திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரை
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
டிசம்பர் 17, புதன்கிழமை, வத்திகானின் புனித பேதுரு பெருங்கோவில் வளாகம் முழுவதும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திருப்பயணிகளால் நிறைந்திருந்தது. முன்னதாக, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், வத்திக்கான் வளாகம் முழுவதும் தனது திறந்த வாகனத்தில் வலம் வந்து அங்கு நிறைந்திருந்த திருப்பயணிகள் அனைவரையும் வாழ்த்தினார். அப்போது மகிழ்ச்சி பொங்க திருப்பயணிகள் அனைவரும் தங்கள் கரங்களைத் தட்டி திருத்தந்தையை வரவேற்றனர். சரியாக காலை 10 மணிக்கு திருத்தந்தை தனது புதன் பொது மறைக்கல்வி உரையைத் தொடங்கினார். “இயேசு கிறிஸ்து நமது எதிர்நோக்கு” என்ற யூபிலி ஆண்டு தலைப்பில் நான்காவது பிரிவாக, "கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலும் தற்போதைய உலகின் சவால்களும்" என்ற தலைப்பில் தனது மறைக்கல்வி உரை சிந்தனைகளை வழங்கி வருகிறார் திருத்தந்தை. இந்நாளில் "இயேசு கிறிஸ்துவின் பாஸ்கா" என்ற எட்டாவது துணைத்தலைப்பில், "ஓய்வற்ற இதயத்தின் புகலிடமாக பாஸ்கா" என்ற மைய சிந்தனையில் திருப்பயணிகளுடன் தனது சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை. முதலில் மத்தேயு நற்செய்தியிலிருந்து ((மத் 6:19–21) இறைவார்த்தைகள் ஆங்கிலம் மற்றும் பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் வாசிக்கப்பட்டன. இப்போது வாசகத்திற்கு செவிமடுப்போம்.
நற்செய்தி வாசகம் (மத் 6:19–21)
“மண்ணுலகில் உங்களுக்கெனச் செல்வத்தைச் சேமித்து வைக்க வேண்டாம். இங்கே பூச்சியும் துருவும் அழித்துவிடும்; திருடரும் அதைக் கன்னமிட்டுத் திருடுவர். ஆனால், விண்ணுலகில் உங்கள் செல்வத்தைச் சேமித்து வையுங்கள்; அங்கே பூச்சியோ துருவோ அழிப்பதில்லை; திருடரும் கன்னமிட்டுத் திருடுவதில்லை. உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்.”
அன்புள்ள சகோதரர் சகோதரிகளே!
மனித வாழ்க்கை என்பது செய்வதற்கும் செயல்படுவதற்கும் நம்மைத் தூண்டும் ஒரு நிலையான இயக்கத்தால் குறிக்கப்படுகிறது. இன்று, எல்லா இடங்களிலும், மிகவும் மாறுபட்ட துறைகளில் உகந்த முடிவுகளை அடைவதில் வேகம் தேவைப்படுகிறது. இயேசுவின் உயிர்த்தெழுதல் நமது அனுபவத்தின் இந்தப் பார்வையை எவ்வாறு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது? இறப்பின் மீதான அவரது வெற்றியில் நாம் பங்கு கொள்ளும்போது, நாம் ஓய்வெடுப்போமா?
நாம் ஓய்வைக் கண்டடைவோம் என்று விசுவாசம் நமக்கு உறுதியளிக்கிறது - எதுவும் செய்யாமல் அல்ல, மாறாக அமைதியாலும் மகிழ்ச்சியாலும் நிரப்பப்பட்ட கடவுளின் ஓய்வில் நுழைவதன் வழியாக நாம் அதனைக் கண்டடைவோம். இது ஒரு கேள்வியை எழுப்புகிறது: இந்த ஓய்வுக்காக நாம் காத்திருக்க வேண்டுமா, அல்லது அது இப்போதே நம்மை மாற்றத் தொடங்குமா?
நம்மை எப்போதும் திருப்திப்படுத்தாத பல செயல்களால் நாம் மூழ்கிவிடுகிறோம். நமது பல செயல்கள் நடைமுறை, உறுதியான விடயங்களைப் பற்றியது. பல உறுதிமொழிகளுக்கு நாம் பொறுப்பேற்க வேண்டும், பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும், சோர்வை எதிர்கொள்ள வேண்டும். இயேசுவே மக்களுடனும், வாழ்க்கையுடனும் ஈடுபாடு கொண்டார், எதையும் விட்டுவிடாமல், உண்மையில் இறுதிவரை தன்னை முழுமையாகக் கொடுத்தார்.
ஆனாலும், அதிகப்படியான செயல்பாடு, நமக்கு நிறைவைத் தருவதற்குப் பதிலாக, நம்மைத் திகைக்க வைக்கும், அமைதியைப் பறிக்கும், நம் வாழ்க்கைக்கு உண்மையிலேயே முக்கியமானதை முழுமையாக வாழ்வதைத் தடுக்கும் ஒரு சுழலாக மாறுவதை நாம் அடிக்கடி உணர்கிறோம். அப்போது நாம் சோர்வாகவும், அதிருப்தியாகவும் உணர்கிறோம். காலம் ஆயிரம் நடைமுறை விடயங்களில் சிதறிக்கிடப்பது போல் தெரிகிறது, இருப்பினும் அவை நம் இருப்பின் இறுதி அர்த்தத்தைத் தீர்க்கவில்லை. சில நேரங்களில், செயல்பாடுகள் நிறைந்த நாள்களின் முடிவில், நாம் வெறுமையாக உணர்கிறோம். ஏன்? ஏனென்றால் நாம் இயந்திரங்கள் அல்ல; நமக்கு ஓர் "இதயம்" இருக்கிறது - உண்மையில், நாம் ஓர் இதயம் என்று சொல்லலாம்.
இதயம் நமது முழு மனிதகுலத்தின் அடையாளமாகும், எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் ஆசைகளின் தொகுப்பு, நமது ஆளுமைகளின் கண்ணுக்குத் தெரியாத மையம். "உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்” (மத் 6:21) என்ற இயேசுவின் அழகிய கூற்றை அறிவிக்கும்போது, இதயத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி சிந்திக்க நற்செய்தியாளர் மத்தேயு நம்மை அழைக்கிறார்.
எனவே உண்மையான செல்வம் என்பது, பூமிக்குரிய பெட்டகங்கள் அல்லது மிகப்பெரிய நிதி முதலீடுகளில் அல்ல, மாறாக இதயத்தில்தான் வைக்கப்படுகிறது, அவை இன்று எப்போதையும் விட அதிகமாக சிதைக்கப்பட்டு, நியாயமற்ற முறையில் குவிக்கப்பட்டு, இலட்சக்கணக்கான உயிர்களைப் பலி கொடுத்து, கடவுளின் படைப்பை அழித்து, வழிபாட்டுப் பொருள்களாக மாற்றப்படுகின்றன.
இந்தப் பார்வைகள் குறித்துச் சிந்திப்பது முக்கியம், ஏனென்றால் நாம் தொடர்ந்து எதிர்கொள்ளும் ஏராளமான கடமைகளில், வெளிப்புறமாக வெற்றிகரமாகத் தோன்றும் மக்களிடையே கூட, விரக்தியின் போது, அர்த்தமின்மையின் போது, சிதறடிக்கும் ஆபத்து அதிகரித்து வருகிறது. அதற்குப் பதிலாக, உயிர்ப்பின் ஒளியில் வாழ்க்கையைப் படிப்பது, உயிர்த்த இயேசுவுடன் அதைப் பார்ப்பது என்பது மனித ஆளுமையின் சாரத்தை, நம் இதயத்தை அணுகுவதைக் கண்டுபிடிப்பதாகும்.
மனித இதயத்தை "ஓய்வற்றது" என்று விவரிப்பதன் வழியாக, புனித அகுஸ்தினார், மனிதகுலத்தின் நிறைவை நோக்கிய ஆழமான உந்துதலை விளக்குகிறார். இந்தக் கருத்து பாவ ஏற்பு அறிக்கையின் தொடக்கத்திலிருந்து வருகிறது, அங்கு அவர் எழுதுகிறார்: "ஓ ஆண்டவரே, நீர் எங்களை உமக்காகப் படைத்தீர், எங்கள் இதயம் உம்மில் இளைப்பாறும் வரை ஓய்வற்று இருக்கிறது."
ஓய்வற்றநிலை (Restlessness) என்பது நமது இதயம் சீரற்ற முறையில், ஒழுங்கற்ற முறையில், ஒரு முடிவு அல்லது இலக்கு இல்லாமல் நகராது, மாறாக அதன் இறுதி இலக்கை நோக்கி, "வீடு திரும்புவதை" நோக்கிச் செல்கிறது என்பதற்கான அறிகுறியாகும். இங்கே "வீடு திரும்புதல்" என்பது ஒருவரின் உண்மையான சுயத்திற்கு, உள் அமைதிக்கு அல்லது ஆன்மிகச் சொந்தமான நிலைக்குத் திரும்புவதைக் குறிக்கும்.
மேலும் இதயத்தின் உண்மையான இருப்பிடம் இந்த உலகத்தின் பொருட்களை வைத்திருப்பதில் இல்லை, மாறாக அதை முழுமையாக நிரப்பக்கூடியதை அடைவதில் உள்ளது, அதாவது கடவுளின் அன்பை அல்லது அன்பாகவே இருக்கும் கடவுளை அடைவதில் உள்ளது. நாம் சந்திக்கும் மக்களை, அதாவது, நமது சகோதரர் சகோதரிகளை அன்புகூர்வதன் வழியாக இந்தச் செல்வம் கண்டுபிடிக்கப்படுகிறது. அவர்களின் உடனிருப்பு நமக்கு சவால் விடுகிறது, மேலும் நமது இதயங்களைத் திறந்து நம்மையே கொடுக்க அழைக்கிறது.
நமக்கு அடுத்திருப்போர், நம்மை நிதானமாக இருக்கச் சொல்கிறார், அவரது கண்களைப் பார்த்துப் பேசச் சொல்கிறார், சில நேரங்களில் நம் திட்டங்களை மாற்றச் சொல்கிறார், ஒருவேளை திசையை மாற்றுவதற்குக் கூட அவர் சொல்லலாம்.
அன்பான நண்பர்களே, மனித இதயத்தின் இயக்கத்தின் இரகசியம் என்பது அதன் இருப்பின் மூலத்திற்குத் திரும்புவது, தளர்வுறாத, ஏமாற்றமடையாத மகிழ்ச்சியை அனுபவிப்பது. ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஒரு நீடித்த அர்த்தம் தேவை. மனித இதயத்திற்கு நம்பிக்கையும், அது வெறுமையை அல்ல, முழுமையை நோக்கமாகக் கொண்டது என்ற உணர்வும் தேவை.
இயேசு கிறிஸ்து, தனது மனுவுருவெடுத்தல், பாடுகள், இறப்பு மற்றும் உயிர்த்தெழுதல் வழியாக, இந்த நம்பிக்கைக்கு ஓர் உறுதியான அடித்தளத்தை அளித்துள்ளார். ஓய்வற்ற இதயம், தான் உருவாக்கப்பட்ட அன்பின் இயக்கத்திற்குள் நுழைந்தால் ஏமாற்றமடையாது. இலக்கு உறுதியானது. வாழ்க்கை வெற்றிபெற்றுவிட்டது, கிறிஸ்துவில் அது அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு இறப்பிலும் வெற்றியடைந்து கொண்டே இருக்கும். இதுவே கிறிஸ்தவ எதிர்நோக்கு. இதை நமக்குக் கொடுத்த இயேசுவை எப்போதும் போற்றிப் புகழ்ந்து நன்றி செலுத்துவோம்!
இவ்வாறு தனது மறைக்கல்வி உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை. இறுதியாக இயேசு கற்பித்த இறைவேண்டல் செபத்திற்குப் பிறகு அனைத்துத் திருப்பயணிகளுக்கும் தனது அப்போஸ்தலிக்க ஆசிரை வழங்கினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
