கிறிஸ்தவத் தொல்லியல் துறை தனித்துவமான கல்வியைக் கொண்டுள்ளது!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
"கிறிஸ்தவத்தின் தொடக்க கால நூற்றாண்டுகளின் நினைவுச் சின்னங்களைப் பற்றிய ஆய்வு என்று புரிந்து கொள்ளப்படும் "கிறிஸ்தவத் தொல்லியல்" என்ற படிப்பினை, அதன் குறிப்பிட்ட காலவரிசை, வரலாற்று மற்றும் கருப்பொருள் ஒருங்கிணைப்புகளால் வரையறுக்கப்பட்ட அதன் சொந்த அறிவுசார் நிலையைக் கொண்டுள்ளது" என்று கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ .
டிசம்பர் 11, வியாழக்கிழமையன்று, திருப்பீடத்தில் கிறிஸ்தவத் தொல்லியல் துறையின் பாப்பிறை நிறுவனத்தின் பேராசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கிய உரையில் இவ்வாறு தெரிவித்த திருத்தந்தை, அதன் முக்கியத்துவம் மற்றும் செயல்பாடுகள் குறித்தும் அவர்களுக்கு விளக்கினார்.
தொடக்க கால நினைவுச்சின்னங்களைப் பாதுகாக்கிறது
தொடக்கமாக, கிறிஸ்தவத் தொல்பொருள் ஆய்வு நிறுவனத்தின் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வகையில், கிறிஸ்தவத்தின் தொடக்க கால நினைவுச் சின்னங்களைப் பாதுகாப்பதிலும் ஆய்வு செய்வதிலும் இந்த நிறுவனத்தின் பங்கை பாராட்டினார் திருத்தந்தை.
கிறிஸ்தவத் தொல்பொருட்கள் குறித்த அறிவியல் ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்காக 1925-ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தை நிறுவிய பதினோராம் பத்திநாதர் அவர்களின் பாரம்பரியத்தைக் குறித்தும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
கிறிஸ்தவத் தொல்லியலின் தனித்துவமான கல்வி
கிறிஸ்தவத் தொல்லியலின் தனித்துவமான கல்வி நிலையை மீண்டும் உறுதிப்படுத்திய திருத்தந்தை, அதன் அறிவியல் அடையாளத்தைப் பாதுகாக்க அறிஞர்களை ஊக்குவித்ததுடன், "கிறிஸ்தவ" என்ற சொல் ஓர் ஒப்புதல் வாக்குமூல அணுகுமுறையை விட ஒரு வரலாற்றுத் துறையைக் குறிக்கிறது என்று குறிப்பிட்டார்.
அண்மையில் இஸ்னிக் (நீசேயா) நகருக்குத் தான் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டதையும், அங்கு அவர் மற்ற திருச்சபைகளின் பிரதிநிதிகளுடன் சேர்ந்து கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான முதல் திருச்சங்கத்தினை நினைவுகூர்ந்ததையும் எடுத்திக்காட்டிய திருத்தந்தை, கிறிஸ்தவ உரையாடலுக்கான துறையின் மதிப்பை வலியுறுத்தினார்.
உலகளாவிய கலாச்சாரத் தூதரக உறவிற்குப் பங்களிக்கவும், அறிவார்ந்த பணிகள் வழியாக உரையாடலையும் அமைதியையும் ஊக்குவிக்கவும் அவர்களிடம் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
அமைதியையும் நம்பிக்கையையும் தாங்குபவர்கள்
1925-ஆம் ஆண்டு "அமைதியின் யூபிலி விழாவை" (Jubilee of Peace) இன்றைய "எதிர்நோக்கின் யூபிலி விழாவுடன்" (Jubilee of Hope) இணைத்து சிந்தித்த திருத்தந்தை, கிறிஸ்தவத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் எங்கு ஆராய்ச்சி மற்றும் அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்டாலும் அவர்கள் "அமைதியையும் நம்பிக்கையையும் தாங்குபவர்கள்" என்று விவரித்தார்.
ஐரோப்பாவின் கிறிஸ்தவத் தோற்றுவாய்க் குறித்து, திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்களை மேற்கோள் காட்டிய திருத்தந்தை, கண்டத்தின் அடையாளத்தைப் புரிந்துகொள்வதில் தொல்பொருள் ஆய்வுகளின் பொருத்தத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார்.
புத்துணர்வுடன் பணியாற்றுங்கள்
இறுதியாக, திருஅவைக்கும் கலாச்சாரத்திற்கும் புத்துணர்வுடன் பணியாற்ற அவர்கள் அனைவரையும் ஊக்குவித்து, அவர்களுக்குத் தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கி தனது உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
