தேடுதல்

உரோமையில் பயிலும் இலத்தீன் அமெரிக்க அருள்பணியாளர்கள் மற்றும் இருபால் துறவியர் உரோமையில் பயிலும் இலத்தீன் அமெரிக்க அருள்பணியாளர்கள் மற்றும் இருபால் துறவியர்  

இரைச்சல் நிறைந்த இவ்வுலகில் இயேசுவின் குரலுக்குச் செவிகொடுங்கள்!

"எல்லாவற்றையும் விட்டுவிடுவதற்கான அழைப்பு என்பது, கடவுள் எல்லாவற்றிற்கும் மேலாக வைக்கும் ஒரு புதிய வாழ்க்கைக்கு நம் கண்களைத் திறப்பதாகும்" : திருத்தந்தை பதினான்காம் லியோ

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

"குழப்பமான இரைச்சல் நிறைந்த உலகில், கிறிஸ்துவுக்குப் பணியாற்றி அவரைப் பின்பற்றுபவர்களும், தங்கள் இதயங்களிலும் மனங்களிலும் அவருடைய குரலைத் தெளிவாகக் கேட்கும் மக்களும் நமக்கு எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாகத் தேவை" என்று கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

டிசம்பர் 12, வியாழக்கிழமையன்று, உரோமையில் பயிலும் இலத்தீன் அமெரிக்க அருள்பணியாளர்கள், இருபால் துறவியர், மற்றும் அருள்பணித்துவப் பயிற்சி மாணவர்களுக்கு வழங்கிய உரை ஒன்றில் இவ்வாறு கூறினார் திருத்தந்தை.

"என்னைப் பின்பற்றுங்கள்" என்ற கிறிஸ்துவின் அழைப்பின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு எடுத்துக்காட்டிய திருத்தந்தை, “இயேசு தம்முடைய சீடர்களை அழைப்பதில், இறைமுயற்சியுடன் செயல்பட்டு, பாவிகளுக்கும் பலவீனர்களுக்கும் நற்செய்தியைக் கொண்டு செல்லும் வாய்ப்பை அவர்களுக்கு வழங்கினார்” என்று அவர்களுக்கு நினைவூட்டினார் திருத்தந்தை.

இறையழைத்தலுக்குப் பதிலளிப்பதன் மூலம் வரும் பொறுப்பை எடுத்துரைத்த திருத்தந்தை, கடவுளுக்கு முழுமையான அர்ப்பணிப்பு, அவருடைய திருச்சட்டத்தைப் பற்றிய அறிவு மற்றும் உலகப் பாதுகாப்பைத் துறத்தல் ஆகியவற்றின் அவசியத்தை சுட்டிக்காட்டினார்.

தனது தந்தையை அடக்கம் செய்ய விரும்பிய இளைஞனுக்கு இயேசு விடுத்த சவாலுக்கு புனித அம்புரோஸ் அளித்த விளக்கத்தை மேற்கோள்காட்டிய திருத்தந்தை, “எல்லாவற்றையும் விட்டுவிடுவதற்கான அழைப்பு என்பது, கடவுள் எல்லாவற்றிற்கும் மேலாக வைக்கும் ஒரு புதிய வாழ்க்கைக்கு நம் கண்களைத் திறப்பதாகும்” என்று வலியுறுத்தினார்

மனித நலன்களை அடிப்படையாகக் கொண்டதல்ல, மாறாக கிறிஸ்துவின் இரத்தத்தை அடிப்படையாகக் கொண்ட கிறிஸ்தவச் சமூகத்திற்குள் ஒன்றிப்பின் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டிய திருத்தந்தை, விசுவாசிகளிடையே ஒன்றிப்புக்கான இயேசுவின் இறைவேண்டல் (யோவா 17:21) என்பது, கிறிஸ்தவ வாழ்க்கையின் இறுதி இலக்கைப் பிரதிபலிக்கிறது, என்றும், கிறிஸ்துவைப் பின்பற்றுவது என்றுமுள அமைதிக்கு வழிவகுக்கும் என்றும் குறிப்பிட்டார்.

வாழ்க்கையில் வரும் சந்தேகத்தின் தருணங்களை எடுத்துரைத்த திருத்தந்தை, பேதுரு இயேசுவை மறுதலித்த பிறகு கிறிஸ்து சொன்ன வார்த்தைகளை அவர்களுக்கு நினைவூட்டியதுடன், இயேசு மனித பலவீனத்தைப் புரிந்துகொள்கிறார் என்றும், தனிப்பட்ட போராட்டங்கள் இருந்தபோதிலும் உறுதியான மனதை ஊக்குவிக்கிறார் என்றும் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 டிசம்பர் 2025, 13:54