கிறிஸ்து பிறப்பில் அமைதியையும் அன்பையும் பரவச் செய்யுங்கள்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
கிறிஸ்து பிறப்பு என்பது கடவுளின் அன்பின் கொடையைப் பகிர்ந்து கொள்வது பற்றியது என்றும், இந்த உணர்வை முழுவதும் வாழவும், அமைதி, அன்பு மற்றும் ஒன்றிப்பை வளர்க்க வேண்டும் என்றும் குழந்தைகளை ஊக்குவித்தார் திருத்தந்தை பதிநான்காம் லியோ.
டிசம்பர் 16, செவ்வாய்க்கிழமையன்று, திருத்தந்தையர்களின் கோடைகால ஓய்விடமான காஸ்தல் கந்தோல்போவிலுள்ள திருத்தந்தை ஆறாம் பவுல் தொடக்கப் பள்ளியில் இடம்பெற்ற பதினொன்றாவது கிறிஸ்துமஸ் இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கிய உரையில் இவ்வாறு கூறினார் திருத்தந்தை.
இந்த இசை நிகழ்ச்சியின்போது அப்பள்ளியின் குழந்தைகள் இத்தாலி, இலத்தீன், ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் கிறிஸ்து பிறப்புப் பாடல்களைப் பாடி, அரங்கில் இருந்த திருத்தந்தை உள்ளிட்ட அனைவரையும் மகிழ்வித்தனர்.
பல்வேறு மொழிகளில் கிறிஸ்து பிறப்பு பாடல்களைக் கேட்பது மிகவும் அழகாக இருந்தது என்றும், குழந்தைகள் வெவ்வேறு மொழிகளில் பாடுவதைக் கேட்பது, கிறிஸ்து பிறப்பு ஒவ்வொருவரின் இதயத்திலும் மகிழ்ச்சியையும் அமைதியையும் எழுப்புகிறது என்பதைப் புரிந்துகொள்ள அனைவருக்கும் உதவுகிறது என்றும் கூறினார் திருத்தந்தை.
மேலும் இவ்விழாவிற்குத் தன்னை அழைத்ததற்காக நன்றி தெரிவிப்பதாகக் கூறிய திருத்தந்தை, இவ்வழைப்பு ஒரு மறைநிகழ்வுபோல வந்ததாகவும், அதை ஏற்றுக்கொண்டதில் தான் மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும் கூறினார்.
கடவுள் நம் அனைவருக்கும் அவரது அன்பைக் கொடையாகக் கொடுக்க விரும்பிய நிகழ்வுதான் கிறிஸ்து பிறப்பு என்று மொழிந்த திருத்தந்தை, கடவுள் மனிதகுலத்திற்கு, குறிப்பாக, சிறியவர்களுக்கும் மிகவும் வலுகுறைந்தவர்களுக்கும் அதிக நெருக்கமாக இருக்கிறார் என்பதை வலியுறுத்திக் கூறினார்.
கிறிஸ்து பிறப்பில் கொண்டாடப்படும் இந்த உணர்வு, இந்த நாட்களில் மட்டுமல்ல, ஆண்டு முழுவதும் வாழ்ந்துகாட்டப்பட வேண்டும் என்று அவர்களிடம் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
அப்பள்ளியிலிருந்து புறப்படுவதற்கு முன்பு மாணவர்கள் அனைவரையும் ஆசீர்வதித்த திருத்தந்தை, அவர்களிடமிருந்து பரிசுப் பொருள்களைப் பெற்றுக்கொண்டதுடன், அவர்களுடன் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டார்.
1968-ஆம் ஆண்டு திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்களால் நிறுவப்பட்ட இந்தப் பாப்பிறைத் தொடக்கப்பள்ளி, இப்போது ஏறத்தாழ 300 மாணவர்களுக்கு கத்தோலிக்க விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட பாடத்திட்டத்தையும், பாடநெறிக்கு அப்பாற்பட்ட செயல்பாடுகளால் வளப்படுத்தப்பட்டதையும் கற்பிக்கிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
