இரக்கம் மற்றும் நீதியின் இறுதி முன்மாதிரி இயேசு!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
"வாழ்வில் மிகப்பெரிய சவால்களை எதிர்கொண்டாலும், நாம் தனியாக இல்லை என்பதை நாம் அறிவோம்: இயேசு நம்முடன் இருக்கிறார், அவர் நம்முடன் நடப்பார், அவர் நம் பக்கத்தில் இருந்தால், அழகான மற்றும் மகிழ்ச்சியான ஒன்று எப்போதும் நடக்கும்" என்று கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
டிசம்பர் 14, ஞாயிறன்று, சிறைக் கைதிகளுக்கும் அவர்களைப் பராமரிப்பவர்களுக்கும் எதிர்நோக்கின் யூபிலி விழாவைக் கொண்டாடிய வேளை, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில் காலை 10.00 மணிக்கு நிகழ்ந்த திருப்பலியில் வழங்கிய மறையுரையில் இவ்வாறு தெரிவித்தார் திருத்தந்தை.
தனது மறையுரையில் சிறைச்சாலை உலகின் சூழலில் எதிர்நோக்கின் மையப்பொருளைக் குறித்த தனது கருத்துக்களை விசுவாசிகளுடன் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை.
மாற்றம்பெறத் தூண்டும் திருவருகைக் காலம்
திருவருகைக் காலம் என்பது மகிழ்ச்சி மற்றும் சிறந்த எதிர்காலத்திற்கான எதிர்பார்ப்பு நிறைந்த காலம் என்பதை வலியுறுத்திய திருத்தந்தை, நமது காத்திருப்பின் மத்தியில் "மகிழ்ச்சியடையுங்கள்" என்ற இன்றைய வழிபாட்டின் அழைப்பால் இது அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது என்றும் கூறினார்.
நம்பிக்கையின் நங்கூரத்தை பிடித்துக் கொள்ளவும், தங்கள் இதயங்களின் கதவுகளை அகலமாகத் திறக்கவும் மக்களை வலியுறுத்திய திருத்தந்தை, திருவருகைக் காலம் என்பது, "சிறைச்சாலைகளுக்குள்ளும் கூட நம்பிக்கை, மீட்பு மற்றும் மாற்றத்திற்கான ஆற்றலில் கவனம் செலுத்த தூண்டுகிறது" என்று முன்னாள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வார்த்தைகளையும் நினைவு கூர்ந்து எடுத்துக்காட்டினார்.
நீதி மற்றும் ஒப்புரவை நோக்கி செயல்படுங்கள்
கைதிகளின் நிலைமையை மேம்படுத்துவதற்கு நிறைய செய்யப்பட்டுள்ளது என்பதை ஒப்புக்கொண்டதுடன் தற்போதைய சவால்களை எடுத்துக்காட்டிய திருத்தந்தை, மக்கள் தங்கள் கடந்த கால தவறுகளால் வரையறுக்கப்படுவதில்லை என்பதை உணர்ந்து, நீதி மற்றும் ஒப்புரவை நோக்கி தொடர்ந்து விடாமுயற்சியுடன் செயல்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
மேலும் துன்பம் மற்றும் பாவத்திலிருந்து, இரக்கம், மன்னிப்பு மற்றும் மனித தொடர்பு ஆகியவற்றின் அழகான செயல்கள் இன்னும் வெளிப்படும் என்று விசுவாசிகளுக்கு எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.
இரக்கம் மற்றும் நீதியின் இறுதி முன்மாதிரி இயேசு
இரக்கம் மற்றும் நீதியின் இறுதி முன்மாதிரியாக இயேசுவைப் பார்த்து, "அன்பின் நாகரிகம்" நோக்கி செயல்பட ஊக்குவித்த திருத்தந்தை, இது தொண்டு மற்றும் நல்லெண்ணத்தின் அடிப்படையில் நிறுவப்பட்ட ஒரு சமூகத்திற்கான திருத்தந்தை ஆறாம் பவுலின் தொலைநோக்குப் பார்வையை எதிரொலிக்கிறது என்றும் குறிப்பிட்டார்
கைதிகளுக்கு பொது மன்னிப்பு மற்றும் மறு ஒருங்கிணைப்பு வாய்ப்புகளுக்கான முன்னாள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் விருப்பத்தையும் எடுத்துக்காட்டிய திருத்தந்தை, திருவிவிலிய யூபிலி ஒரு புதிய தொடக்கத்தை வழங்கியது போல, யூபிலி விழா என்பது அனைவரும் புதிதாகத் தொடங்குவதற்கான ஒரு நேரம் என்பதை வலியுறுத்தினார்.
மக்களை மனமாற்றத்திற்கும் ஒப்புரவிற்கும் அழைத்த திருமுழுக்கு யோவானை நற்செய்தி வாசகத்துடன் இணைத்த திருத்தந்தை, கடவுளின் நீதி, இரக்கம் மற்றும் மன்னிப்பில் வேரூன்றியுள்ளது, அதிலும் குறிப்பாக தங்கள் வாழ்க்கையை மாற்ற விரும்புவோருக்கு என்று கற்பிக்கும் புனித அகுஸ்தினாரின் முன்மாதிரியை பாராட்டினார்.
முடிவில், கூட்ட நெரிசல், கல்வித் திட்டங்களின் பற்றாக்குறை மற்றும் கைதிகளின் மனச் சுமைகள் உள்ளிட்ட பிரச்சினைகளைத் தீர்ப்பதில் உள்ள சிரமங்களை ஒப்புக்கொண்ட திருத்தந்தை, யாரும் இழக்கப்படக்கூடாது, அனைவரும் மீட்கப்பட வேண்டும் என்ற கடவுளின் விருப்பம் தெளிவாக உள்ளது என்பதை நினைவூட்டினார்.
கடவுளின் உடனிருப்பு மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும்
கிறிஸ்து பிறப்பு நெருங்கி வருவதால், கடவுளின் உடனிருப்பால் , மிகப்பெரிய சவால்கள் கூட அழகான மற்றும் மகிழ்ச்சியான ஒன்றிற்கு வழிவகுக்கும் என்று நம்பி, புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையுடனும் எதிர்நோக்குடனும் இந்த நோக்கத்தை அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டு தனது மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
