்பார்க்கப்பட்ட ஒரு முயற்சியை பல்வேறு வழிகளில் சாத்தியமாக்கி ஆதரித்த, விடாமுயற்சியுடனும், போற்றத்தக்க அர்ப்பணிப்புடனும், மாநில மற்றும் உள்ளூர் நிறுவனங்கள், வடிவமைப்பாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் தனியார் குடிமக்கள் அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார் திருத்தந்தை.

பெருமகிழ்வு தரும் இந்த நிகழ்வு கிறிஸ்தவ மக்களின் நம்பிக்கையை மீண்டும் தூண்டும் என்று தனது நம்பிக்கையைத் வெளிப்படுத்தியுள்ள திருத்தந்தை, மேலும், தலத்திருஅவைத் தலைவர், அதிகாரிகள், அருள்பணியாளர்கள், இருபால் துறவியர் மற்றும் அங்குள்ள அனைவருக்கும் ஏராளமான விண்ணகக் கொடைகளை வேண்டிக்கொள்வதோடு, தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் மகிழ்வுடன் வழங்குவதாக மொழிந்துள்ளார் திருத்தந்தை.

கடந்த 2016-ஆம் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் கடுமையாக சேதமடைந்த இப்பேராலயம், புனரமைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு பணிகளுக்குப் பிறகு இப்போது அதன் பழைய நிலைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 நவம்பர் 2025, 15:46