தேடுதல்

குழந்தைக்கு ஆசீர் வழங்கும் திருத்தந்தை குழந்தைக்கு ஆசீர் வழங்கும் திருத்தந்தை   (ANSA)

தூய மேரி மேஜர் பெருங்கோவிலில் உயிரோட்டமிக்க கிறிஸ்து பிறப்பு குடில்!

கிறிஸ்து பிறப்பு குடில் என்பது மனிதகுலத்தின் மீட்பைக் குறிக்கிறது என்றும், "மனிதர் கடவுளாக மாறுவதற்காக கடவுள் மனிதரானார்" என்று கூறிய புனித அகுஸ்தினாரின் கூற்றையும் அவர்களுக்கு எடுத்துக்காட்டினார் திருத்தந்தை .

ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்

கிறிஸ்து பிறப்புக் குடிலின் ஆன்மிக முக்கியத்துவம் குறித்தும், கலாச்சாரங்கள் கடந்து அதன் உலகளாவிய குறியீட்டுத் தன்மை குறித்தும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

டிசம்பர் 13, இவ்வெள்ளியன்று, தூய மேரி மேஜர் பெருங்கோவிலில் இடம்பெற்ற உயிரோட்டமுள்ள கிறிஸ்து பிறப்பு குடில் நிகழ்ச்சி ஒன்றின் பங்கேற்பாளர்களுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியொன்றில்,  திருத்தந்தை தனது ஆசீர்வாதங்களை வழங்கியதோடு, இந்தக் கிறிஸ்து பிறப்பு பாரம்பரியத்தை மீண்டும் உயிரோட்டமிக்கதாக மாற்றிய அவர்களின் முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்தார்.

தொடக்கமாக, பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரியத்தைத் தொடரும் விதமாக, பல்வேறு கலாச்சார கண்ணோட்டங்கள் வழியாக, கிறிஸ்து பிறப்பு குடிலை காட்சிப்படுத்தியமைக்காக, கர்தினால் மக்ரிக்காஸ்  உட்பட அனைத்துப் பங்கேற்பாளர்களையும் பாராட்டினார் திருத்தந்தை.

மேலும், 1223-ஆம் ஆண்டில் புனித பிரான்சிஸ் அசிசியார் லிபேரியன் பேராலயத்தில் வணங்கப்படும் புனித கிறிஸ்துமஸ் குடிலால் ஈர்க்கப்பட்டு, முதல் கிறிஸ்து பிறப்பு  குடிலை உருவாக்கியதே உலகளாவிய குடில் பாரம்பரியத்தின் தொடக்கம் என்பதை நினைவு கூர்ந்தார் திருத்தந்தை.

இயேசுவின் பிறப்புச் செய்தியைப் பற்றிப் பேசிய திருத்தந்தை, கிறிஸ்து அதிகாரமோ அல்லது ஆயுதங்களோ இன்றி பிறந்த நிகழ்வு, மனிதகுலத்தின் பெருமை, வன்முறை மற்றும் பேராசை ஆகியவற்றுக்கு சவால் விடுகிறது என்றும், நம் உண்மையான அடையாளத்தை நோக்கி நம்மை வழிநடத்துகிறது என்று கூறிய திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்களின் உரையை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கோள்காட்டியதை எடுத்துக்காட்டினார்.

எதிர்நோக்கின் திருப்பயணிகளைப் போலவே, இந்நிகழ்வின் பங்கேற்பாளர்களும் தாங்கள் சந்திக்கும் அனைவரையும் ஊக்குவிக்கவும், ஆறுதல்படுத்தவும், அன்பு, நம்பிக்கை மற்றும் விடாமுயற்சி ஆகியவற்றை பரப்பவும் அழைக்கப்பட்டுள்ளார்கள் என்று வலியுறுத்தினார் திருத்தந்தை.

கிறிஸ்து பிறப்பு குடில் என்பது மனிதகுலத்தின் மீட்பைக் குறிக்கிறது என்றும், "மனிதர் கடவுளாக மாறுவதற்காக கடவுள் மனிதரானார்" என்று கூறிய புனித அகுஸ்தினாரின் கூற்றையும்  அவர்களுக்கு எடுத்துக்காட்டினார் திருத்தந்தை .

அனைத்துப் பங்கேற்பாளர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் தனது ஆசீரை வழங்கியதுடன், அவர்களுக்கு இனிய கிறிஸ்து பிறப்பு பெருவிழா வாழ்த்துக்களைத் தெரிவித்து, தனது உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 டிசம்பர் 2025, 14:03