கல்லறைகள் நிலைவாழ்விற்கான எதிர்நோக்கின் அடையாளங்கள்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
உயிர்த்தெழுந்த இயேசுவின் வாழ்க்கை இப்போது முன்பு இருந்தது போல் இல்லாமல், இறைத்தந்தையின் ஆவியின் வல்லமையால் உருவாக்கப்பட்ட முற்றிலும் புதியதாக இருப்பது போல, கிறிஸ்தவரின் நம்பிக்கையும் மனித நம்பிக்கை அல்ல; அது கிரேக்கர்களின் நம்பிக்கையோ அல்லது யூதர்களின் நம்பிக்கையோ அல்ல, மாறாக அது புதிய நம்பிக்கையாக வெளிப்படுகிறது என்று கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
நவம்பர் 3, திங்கள்கிழமை, புனித பேதுரு பெருங்கோவிலில் இறைபதமடைந்த முன்னாள் திருத்தந்தை பிரான்சிஸ், கர்தினால்கள் மற்றும் ஆயர்கள் அனைவரும் நிறையமைதி அடையவேண்டி நிறைவேற்றிய திருப்பலியின் மறையுரையில் இவ்வாறு மொழிந்தார் திருத்தந்தை.
உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் மீதான நம்பிக்கையாக துயரத்தை மாற்றும் கிறிஸ்தவ நம்பிக்கையை எடுத்துரைத்த அதேவேளை, திருத்தந்தையாக பிரான்சிஸ் அவர்கள் முதன்முதலில் பெற்ற யூபிலி ஆண்டில் இந்த நம்பிக்கை குறிப்பாக அர்த்தமுள்ளதாக மாறியது என்பதையும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை லியோ.
லூக்கா நற்செய்தியில், எம்மாவு செல்லும் பாதையில் சீடர்கள் இயேசுவைச் சந்திக்கும் (லூக் 24:13–35) பகுதியைக் குறித்து தனது சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை, மனித வாழ்க்கையை துயரத்திலும் குழப்பத்திலும் தொடங்கி உயிர்த்தெழுந்த இறைவனைச் சந்திப்பதன் வழியாகப் புதுப்பிக்கப்படும் நம்பிக்கை என்று விவரித்தார்.
மேலும் இதே நிகழ்வில் இயேசுவின் அப்பம் பிட்குதல் அவரது உயிருள்ள இருப்பை வெளிப்படுத்துகிறது, விரக்தியை ஒரு புதிய வகையான நம்பிக்கையாக மாற்றுகிறது, ஆனால் இது மனித நம்பிக்கை அல்ல, உயிர்த்தெழுதலில் பிறந்த உயிர்ப்பின் நம்பிக்கை என்று தெரிவித்த திருத்தந்தை, இந்த நம்பிக்கை மனித ஞானத்திலோ அல்லது நீதியிலோ வேரூன்றவில்லை, மாறாக "சிலுவையில் அறையப்பட்டவர் உயிர்த்தெழுந்தார்" என்ற உண்மையில் வேரூன்றியுள்ளது என்று மொழிந்தார்.
கிறிஸ்துவின் வெற்றியின் மூலம், மரணம் கூட மாற்றமடைகிறது அதாவது, ஒரு காலத்தில் எதிரியாக இருந்த அது, விசுவாசிகளை நிலைவாழ்விற்கு அழைத்துச் செல்லும் ஒரு சகோதரியாக மாறியுள்ளது என்றும், ஆகையால் கிறிஸ்தவர்கள் துயரப்படுகிறார்கள், ஆனால் நம்பிக்கையற்றவர்களைப் போல அல்ல, ஏனென்றால் மரணம் நம்மை கிறிஸ்துவிடமிருந்து பிரிக்க முடியாது என்றும் எடுத்துக்கூறினார்.
கிறிஸ்தவர்கள் நல்லடக்கம் செய்யப்படும் இடங்கள் "கல்லறைகள்" - (தூங்கும் இடங்கள்) என்று அழைக்கப்படுகின்றன என்று உரைத்த திருத்தந்தை, இவை உயிர்த்தெழுதலில் நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றன என்றும் குறிப்பிட்டார்.
தானியேல் நூலில் வரும் இறைவார்த்தையை நினைவுகூர்ந்து (தானி 12:3 ) இறைபதமடைந்த முன்னாள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், ஏனைய ஆயர்களும் தாய்மைப்படுத்தப்பட்டு, வானத்தில் விண்மீன்களைப் போல ஒளிர்ந்திட வேண்டும் என்று இறைவேண்டல் செய்தார்.
இறுதியாக 42-வது திருப்பாடலின் இறைவார்தைகளை எடுத்துக்காட்டி, இறைபதமடைந்த மேய்ப்புப் பணியாளர்கள் அனைவரையும் ஊக்கப்படுத்திய அதே பாஸ்கா நம்பிக்கையுடன் வாழ்ந்திடுமாறு அனைத்து விசுவாசிகளையும் வலியுறுத்தி தனது மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
