தேடுதல்

சையத் விருதின் ஏற்பாட்டாளர்களுடன் திருத்தந்தை சையத் விருதின் ஏற்பாட்டாளர்களுடன் திருத்தந்தை   (@Vatican Media)

சையத் விருது உடன் பிறந்த உறவுக்கான ஒரு கலங்கரை விளக்கம்!

உடன் பிறந்த உறவு ஒன்றிப்புக் குறித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் 2023 -ஆம் ஆண்டு உரையை மேற்கோள் காட்டி, உலகின் ஆன்மிக மரபுகள் அமைதியை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை மீண்டும் உறுதிப்படுத்தினார் திருத்தந்தை.

ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்

மனித உடன்பிறந்த உறவு நிலைக்கான  சையத் விருது ஷேக் சயீத்தின் மரபை உள்ளடக்கியுள்ளது என்றும், ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு நபரும் உடன் பிறந்த உறவின் ஒன்றிப்பை மேம்படுத்த அழைக்கப்படுகிறார்கள் என்ற ஒரு பொதுவான நம்பிக்கையை இந்த விருது பிரதிபலிக்கிறது என்றும் கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

டிசம்பர் 11, இவ்வியாழனன்று, திருப்பீடத்தில் இவ்விருதின் ஏற்பாட்டாளர்களைச் சந்தித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை.

மோதல்கள் மற்றும் பிளவுகள் அதிகரித்து வரும் இவ்வுலகில், அமைதி மற்றும் ஒன்றிப்புக்கான முக்கிய வலிமையாக இந்த விருது விளங்குவதை எடுத்துக்காட்டிய  திருத்தந்தை, இந்த விருது ஏற்பாட்டாளர்களின்  இரக்கம், கூட்டொருமை மற்றும் பல் மதங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் அர்ப்பணிப்பைப்  பாராட்டி மகிழ்ந்தார்.

சேக் முகமது பின் சயீது அல் நகியான் அவர்களின் ஆதரவுடன் திருத்தந்தை பிரான்சிஸ் மற்றும் பெரிய இமாம் அஹ்மத் அல்-தய்யப் ஆகியோர் கையெழுத்திட்ட 2019 -ஆம் ஆண்டுக்கான உடன் பிறந்த உறவு ஒன்றிப்புக் குறித்த ஆவணத்தில் உள்ள இந்த விருதின் தொடக்கத்தை எடுத்துக் காட்டினார் திருத்தந்தை.

மேலும் உடன் பிறந்த உறவு ஒன்றிப்புக் குறித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் 2023 -ஆம் ஆண்டு உரையை மேற்கோள் காட்டி, உலகின் ஆன்மிக மரபுகள் அமைதியை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை மீண்டும் உறுதிப்படுத்தினார் திருத்தந்தை.

இன்றையச் சூழலில், பிளவுகளை எதிர்த்துப் போராடுவதற்கு, மனித இரக்கம் மற்றும் தொண்டு பற்றிய உண்மையான சான்றுகள் தேவை என்று கூறிய திருத்தந்தை, இதற்கு வார்த்தைகள் மட்டும் போதாது மனிதகுலத்தின்  ஆழமான நம்பிக்கைகளை உயிர்ப்புடன் வைத்திருக்கக் கூடிய தெளிவான இரக்கச் செயல்கள் தேவை என்று கேட்டுக்கொண்டார்.

உண்மையான இரக்கத்தை வெளிப்படுத்தும் மற்றும் ஒன்றிப்பைக் கட்டியெழுப்புவதற்கான நடைமுறை மாதிரிகளை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களை அங்கீகரிப்பதற்காக இந்த சயீத் விருது வழங்கப்படுவதைப் பாராட்டினார் திருத்தந்தை.

இறுதியாக இவ்விருது வழங்கும் விழாவின் ஏற்பாட்டாளர்களுக்காக இறைவேண்டல் செய்வதாக உறுதியளித்த திருத்தந்தை, மனித குலத்தின் நன்மைக்காக தங்கள் பணியைத் தொடருமாறு அவர்களை ஊக்குவித்து தனது உரையை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 டிசம்பர் 2025, 13:51