தேடுதல்

இசை நிகழ்ச்சியில் திருத்தந்தை இசை நிகழ்ச்சியில் திருத்தந்தை   (ANSA)

இசை நம்மை கடவுளிடம் அழைத்துச் செல்லும் ஒரு பாலம்!

இசை நிகழ்ச்சிகளை ஆர்வமுடன் இரசித்து கண்டுகளித்த திருத்தந்தை, இசையை அனைவரும் அணுகக்கூடிய ஓர் உலகளாவிய, தெய்வீகக் கொடை என்று பாராட்டினார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

'இசை நம்மை கடவுளிடம் அழைத்துச் செல்லும் ஒரு பாலம் போன்றது' என்று கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

டிசம்பர் 6, இச்சனிக்கிழமையன்று, வத்திக்கானின் புனித ஆறாம் பவுல் அரங்கில் இடம்பெற்ற ஏழைகளுக்கான ஆறாம் ஆண்டு இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை.

இசை நிகழ்ச்சிகளை ஆர்வமுடன் இரசித்து கண்டுகளித்த திருத்தந்தை, இசையை அனைவரும் அணுகக்கூடிய ஓர் உலகளாவிய, தெய்வீகக் கொடை என்று பாராட்டினார்.

அமைப்பாளர்கள், பிறரன்பு பணி குழுக்கள் மற்றும் கலைஞர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்த திருத்தந்தை, இசை என்பது கடவுளிடம் நம்மை அழைத்துச் செல்லும் ஒரு பாலம் என்றும், இது ஆன்மாவை உயர்த்தி, கடவுளின் குழந்தைகள் என்ற அவர்களின் மாண்பை மக்களுக்கு நினைவூட்டுகிறது என்றும் தெரிவித்தார்.

கிறிஸ்துமஸ் விழாவிற்கும் இசைக்கும் இடையே உள்ள ஆழமான தொடர்பை பற்றி குறிப்பிட்ட திருத்தந்தை, கடவுளின் அன்பின் பாடலான இயேசு கிறிஸ்துவைக் கேட்கத் தயாராக இருக்கும் திறந்த, கவனமுள்ள இதயங்களுடன் அவரது பிறப்பிற்குத் தயாராகுமாறு அனைவரையும் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வில், 3,000-க்கும் மேற்பட்ட ஏழை விருந்தினர்கள், தன்னார்வலர்கள் மற்றும் கலைஞர்கள் பங்குபெற்றனர். இவர்களில் மைக்கேல் பப்லே, உரோமை மறைமாவட்ட பாடகர் குழுவினர் மற்றும் நோவா ஓபரா இசைக் குழுவினரும் அடங்குவர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 டிசம்பர் 2025, 08:45