தேடுதல்

ஐரோப்பிய பழமை மற்றும் சீர்திருத்தவாதிகள் குழுவினருடன்  திருத்தந்தை ஐரோப்பிய பழமை மற்றும் சீர்திருத்தவாதிகள் குழுவினருடன் திருத்தந்தை   (ANSA)

ஐரோப்பிய அடையாளம் யூத-கிறிஸ்தவத் தொடக்கத்துடன் பிணைந்துள்ளது!

"திருஅவையின் குரலைப் பாதுகாப்பது என்பது கடந்த காலத்தை மீட்டெடுப்பது அல்ல, மாறாக ஐரோப்பாவின் எதிர்காலத்திற்கான வளங்களை உறுதிசெய்வதாகும்" : திருத்தந்தை பதினான்காம் லியோ

ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்

கலை, அறிவியல், பல்கலைக்கழகங்கள் மற்றும் கலாச்சார வாழ்வில் கிறிஸ்தவம் அளித்த பங்களிப்புகளைக் குறிப்பிட்டு, ஐரோப்பா தனது கிறிஸ்தவப் பாரம்பரியத்தை ஒரு வரலாற்று உண்மையாக ஒப்புக்கொள்ள வேண்டும் என்று  கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

டிசம்பர் 10, இப்புதனன்று, ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் ஐரோப்பிய பழமை மற்றும் சீர்திருத்தவாதிகள் குழுவொன்றை திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை.

ஐரோப்பாவின் அடையாளம் அதன் யூத-கிறிஸ்தவத் தோற்றுவாயிலிருந்து (root)  பிரிக்க முடியாதது என்று கூறிய திருத்தந்தை, இந்த மரபுதான் இக்கண்டத்தின் தார்மீகக் கோட்பாடுகளுக்கும், வறுமை, புறக்கணிப்பு, காலநிலைச் சிக்கல்கள் மற்றும் வன்முறை போன்ற சவால்களைச் சமாளிக்கும் அதன் திறனுக்கும் அடிப்படையாக இருக்கிறது என்று வலியுறுத்தினார்.

மேலும், ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், கருத்தரிப்பு முதல் இயற்கை மரணம் வரை மனித மாண்பைப் பாதுகாக்க வேண்டும் என்று எடுத்துக்காட்டிய திருத்தந்தை, சமூகத்தில் ஓரங்கட்டப்பட்டவர்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்றும், வெளிப்படையான விவாதங்களை ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர்களைக் கேட்டுக் கொண்டார்.

திருஅவையின் குரலைப் பாதுகாப்பது என்பது கடந்த காலத்தை மீட்டெடுப்பது அல்ல, மாறாக ஐரோப்பாவின் எதிர்காலத்திற்கான வளங்களை உறுதிசெய்வதாகும் என்று கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்களின்  நம்பிக்கைக்கும் பகுத்தறிவுக்கும் இடையிலான உரையாடலின் மதிப்பைக் கோடிட்டுக் காட்டிய திருத்தந்தை, அனைத்து மக்களின் உரிமைகள் மற்றும் மாண்பைப் பாதுகாப்பதில் அரசியல்வாதிகள் முக்கியப் பங்காற்றுகிறார்கள் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 டிசம்பர் 2025, 14:39