தேடுதல்

கிறிஸ்துமஸ் இசை நிகழ்ச்சியில் திருத்தந்தை கிறிஸ்துமஸ் இசை நிகழ்ச்சியில் திருத்தந்தை   (ANSA)

இசை இதயங்களைக் கடவுளை நோக்கி நடத்துகிறது!

திருத்தந்தை பதினான்காம் லியோ முன்னிலையில், இத்தாலியின் ஓய்வுபெற்ற இசையமைப்பாளர் ரிக்கார்தோ முத்தி அவர்கள், வத்திக்கானின் திருத்தந்தை புனித ஆறாம் பவுலரங்கில் கிறிஸ்துமஸ் இசை நிகழ்ச்சி ஒன்றை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியின்போது அவர் 2025-ஆண்டிற்கான "இரத்சிங்கர் விருது" பெற்றார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

"இசை என்பது மனிதரின் மாண்பைப் புரிந்துகொள்வதற்கும் ஒருவரின் இறையழைத்தலை உறுதிப்படுத்துவதற்கும் ஒரு பாதையாக அமைந்துள்ளது" என்று கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ

டிசம்பர் 13, வெள்ளிக்கிழமை இரவு, வத்திக்கானின் திருத்தந்தை புனித ஆறாம் பவுலரங்கில் இடம்பெற்ற இத்தாலியின் ஓய்வுபெற்ற இசையமைப்பாளர் ரிக்கார்தோ முத்தி அவர்கள் நிகழ்த்திய கிறிஸ்துமஸ் இசை நிகழ்ச்சி ஒன்றில் இவ்வாறு கூறினார் திருத்தந்தை.

இசை, அழகு மற்றும் நம்பிக்கை ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பைப் பற்றி தனது எண்ணங்களை வெளிப்படுத்திய திருத்தந்தை, மனித மாண்பையும் இறையழைத்தலையும் புரிந்துகொள்வதற்கான "சிறப்புமிக்க பாதை" என்று இசையை அழைத்தார்.

மேலும் “இசை என்பது இதயங்களை கடவுளை நோக்கி நடத்தக்கூடியது” என்று வலியுறுத்திய திருத்தந்தை, புனித அகுஸ்தினார் இசையை, ‘இதயத்தை கடவுளை நோக்கி வழிநடத்தும் கலை’ என்று அழைத்ததை மேற்கோள்காட்டினார்.

இசைக்கான அவரது வாழ்நாள் அர்ப்பணிப்புக்காக முத்தி அவர்களைப் பாராட்டிய திருத்தந்தை, கர்தினால் இரத்சிங்கர் (திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்) மற்றும் முத்தி ஆகிய இருவருக்குமிடையே இருந்த  நெருங்கிய உறவைக் குறித்துக் குறிப்பிட்டார்.

அழகு, பொது நன்மை மற்றும் நல்லிணக்கத்தை மையமாகக் கொண்ட இரத்சிங்கருக்கும் முத்திக்கும் இடையிலான உரையாடலின் தொடர்ச்சியாக இரத்சிங்கர் விருதைக் குறித்து விவரித்தார் திருத்தந்தை.

இசையின் அறநெறிமுறைப் பங்களிப்பைப் பற்றி பேசிய திருத்தந்தை, முன்னாள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை மேற்கோள் காட்டி, லூய்ஜி செருபினி இளைஞர் இசைக்குழு மற்றும் குய்த்தோ ஜிகி சராஜினி பாடகர் குழுவின் நிகழ்ச்சிகளுக்கு நன்றி தெரிவித்தார்.

கல்வியில் சமத்துவமின்மையை நிவர்த்தி செய்வதற்கான உலகளாவிய முயற்சிக் குறித்து நம்பிக்கை தெரிவித்த திருத்தந்தை, கிறிஸ்துமஸ் காலத்தில் அமைதிக்காக இறைவேண்டல் செய்ய அழைப்பு விடுத்து, அங்குக் கூடியிருந்த மற்றும் கண்டு இரசித்துக்கொண்டிருந்த அனைவருக்கும் தனது ஆசீரை வழங்கி தனது உரையை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 டிசம்பர் 2025, 13:42