திருத்தந்தையுடன் இஸ்ரேல் அதிபர் தொலைபேசியில் உரையாடல்
ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்
கிறிஸ்துமஸ் விழா மற்றும் யூதர்களின் ஹனுக்கா விழா நெருங்கி வரும் வேளையில், திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களுடன் இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் அவர்கள் தொலைபேசி வாயிலாக உரையாடினார் என்று திருப்பீடச் செய்தித் தொடர்பகம் தெரிவித்துள்ளது.
டிசம்பர் 17, புதன்கிழமையன்று, நிகழ்ந்த இந்தத் தொலைபேசி உரையாடலில் அண்மையில் சிட்னியில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல் உள்ளிட்ட உலகளாவிய நிகழ்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது என்றும் திருப்பீடச் செய்தித் தொடர்பகம் கூறியுள்ளது.
மேலும், இந்த உரையாடலின் போது யூதர்கள்மீதான வெறுப்பின் அனைத்து வடிவங்களையும் கத்தோலிக்கத் திரு அவைக் கடுமையாகக் கண்டிக்கிறது என்பதை உறுதிப்படுத்திய திருத்தந்தை, இத்தகையச் செயல்கள் யூதச் சமூகத்தினர் மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தினரிடையே தொடர்ந்து அச்சத்தை பரப்பி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் அமைதி முயற்சிகளில் தொடர்ந்து விடாமுயற்சியுடன் ஈடுபடுமாறு வேண்டுகோள் விடுத்த திருத்தந்தை, அப்பகுதியில் மனிதாபிமான உதவி முயற்சிகளைத் தீவிரப்படுத்தவும், அவற்றைத் தொடர்ந்து தடையின்றி மேற்கொள்ளவும் வேண்டிய அவசரத் தேவையையும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த உரையாடல், பொதுவான மத விழாக்களின் பின்னணியிலும், பாதுகாப்பு, அமைதி மற்றும் மனிதாபிமான நிவாரணம் தொடர்பான தற்போதைய அனைத்துலக கவலைகளுக்கு மத்தியிலும் நடைபெற்றது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
