தேடுதல்

சவால்கள் மத்தியிலும் லெபனோன் நம்பிக்கையை வளர்க்கிறது!

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் இந்த உரை லெபனோனின் தற்போதைய சவால்களில் ஒன்றிப்பு, நம்பிக்கை, அன்பு மற்றும் இரக்கம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டியது, துன்பங்களுக்கு மத்தியிலும் அமைதி, ஒன்றிப்பு மற்றும் கல்வியை தொடர்ந்து வளர்க்குமாறு அனைவருக்கும் அழைப்பு விடுத்தது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

டிசம்பர் 1, திங்கள்கிழமையன்று, காலை 11.20 மணிக்கு ஹரிசாவிலுள்ள லெபனோன் அன்னை ஆலயம், ஆயர்கள், அருள்பணியாளர்கள், திருத்தொண்டர்கள், துறவியர், அருள்பணித்துவ மாணவர்கள் மற்றும் பொதுநிலை மறைக்கல்வி ஆசிரியர்களுக்குத்  திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் வழங்கிய அருளுரை.

அன்பு நிறைந்த சகோதரர் சகோதரிகளே!

அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர் (மத் 5:9) என்ற விருதுவாக்கில் லெபனோன் நாட்டிற்கு எனது முதல் திருத்தூதுப் பயணத்தை மேற்கொள்வதில் நான் பெருமகிழ்வடைகின்றேன்.

லெபனோன் மக்கள் நம்பிக்கையை வளர்ப்பதில் மிகுந்த பொறுப்புமிக்கவர்கள் என்ற புனித இரண்டாம் ஜான் பால் வார்த்தைகளை இங்கு நான் நினைவுகூருகின்றேன். மேலும் லெபனோன் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வரும் போதிலும்  நம்பிக்கை, மன்னிப்பு மற்றும் இரக்கம் ஆகியவற்றின் உடன்பிறந்த உறவுக்கான சூழலை உருவாக்க அழைப்புவிடுக்கின்றேன்.

ஒன்றிப்பின் இடமாகத் திகழும் ஹரிசா கோவிலின்  அடையாளத்தையும், துன்ப காலங்களில் வலிமைக்காக சிலுவையின் அடியில் மரியாளுடன் இறைவேண்டல் செய்வதன் முக்கியத்துவத்தையும் உங்களுக்கு எடுத்துக்காட்ட விரும்புகின்றேன்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடமிருந்து அகத்தூண்டுதலைப் பெற்ற நிலையில், விசுவாசம் என்பது ஒரு நங்கூரம் என்றும், அமைதியைக் கட்டியெழுப்பும்போது, விசுவாசிகள் வாழ்க்கையின் சோதனைகளை நம்பிக்கையுடனும் அன்புடனும் கடந்து செல்ல வேண்டும் என்றும் நான் உங்களுக்கு வலியுறுத்த விழைகிறேன். ஆழமான வேரூன்றிய நம்பிக்கையிலிருந்துதான் அன்பு வளர்கிறது, இந்த அன்பின் வழியாக ஒன்றிப்பின் உறுதியான செயல்கள் பிறக்கின்றன.

லெபனோனில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் மோதல்கள் மத்தியிலும் அமைதியாக வாழும் டெப்பாபியே போன்ற சமூகங்கள் ஒன்றிணைந்து பணியாற்றும் சூழல்கள் குறித்து பெருமை கொள்கிறேன். ஒன்றிப்பையும் தன்னலமற்றத்தன்மையையும் வளர்க்க வெறுப்பின் மீது அன்பையும், பழிவாங்கலின் மீது மன்னிப்பையும் வளர்க்குமாறு அழைப்பு விடுத்த திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்களை நினைவுகூருகின்றேன்.

குறிப்பாக இடம்பெயர்வு மற்றும் போர் சூழலில் இளைஞர்களுக்கு நம்பிக்கையை வழங்குவது மிகவும் அவசியம். புலம்பெயர்ந்தோர் மற்றும் ஓரங்கட்டப்பட்ட குழுக்களுக்கு ஆதரவு மற்றும் கல்வியின் அவசியத்தையும் இங்கே வலியுறுத்த விரும்புகின்றேன், புலம்பெயர்ந்தோர் மற்றும் இடம்பெயர்ந்தோரின்  துன்பங்களுக்கு மத்தியில் நம்பிக்கையைக் கண்டறிய உதவும் லோரன் மற்றும் சகோதரி டிமா போன்ற தனிநபர்களின் பணியையும் இங்கே குறிப்பிட விழைகிறேன்.

கல்வியின் வலிமை மற்றும் பொருள் மற்றும் ஆன்மிகத் தேவைகளைப் பூர்த்தி  செய்வதற்கு தொண்டாற்றுவது மிகவும் அவசியம். குறிப்பாக தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ள முடியாதவர்களுக்கு. சிறைச்சாலை ஊழியத்தில், அருள்பணியாளர் சார்பலின் அவர்களின் சான்று வாழ்வும்.  துன்பப்படுபவர்களிடமோ அல்லது தவறு செய்பவர்களிடமோ கூட கிறிஸ்துவின் முகத்தைப்  பார்க்கமுடியும் என்பதை எனக்கு நினைவூட்டியது.

வரவிருக்கும் தங்க ரோஜாப் பூ பரிசளிப்பைப் பற்றிக் குறிப்பிட விரும்புகின்றேன். இது, பல்வேறு வகையான லெபனோன் உணவுகளைப் போலவே, விசுவாசிகளின் வாழ்வில் கிறிஸ்துவின் நறுமணத்தை ஊடுருவச் செய்கிறது. ஆகவே, அனைவரும் அன்பில் ஒன்றிப்புடன் வாழவும், மனத்தாழ்மையுடனும் தாராள மனப்பான்மையுடனும் மற்றவர்களுக்கு சேவை செய்யவும் உங்களை ஊக்குவிக்கின்றேன்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 டிசம்பர் 2025, 14:37