தேடுதல்

அமல உற்பவ அன்னை அமல உற்பவ அன்னை  (Vatican Media)

அமல உற்பவ அன்னையின் பாரம்பரிய விழாவில் பங்கேற்கும் திருத்தந்தை!

அன்றைய நிகழ்வுகள் காலை 7 மணிக்கு தீயணைப்புப் படையினர் அன்னை மரியாவின் திருவுருவத்திற்கு மலர்வளையம் வைப்பதன் மூலம் தொடங்கும். மாலை 4 மணிக்கு, 12 மீட்டர் உயரத் தூணின் அடிவாரத்தில் உரோமை மறைமாவட்டத்தின் முதன்மை அருள்பணியாளர் மற்றும் உரோமை மேயருடன் இணைந்து இறைவேண்டலில் ஈடுபடுவார் திருத்தந்தை.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

டிசம்பர் 8, வரும் திங்களன்று, புனித கன்னி மரியாவின் அமல உற்பவப் பெருவிழாவன்று, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், உரோம் நகரின் Spagna சதுக்கம் சென்று, அன்னை மரியாவுக்கு வணக்கம் செலுத்தி, மக்களுக்கு ஆசீர் வழங்கும் பாரம்பரிய நிகழ்வைத் தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நீண்டகால திருத்தந்தையரின் வழக்கமான இந்த நிகழ்வில், பொதுநிலை அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் துறவு சபைகளின் தலைவர்கள் அன்னை மரியாவின் திருவுருவத்திற்கு முன்பு இறைவேண்டல்கள் செய்து, மலரஞ்சலி செலுத்துவார்கள்.

இந்த ஆண்டு, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட், மற்றும் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் உள்ளிட்ட அவரது முன்னோடிகளின் அடிச்சுவடுகளைப் பின்பற்றும் விதமாக இந்நிகழ்வில் பங்கேற்கிறார்.

அன்றைய நிகழ்வுகள் காலை 7 மணிக்கு தீயணைப்புப் படையினர் அன்னை மரியாவின் திருவுருவத்திற்கு மலர்வளையம் வைப்பதன் மூலம் தொடங்கும். மாலை 4 மணிக்கு, 12 மீட்டர் உயரத் தூணின் அடிவாரத்தில் உரோமை மறைமாவட்டத்தின் முதன்மை அருள்பணியாளர் மற்றும் உரோமை மேயருடன் இணைந்து இறைவேண்டலில் ஈடுபடுவார் திருத்தந்தை.

கூடுதல் நிகழ்ச்சிகளாக அன்று காலை 8:30 மணிக்கு வத்திக்கான் ஜெண்டர்மேரி இசைக்குழுவின் (Gendarmerie band) நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து காலை 9 மணிக்கு தூய்மைமிகு மூவொரு கடவுள் கோவிலில் திருப்பலியும் நடைபெறும். இதில் உரோமை நிறுவனங்களின் தொழிலாளர்கள் கலந்து கொள்வர்.

இத்தாலியின் தீயணைப்புப் படையைச் சேர்ந்த 220 பேர் இணைந்து 1857-ஆம் ஆண்டு, Spagna சதுக்கத்தில் தூண் ஒன்றை நிறுவி, அமல உற்பவமாகப் பிறந்த அன்னை மரியாவின் திருவுருவத்தை, அத்தூணின் மீது, டிசம்பர் 8-ஆம் நாள் நிறுவியதைத் தொடர்ந்து, ஒவ்வோர் ஆண்டும், இந்நாளில், அச்சத்துக்கத்தில், காலை 7.30 மணிக்கு, தீயணைப்புப் படையைச் சேர்ந்தவர்கள், அன்னையின் பாதத்தில், மலர் வளையம் வைத்து வணங்கும் நிகழ்வு தொடர்ந்து இடம்பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 டிசம்பர் 2025, 13:37