தேடுதல்

பன்னாட்டு விமான நிலையத்தில் திருத்தந்தை பன்னாட்டு விமான நிலையத்தில் திருத்தந்தை   (ANSA)

லெபனோனில் திருத்தந்தையின் 3-ஆம் நாள் நிகழ்வுகள்

ஒட்டோமான் பேரரசின் போது, பெய்ரூத்-திரிப்போலி சாலையில் பயணிக்கும் வணிகர்களுக்கு ஜல் எட் திப் நகரம் ஒரு முக்கியமான நிறுத்துமிடமாக இருந்தது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

டிசம்பர் 2, செவ்வாய்க்கிழமை, காலை 07.55 மணிக்கு திருப்பீடத் தூதர் அலுவலகத்திலிருந்து கிளம்பி ஜால் எட் டிப்பில் (20.2 கி.மீ) உள்ள பிரான்சிஸ்கன் திருச்சிலுவை சபை சகோதரிகளின் இல்லத்திற்கு வந்தடைந்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

ஜல் எட் திப்

ஜல் எட் திப் என்பது லெபனோனில் உள்ள ஒரு நகராட்சியாகும், இது தலைநகரிலிருந்து வடக்கே 11 கிமீ தொலைவில் உள்ள அல்-மாட்ன் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இதன் மக்கள் பெரும்பாலும் மாரோனைட் கத்தோலிக்கர்கள். இது முதலில் ஒரு சிறிய கிராமமாக இருந்தது,  அதன்பின்னர் வளர்ச்சிபெற்று நகராட்சி நிலைக்கு உயர்ந்தது.  ஒட்டோமான் பேரரசின் போது, ​​பெய்ரூத்-திரிப்போலி சாலையில் பயணிக்கும் வணிகர்களுக்கு இந்த நகரம் ஒரு முக்கியமான நிறுத்துமிடமாக இருந்தது. 20 -ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரெஞ்சு ஆக்கிரமிப்பு ஏற்பட்டவுடன், இந்த நகரம் தொடர்ந்து வளமைபெற்று ஒரு முக்கியமான வணிக மையமாக மாறியது.

திருச்சிலுவை மருத்துவமனை (The Hospital of the Cross)

மத்திய கிழக்கில் உள்ள மிகப்பெரிய மனநல குறைபாடு உள்ளவர்களுக்கான மருத்துவமனைகளில் ஒன்றான திருச்சிலுவை மருத்துவமனை, மத்திய மருந்தகம், மருந்து வழங்குமிடம், மருத்துவமனைகள், அறுவைசிகிச்சை அறை மற்றும் பார்வையாளர் அரங்கம், சமையலறைகள் மற்றும் சலவை அறைகள் தவிர, நோயாளர்களுக்கான ஐந்து பெரிய சிகிச்சைப் பிரிவுகளையும் (புனித ஜாக்ஸ், புனித எலியா, புனித மைக்கேல், நோத்ரே-தேம், புனித டொமினிக்) கொண்டுள்ளது. அருளாளர் யாக்கூப் (கபுச்சின் அருள்பணியாளர், 1875-1954) இதை 1919-ஆம் ஆண்டில் நிறுவினார், 1937-ஆம் ஆண்டில் இதனை மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான ஒரு மருத்துவமனையாகவும், 1951-ஆம் ஆண்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவமனையாகவும் மாற்றினார்.

திருச்சிலுவையின் பெயரில் இம்மருத்துவமனை அழைக்கப்பட வேண்டும் என்று அவர் பெரிதும் விரும்பினார். அதில், அவர் அமைதி, வலிமை மற்றும் பெருமையைக் கண்டார். அவர் நிறுவிய பிரான்சிஸ்கன் திருச்சிலுவை சகோதரிகளுக்கு, இறைவேண்டலில்  சிலுவையை நோக்கித் திரும்பவும், மனிதகுலத்திற்கு, குறிப்பாக ஏழ்மையான, மிகவும் பலவீனமான மற்றும் மிகவும் மறக்கப்பட்டவர்களுக்கு சேவை செய்யவும் கற்றுக் கொடுத்தார். அருள்பணியாளர் யாக்கூப் அவர்கள் சிலுவையின் பணியின் பலன்களை இன்னொரு சமூகத்தைத் தவிர்த்து அதாவது கிறிஸ்தவ சமூகத்திற்கு மட்டுமே உரியதாக பார்க்கவில்லை. அவரது பார்வையில், மதம், பாலினம் அல்லது இன வேறுபாடுகள் மனிதனின் முழு மாண்பிற்கு முன்னதாக மறைந்துவிட்டதாகவே கண்டார். இன்று, இம்மருத்துவமனையில் ஏறக்குறைய 1,055 படுக்கைகள் உள்ளன, மேலும் ஒவ்வொரு ஆண்டும் 2,200- க்கும் மேற்பட்ட  நோயாளர்கள் வருகின்றனர்.

காலை 08.10 மணிக்கு சகோதரிகளின் இல்லத்தின் முக்கிய நுழைவாயிலுக்கு வருகைபுரிந்த திருத்தந்தையை  லெபனோன் திருச்சிலுவை பிரான்சிஸ்கன் சகோதரிகள் சபையின் தலைமை அன்னை, அவ்வில்லத்தின் தலைமை சகோதரி, மற்றும் மருத்துவமனை இயக்குனர் ஆகியோர் மகிழ்வுபொங்க வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து, அவர்கள் அவருடன் மருத்துவமனையின் ஊழியர்கள் மற்றும் நோயாளர்கள் இருக்கும் கட்டிடத்தின் அரங்கிற்குள் சென்றனர்.

புனித டொமினிக் அரங்கிற்குள் சென்ற திருத்தந்தை நோயாளர்கள் மற்றும் ஊழியர்களுடன் ஒரு சந்திப்பை மேற்கொண்டு அவர்களுக்கு அருளுரை ஒன்று வழங்கினார்.

குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் அஞ்சலி

அதன்பிறகு அங்கிருந்து புறப்பட்டு 9.05 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பெய்ரூத் துறைமுகத்தில் குண்டு வெடிப்பு நடந்த இடத்திற்கு வாகனத்தில் வந்தார்.  லெபனோன் தலைநகரின் தீபகற்பத்தை உருவாக்கும் முக்கோணத்தின் ஏறக்குறைய ஒரு பக்கத்தை இந்த துறைமுகம் ஆக்கிரமித்துள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்ட்ரு ஆகஸ்ட் 4-ஆம் தேதியன்று, இங்கு நிகழ்ந்த இரட்டை குண்டு வெடிப்பில் 200-க்கும் மேற்பட்டவர்கள்  கொல்லப்பட்டனர், மேலும் 7,000 பேர் காயமடைந்தனர் மற்றும் 3,00,000 பேர் தங்கள் வீடுகளை இழந்தனர். 2014 ஆம் ஆண்டு தனித்துவிடப்பட்ட எம்.வி. ரோசஸ் கப்பலில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாமல் துறைமுகத்தில் சேமித்து வைக்கப்பட்ட அம்மோனியம் நைட்ரேட் இந்த இரண்டு குண்டிவெடிப்புகளுக்கும் வழிவகுத்தது. இது வரலாற்றில் மிகவும் வலிமைவாய்ந்த அணுசக்தி அல்லாத வெடிப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

அமைதியில் திருத்தந்தை இறைவேண்டல்

காலை 09:30 மணிக்கு பெய்ரூத் துறைமுக குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நினைவுச்சின்னத்தின் முன் சிறிது நேரம் அமைதியில் இறைவேண்டல் செய்த திருத்தந்தையை பிரதமர் வரவேற்று அவருக்கு மாலை அணிவித்து மகிழ்ந்தார். இந்த அமைதியான இறைவேண்டலின் நிறைவில் திருத்தந்தை, அங்கு வந்திருந்த பாதிக்கப்பட்டவர்களின் சில உறவினர்களையும், இந்தக் குண்டு வெடிப்பில் இருந்து தப்பிய சிலரையும் சந்தித்து தனது ஆறுதலை வழங்கினார். அதன்பிறகு காலை 09.55 மணிக்கு அங்கிருந்து காரில் புறப்பட்டு  2.3 கிமீ தொலைவிலுள்ள பெய்ரூத் கடற்கரைக்கு காலை 10.15 மணிக்கு வந்தடைந்தார்.

பெய்ரூத் கடற்கரை

பெய்ரூத் கடற்கரை என்பது மரினாவிற்கும் தலைநகரின் மையத்திற்கும் இடையிலான கடற்கரைப் பகுதி. லெபனோன் உள்நாட்டுப் போரின் முடிவில், புனரமைப்பு பணிகள் தொடங்குவதற்கு முன்பு தரைமட்டமாக்கப்பட்ட பெய்ரூத் நகர மையத்திலிருந்து நிரப்பப்பட்ட மண் மற்றும் இடிபாடுகளால் கடலில் இருந்து நிலம் மீட்கப்பட்டது. தலைநகரின் மத்திய மாவட்டத்தின் திட்டமிடல் மற்றும் மறுவளர்ச்சிக்கு பொறுப்பான லெபனோன் கூட்டு-பங்கு நிறுவனமான சோலிடெர் (Solidere) நகர்ப்புற வளர்ச்சியின் மாதிரியாக பல கட்டங்களில் கடற்கரை மாவட்டத்தை உருவாக்கி வருகிறது.

திருத்தந்தையின் திருப்பலி

காலை 10.30 மணிக்கு பெய்ரூத் கடற்கரையில் திருத்தந்தை திருப்பலியை தலைமையேற்று வழிநடத்தினார்.  இத்திருப்பலியில் ஏறத்தாழ ஒரு இலட்சம் விசுவாசிகள் கலந்துகொண்டனர்.

பன்னாட்டு விமான நிலையத்தில் அருளுரை

திருப்பலியைத் தொடர்ந்து நண்பகல் 12.30 மணிக்கு காரில் புறப்பட்டு 09.04 கிமீ தொலைவிலுள்ள பெய்ரூத் பன்னாட்டு விமான நிலையத்திற்கு 12.45 மணிக்கு வந்தடைந்தார். அங்கு நிகழ்ந்த வழியனுப்பு விழாவில் கலந்துகொண்டு தனது இறுதி அருளுரையை வழங்கினார் திருத்தந்தை.

உரோமைக்குப் பயணம்

இறுதியாக A320ne என்ற இத்தாலிய விமானத்தில் உள்ளூர் நேரம் நண்பகல் 01.15 மணிக்குப் புறப்பட்டு 2,380 கிமீ  கடல் பயண தூரத்தை 3 மணி நேரம் 55 நிமிடங்கள் கடந்து உரோமை உள்ளூர் நேரம் மாலை 04.10 மணிக்கு ஃபியூமிசினோ பன்னாட்டு விமான நிலையத்தை வந்தடைந்தார் திருத்தந்தை. இந்த விமானப் பயணத்தின்போது செய்தியாளர் சந்திப்பு, குழுவினருடன் புகைப்படங்கள் மற்றும் மதிய உணவு இடம்பெற்றது. இத்துடன் துருக்கி மற்றும் லெபனோனுக்கான திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின்  முதல் திருத்தூதுப் பயணம் நிறைவு பெற்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 டிசம்பர் 2025, 14:38