தேடுதல்

உரை வழங்கும் திருத்தந்தை உரை வழங்கும் திருத்தந்தை   (ANSA)

ஒன்றிணைந்து பணியாற்ற கற்றுக்கொள்வோம்

அமைதிக்கான வலுவான வேண்டுகோளை விடுக்கும் அதேவேளையில், தாக்குதல்களை நிறுத்துமாறு வேண்டுகிறேன். மேலும் பேச்சுவார்த்தை மற்றும் உரையாடல்கள் கட்டமைக்கப்படும்போது ஆயுதங்கள் அழிக்கப்படுகின்றன என்பதை வலியுறுத்த விரும்புகின்றேன்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

டிசம்பர் 2, செவ்வாய்க்கிழமையன்று, லெபனோன் நாட்டின் தலைநகர் பெய்ரூத்–ரஃபிக் ஹரிரி பன்னாட்டு விமான நிலையத்தில் இடம்பெற்ற வழியனுப்பு விழாவில் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் வழங்கிய அருளுரை.

அன்புள்ள சகோதரர் சகோதரிகளே!

லெபனோனின் வலுவான சந்திப்பு மற்றும் சமூக உணர்வை அனுபவித்த பிறகு, அதை விட்டு வெளியேறுவதில்  உள்ள சிரமத்தை நான் உணர்கிறேன். எனது இந்தத் திருத்தூதுப் பயணத்திற்காக இறைவனுக்கு நன்றி கூறுகின்றேன். என்னை சிறப்பாக கவனித்துக் கொண்ட உங்கள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றிகளும் பாராட்டுகளும். மேலும் லெபனோன் மக்கள் அனைவரையும் என் இதயத்தில் சுமந்து செல்கிறேன்.

இங்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ள விரும்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் நோக்கத்தை இந்நேரத்தில் நினைவுகூர்கிறேன். மேலும் கன்னி மரியா மீதான பக்தி மற்றும் புனித சார்பலின் சாட்சிய வாழ்வு உட்பட லெபனானின் பகிரப்பட்ட ஆன்மிக பாரம்பரியத்தை மதிப்பதில் பெருமகிழ்வடைகிறேன். லெபனோன் நாட்டின் ஆழமான ஆன்மிகம், பெய்ரூத் துறைமுக குண்டு வெடிப்பினால் ஏற்பட்ட துன்ப துயரங்கள் மற்றும் மக்களின் உண்மை மற்றும் நீதிக்கான விருப்பம் ஆகியவற்றை மீண்டும் எடுத்துக்காட்ட விரும்புகின்றேன்.

கேதுரு மற்றும் ஆலிவ் மரங்களால் அடையாளப்படுத்தப்பட்ட லெபனோனின் மீள்தன்மையை பாராட்டுகிறேன். மேலும் தற்போதைய மோதலால் பாதிக்கப்பட்ட பகுதிகள் உட்பட அனைத்துப் பகுதிகளுக்கும் எனது ஆசீரை வழங்குகின்றேன்.

அமைதிக்கான வலுவான வேண்டுகோளை விடுக்கும் அதேவேளையில், தாக்குதல்களை நிறுத்துமாறு வேண்டுகிறேன். மேலும் பேச்சுவார்த்தை மற்றும் உரையாடல்கள் கட்டமைக்கப்படும்போது ஆயுதங்கள் அழிக்கப்படுகின்றன என்பதை  வலியுறுத்த விரும்புகின்றேன்.

"லெபனோன் என்பது ஒரு நாடு மட்டுமல்ல; அது ஒரு செய்தி" என்ற திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்களின் வார்த்தைகளை நினைவு கூர்கிறேன். இது ஓர் எதார்த்தமாக மாற, ஒன்றிணைந்து பணியாற்ற கற்றுக்கொள்வோம், ஒன்றாக நம்பிக்கை கொள்வோம். லெபனோன், மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் அனைத்து அனைத்து மக்களுக்கும் எனது அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்குகின்றேன்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 டிசம்பர் 2025, 14:32