தேடுதல்

விழித்தெழுந்து இயேசுவின் ஒளியில் நடப்போம்!

"இறையாட்சி இயேசு கிறிஸ்துவில் வலுகட்டாயமாக அல்ல, மாறாக மென்மை மற்றும் இரக்கம் மூலம் தோன்றியது என்பதைக் கண்டு திருமுழுக்கு யோவான் கூட இறுதியில் வியப்பில் ஆழ்ந்தார்" : திருத்தந்தை பதினான்காம் லியோ

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

நமக்கு ஒரு புதிய நாள் தொடங்கிவிட்டது, நாம் விழித்தெழுந்து ஆண்டவருடைய ஒளியில் நடப்போம்! என்று கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

டிசம்பர் 07, ஞாயிறன்று, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு வழங்கிய நண்பகல் மூவேளை இறைவேண்டல் உரையில் இவ்வாறு உரைத்தார் திருத்தந்தை.

திருவருகைக் காலத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையின் நற்செய்தி வாசகத்தை (காண்க. மத் 3:1–12) மையமாகக் கொண்டு தனது சிந்தனைகளை விசுவாசிகளுடன் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை.

புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையுடன் வரவேற்பு

கிறிஸ்தவர்கள் இறையாட்சியின் வருகையைப் புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையுடன் வரவேற்க வேண்டும் என்றும், மனந்திரும்புதல், ஆன்மிக தயார்நிலை மற்றும் மனித வரலாற்றில் கடவுள் செயல்படும் வியப்புக்குரிய  வழிகளை அறிந்துகொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார் திருத்தந்தை.

“மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது” என்ற திருமுழுக்கு யோவானின் வார்த்தைகள் இயேசுவின் வழியை ஆயத்தப்படுத்துவதை எடுத்துக்காட்டுகின்றன என்று கூறிய திருத்தந்தை, கிறிஸ்தவர்கள் இந்த எதிர்பார்ப்பை நாள்தோறும், இயேசு கற்றுக்கொடுத்த செபமான, "விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே!" என்று எதிரொலித்து, "உமது ஆட்சி வருக!" என்று கேட்கிறார்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.

வரலாறு கடவுளின் திட்டத்தால் வரையறுக்கப்படுகிறது

வரலாறு என்பது பூமிக்குரிய ஆற்றல்களால் வரையறுக்கப்படவில்லை, மாறாக கடவுளின் திட்டத்தால் வரையறுக்கப்படுகிறது என்ற நம்பிக்கையை இந்த இறைவேண்டல் வெளிப்படுத்துகிறது என்றும், நம்மை ஆதிக்கம் செலுத்த அல்ல, மாறாக நம்மை விடுவிப்பதற்காக ஆட்சி செய்ய வரும் கடவுளின் பணியில்  தங்கள் ஆற்றலை அர்ப்பணிக்க விசுவாசிகளை இது அழைக்கிறது என்றும் மொழிந்தார் திருத்தந்தை.

திருமுழுக்கு யோவானின் வார்த்தைகளில் ஒரு கடுமை இருந்ததை ஒப்புக்கொண்ட திருத்தந்தை, அவரை நோக்கி மக்கள் ஈர்க்கப்பட்டனர் என்றும், ஏனெனில் அவரது வார்த்தைகளில் கடவுளின் அழைப்பை உணர்ந்தனர் என்றும் விளக்கினார்.

இறையாட்சி இயேசு கிறிஸ்துவில் வலுகட்டாயமாக அல்ல, மாறாக மென்மை மற்றும் இரக்கம்  மூலம் தோன்றியது என்பதைக் கண்டு திருமுழுக்கு யோவான் கூட இறுதியில் வியப்பில் ஆழ்ந்ததாகவும் குறிப்பிட்டார் திருத்தந்தை.

இயேசு என்னும் தளிர் புதுமையின் அடையாளம்

இறைவாக்கினர் எசாயாவின் வார்த்தைகளை (எசா 11:1–10) எடுத்துக்காட்டி, கிறிஸ்துவை இறந்த மரத்தின் அடிப்பகுதியிலிருந்து வெளிப்படும் ஒரு மென்மையான தளிர் என்றும், இது தூய ஆவியால் வழிநடத்தப்படும் புதுமையின் அடையாளமாகும் என்றும் கூறினார் திருத்தந்தை.

இந்தப் புதுப்பித்தல் கருப்பொருளை, 60 ஆண்டுகளுக்கு முன்பு முடிவடைந்த இரண்டாவது வத்திக்கான் திருச்சங்கத்துடன் இணைத்து, திருஅவையின் வாழ்க்கையில் சாத்தியமில்லாத மற்றும் எதிர்பாராத முன்னேற்றங்கள் சாத்தியமாகிய ஒரு தருணம் என்று அழைத்தார் திருத்தந்தை.

வேட்டையாடுபவருக்கும் இரைக்கும் இடையிலான நல்லிணக்கம் பற்றிய எசாயாவின் பார்வையை மேற்கோள் காட்டிய திருத்தந்தை, இத்தகைய மாற்றங்கள் "கடவுளால் முடியாதது எதுவுமில்லை" என்பதைக் காட்டுகின்றன என்றார்.

விழித்தெழுந்து இயேசுவின் ஒளியில் நடப்போம்

விசுவாசிகள் தங்கள் இதயங்களை இறையாட்சிக்காகத் தயார்படுத்திக் கொள்ளவும், வலுகுறைந்த  நிலையில் உலகிற்கு வந்து மனிதகுலத்திற்கு வழிகாட்டும் ஒளியாக விளங்கும் சிறியவரான (எளியவரான) இயேசுவைப் பின்பற்றவும் வலியுறுத்திய திருத்தந்தை,  நமக்கு ஒரு புதிய நாள் தொடங்கிவிட்டது என்றும் நாம் விழித்தெழுந்து அவருடைய ஒளியில் நடப்போம் என்றும் கூறினார்.

ஒவ்வொருவரும் சிறியதொரு ஒளியாக இருப்போம்

திருவருகைக் காலத்தின் ஒளிரும் மற்றும் உறுதியான ஆன்மிகத்தை எடுத்துக்காட்டிய திருத்தந்தை, கிறிஸ்துவை வரவேற்பதன் வழியாக ஒவ்வொரு நபரும் சிறியதொரு ஒளியாக இருக்க முடியும் என்பதை நினைவூட்டுவதற்காக, இக்காலத்தில் தெரு அலங்காரங்களை அனுமதிக்க விசுவாசிகளை ஊக்குவித்தார்.

கிறிஸ்துவின் வருகைக்காக காத்திருக்கும் இத்திருவருகைக் காலத்தில், நம்பிக்கை மற்றும் எதிர்நோக்கின் ஓர் எடுத்துக்காட்டாக அன்னை கன்னி மரியாவை சுட்டிக்காட்டி தனது மூவேளை இறைவேண்டல் உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 டிசம்பர் 2025, 08:39