தேடுதல்

தொல்லியல் குறித்த திருத்தந்தையின்  திருத்தூது மடல் தொல்லியல் குறித்த திருத்தந்தையின் திருத்தூது மடல்  

கிறிஸ்தவத் தொல்லியல் என்பது திருஅவை & மனிதகுலத்தின் மீதான சேவை!

"கிறிஸ்தவத் தொல்லியல் நினைவாற்றலைப் பாதுகாக்கிறது, நம்பிக்கையைப் பயிற்றுவிக்கிறது, எதிர்நோக்கை நிலைநிறுத்துகிறது, கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை இணைக்கிறது" : திருத்தந்தை பதினான்காம் லியோ

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

"தொல்லியல் என்பது ஓர் அறிவியல் துறை மட்டுமல்ல, வரலாறு, இடங்கள் மற்றும் பொருள் கலாச்சாரத்தில் நம்பிக்கை எவ்வாறு வாழ்ந்துள்ளது, வெளிப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் பொதிந்துள்ளது என்பதைப் புரிந்துகொள்வதற்கான ஒரு வழியாகும்" என்று கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ

கிறிஸ்தவத் தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தொல்பொருளியலின் முக்கியத்துவம் குறித்து டிசம்பர் 10, புதன்கிழமையன்று வெளியிட்டுள்ள திருத்தூதுமடல் ஒன்றில் இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை.

1925 ஆம் ஆண்டில், முதல் உலகப் போரின் கொடூரமான காயங்களைத் தணிக்கும் நோக்கத்துடன் "அமைதியின் யூபிலி விழா" (Jubilee of Peace) அறிவிக்கப்பட்டது. குறிப்பிடத்தக்க வகையில், இந்நிறுவனத்தின் நூற்றாண்டு விழா, "எதிர்நோக்கின் யூபிலி விழா" (Jubilee of Hope) என்ற மற்றொரு விழாவுடன் ஒத்துப்போகிறது, இது தற்போது ஏராளமான போர்களால் பாதிக்கப்பட்ட மனிதகுலத்திற்கு நம்பிக்கையின் புதிய பார்வையை வழங்க முயல்கிறது என்றும் எடுத்துக்காட்டியுள்ளார்.

01. நிறுவனத்தின் முக்கியத்துவம்

இத்திருமடலின் தொடக்கத்தில், கிறிஸ்தவத் தொல்பொருட்களை, குறிப்பாக, தொடக்க கால கிறிஸ்தவ நினைவுச் சின்னங்கள், கல்லறைகள் மற்றும் கலைப்பொருட்களை ஆய்வு செய்து பாதுகாப்பதற்காக 1925-ஆம் ஆண்டு திருத்தந்தை பதினோறாம் பத்திநாதர் அவர்களால் நிறுவப்பட்டது இந்த நிறுவனம் என்று கூறியுள்ளார் திருத்தந்தை.

இந்நிறுவனம் உலகெங்கிலும் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களை கல்வியாளர்கள், கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களாக மாற்ற பயிற்சி அளிக்கிறது என்றும், பன்னாட்டு ஆராய்ச்சியில் பங்கு வகிப்பதுடன், கலாச்சாரங்கள் முழுவதும் அமைதி, உரையாடல் மற்றும் ஒத்துழைப்பை ஊக்குவிக்கிறது என்றும் புகழாரம் சூட்டியுள்ளார் திருத்தந்தை.

02. விசுவாசத்திற்கான பாதையாக கிறிஸ்தவத் தொல்லியல்

தொல்லியல் என்பது ஒரு அறிவியல் துறை மட்டுமல்ல, வரலாறு, இடங்கள் மற்றும் பொருள் கலாச்சாரத்தில் நம்பிக்கை எவ்வாறு வாழ்ந்துள்ளது, வெளிப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் பொதிந்துள்ளது என்பதைப் புரிந்துகொள்வதற்கான ஒரு வழியாகும்" என்றும் எடுத்துக்காட்டியுள்ளார் திருத்தந்தை.

மேலும் இது மனுவுருவெடுத்தல் மற்றும் மீட்பு வரலாற்றின் உறுதியான எதார்த்தத்தை வெளிப்படுத்துகிறது என்றும், புலன்களைப் பயிற்றுவிக்கும் அதேவேளை, பணிவு, பொறுமை, படைப்பின் மீதான மரியாதை மற்றும் ஆன்மிக சூழலியல் உணர்வை வளர்க்கிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை.

03. நினைவாற்றல், நற்செய்தி அறிவிப்பு மற்றும் எதிர்நோக்கு

கிறிஸ்தவப் பாரம்பரியத்தைப் பாதுகாத்தல் மற்றும் கற்றுக்கொள்ளல் இரண்டும் உயிருள்ள நினைவாற்றலை வளர்க்கிறது என்றும், விசுவாசிகளை அவர்களின் தோற்றுவாயுடன் (மூலம்) இணைக்கிறது மற்றும் நம்பிக்கையை நிலைநிறுத்துகிறது என்றும் மொழிந்துள்ளார்.

மேலும் தொல்பொருள் ஆராய்ச்சி என்பது, நம்பிக்கை வரலாற்று ரீதியாக அன்றாட வாழ்க்கை, கலை, நகரங்கள் மற்றும் கலாச்சாரங்களை எவ்வாறு மாற்றியுள்ளது என்பதைக் காட்டுகிறது என்றும், கடந்த காலத்தை நிகழ்காலத்துடன் பேச வைப்பதன் மூலமும், சிந்தனை, உரையாடல் மற்றும் கடவுளுடனான எதிர்கொள்ளலை (encounter) வரவேற்பதன் மூலமும் நற்செய்தி அறிவிப்புக்கு உதவுகிறது என்றும் உரைத்துள்ளார்.

04. இறையியல் மற்றும் கலாச்சாரப் பொருத்தம்

தொல்லியல் இறையியலை நிறைவு செய்கிறது என்றும், வெளிப்பாட்டிற்கு (Revelation) வரலாற்று, பொருள் மற்றும் கலாச்சாரச் சூழலை வழங்குகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

அத்துடன், திருஅவையின் தோற்றம் மற்றும் மறைபரப்புப் பணி பற்றிய கல்வி, மறைக்கல்வி போதனை மற்றும் புரிதலை ஆதரிக்கிறது என்றும், கிறிஸ்தவ கிழக்கு மற்றும் உலகளாவிய கலாச்சாரம் இரண்டிலும் ஈடுபாட்டை ஊக்குவிக்கிறது என்றும் கூறியுள்ளார்.

05. செயல்பாட்டிற்கான அழைப்பு

ஆயர்கள், கல்வியாளர்கள், அறிஞர்கள் மற்றும் இளைஞர்கள் கிறிஸ்தவத் தொல்லியல் துறையில் ஈடுபட இந்நிறுவனம் ஊக்குவிக்கிறது என்றும், கிறிஸ்தவப் பாரம்பரியத்தைப் பாதுகாத்தல், ஆய்வு செய்தல் மற்றும் அறிவைப் பகிர்ந்து கொள்வதில் அதன் பங்கை வலியுறுத்துகிறது என்றும் உரைத்துள்ளார் திருத்தந்தை.

மனுவுருவெடுத்தல் மற்றும் மீட்பு வரலாற்றை உறுதியான வழிகளில் காண்பதை இறுதி இலக்காகக் கொண்டு, ஆராய்ச்சி, கற்பித்தல் மற்றும் பொதுத் தகவல் தொடர்பு ஆகியவற்றில் தொடர்ச்சியான அர்ப்பணிப்புக்கு அழைப்பு விடுக்கிறது என்றும் கூறியுள்ளார்.

கிறிஸ்தவத் தொல்லியல் என்பது திருஅவை மற்றும் மனிதகுலத்தின் மீதான அன்பின் சேவை, அழைத்தல் மற்றும் வெளிப்பாடாக உள்ளது என்றும், இது நினைவாற்றலைப் பாதுகாக்கிறது, நம்பிக்கையைப் பயிற்றுவிக்கிறது, எதிர்நோக்கை நிலைநிறுத்துகிறது, கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை இணைக்கிறது என்றும் விளக்கியுள்ளார் திருத்தந்தை.

இறுதியாக, இந்த உன்னதமான பணியில் ஈடுபடுபவர்களை ஆசீர்வதித்துள்ள திருத்தந்தை, அதன் ஆன்மிக மற்றும் கல்விப் பணிக்களில் அவர்கள் அனைவரும் உண்மையாக இருக்க வேண்டுமென ஊக்குவித்து தனது உரையை நிறைவு செய்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 டிசம்பர் 2025, 13:20