தேடுதல்

உண்மையான மனித உறவுகள்தான் அமைதியின் அடித்தளம்!

விமானத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது 81 செய்தியாளர்களிடம் உரையாற்றிய திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், உலகளாவிய மோதல்கள், திருப்பீடத்தின் தூதரக உறவுகளுக்கான பணிகள், அவரது ஆன்மிகக் கண்ணோட்டம் மற்றும் எதிர்கால பயணத் திட்டங்கள் குறித்த தனது சிந்தனைகளைப் அவர்களுடன் பகிர்ந்துகொண்டார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

‘நான் ஓய்வு பெற நினைத்தேன், ஆனால் அதற்குப் பதிலாக கடவுளிடம் சரணடைந்தேன்’ என்று கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

டிசம்பர் 02, இச்செவ்வாயன்று, துருக்கி மற்றும் லெபனோன் நாடுகளுக்கான தனது ஆறு நாள் திருத்தூதுப் பயணத்தை முடித்துக்கொண்டு இத்தாலிய விமானத்தில் உரோமைக்குத் திரும்பிக்கொண்டிருந்த வேளை, செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை.

திருத்தந்தையாக தான் தேர்வு செய்யப்படுவதற்கு முன்பு ஓய்வு பெறுவது பற்றி யோசித்ததாகவும், ஆனால் இறுதியில் கடவுளிடம் சரணடைந்து அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதாகவும் செய்தியாளர்களிடம் கூறிய திருத்தந்தை, இதனை வெளிப்படையாக கூறவிரும்புவதாகவும் தெரிவித்தார்.  

அமைதி முயற்சிக்குப் பின்னால் திருப்பீடம்

இஸ்ரேலுக்கும் லெபனோனுக்கும் இடையில் மீண்டும் தொடங்கிய வன்முறைக்குப் பிறகு, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தலைவர்களுடனான உரையாடல்கள் உட்பட, மத்திய கிழக்கு முழுவதும் அமைதி முயற்சிகளில் வத்திக்கான் விவேகத்துடன் ஈடுபட்டுள்ளது என்று கூறினார் திருத்தந்தை.

ஹெஸ்பொல்லாவிடமிருந்து செய்தி ஒன்றைப் பார்த்ததை உறுதிப்படுத்திய திருத்தந்தை, ஆனால் அதுபற்றி மேலும் தான் கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை என்றும், அதற்குப் பதிலாக அனைத்துத் தரப்பினரும் ஆயுதங்களைக் கைவிட்டு பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும் என்ற திருஅவையின்  அழைப்பை மீண்டும் வலியுறுத்தினார்.

உக்ரைன்: ஐரோப்பாவும் இத்தாலியும் முக்கிய பங்கு வகிக்க வேண்டும்

உக்ரைன் போரைப் பற்றி குறிப்பிட்ட திருத்தந்தை, திருப்பீடம் நேட்டோ அல்லது நடந்துகொண்டிருக்கும் பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாக இல்லை என்றும், ஆனால் உடனடி போர்நிறுத்தத்திற்கு தொடர்ந்து அழைப்பு விடுப்பதாகவும் கூறினார்.

மேலும் ஆயுத உற்பத்தி, சைபர் தாக்குதல்கள் மற்றும் குளிர்காலம் தொடர்பான எரிசக்தி அழுத்தங்கள் உள்ளிட்ட மோதலின் பல அம்சங்கள் குறித்து எச்சரித்தார் திருத்தந்தை.

அமைதித் திட்டத்தை முன்மொழிவதற்கான அமெரிக்காவின் முயற்சிகள் தொடக்கத்தில் ஐரோப்பாவை ஓரங்கட்டியதாக குறிப்பிட்ட திருத்தந்தை, ஆனால் இந்த அணுகுமுறை ஏற்கனவே மாறி வருவதாகவும், கியேவ், மாஸ்கோ மற்றும் வாஷிங்டன் இடையே இத்தாலி, ஒரு முக்கியமான இடையீட்டாளராக செயல்படக்கூடும் என்றும் பரிந்துரைத்தார்.

திருத்தந்தைக்கான தேர்தல்

திருத்தந்தையின் தேர்வின்போது கர்தினால்கள் அவையில் அவர் பெற்ற அவரது அனுபவம் குறித்து கேட்டபோது, ​​அதன் இரகசியத்தை உடைக்க மறுத்துவிட்ட திருத்தந்தை, கடவுளிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்ததன் வழியாக தேர்தலின் சாத்தியத்தை அணுகியதாகக் கூறினார்.

 "The Practice of the Presence of God" என்ற ஆன்மிகப் படைப்பு குறித்த நூலை மேற்கோள் காட்டி, இதன் கருப்பொருளான 'சரணடைதல்' என்பது தனது வாழ்நாள் முழுவதும் இறையழைத்தலுக்கான அணுகுமுறையை பிரதிபலிக்கிறது என்பதை விளக்கினார். அதாவது, ஒருவர் தனது வாழ்க்கையை முழுவதுமாக இறைவனுக்குக் கொடுத்து, அவர் தன்னை வழிநடத்த அனுமதிக்கிறார் என்றார்.

வெனிசுலா மீதான எதிர்கால பயணத் திட்டங்களும் அக்கறைகளும்

வரவிருக்கும் பயணங்கள் எதுவும் உறுதி செய்யப்படவில்லை என்றாலும், தனது அடுத்த பெரிய பயணம் ஆப்பிரிக்காவிற்கு இருக்கும் என்று நம்புவதாகக் கூறிய திருத்தந்தை, அதில் அல்ஜீரியா மற்றும் புனித அகுஸ்தினாருடன் இணைக்கப்பட்ட தளங்களுக்கான வருகையும் அடங்கும் என்றும், எதிர்காலத்தில் அர்ஜென்டினா, உருகுவே மற்றும் பிற இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்குச் செல்ல விருப்பம் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

வெனிசுலாவைப் பொறுத்தவரை, அரசுத் தலைவர்  நிக்கோலஸ் மதுரோ மீதான அமெரிக்காவின் அழுத்தம் குறித்து கவலை தெரிவித்த திருத்தந்தை, எந்தவொரு சாத்தியமான இராணுவத் தலையீடும் சாதாரண மக்களின் துன்பத்தை மோசமாக்கும் என்று எச்சரித்ததுடன், பேச்சுவார்த்தை மட்டுமே அமைதிக்கான சாத்தியமான பாதையாக உள்ளது என்று  குறிப்பிட்டார்

இஸ்லாம், கிறிஸ்தவ அடையாளம் மற்றும் ஐரோப்பா

இஸ்லாம் குறித்து சில ஐரோப்பிய கத்தோலிக்கர்களிடையே நிலவும் பதட்டங்களுக்கு பதிலளித்த திருத்தந்தை, பயம் சார்ந்த கதைகளுக்கு எதிராக வலியுறுத்தினார்.

லெபனோனில் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான சகவாழ்வு ஒரு முக்கியமான பாடத்தை அளிக்கிறது என்றும், மத்திய கிழக்கு, முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையிலான உரையாடலும் நட்பும் சாத்தியம் என்பதை நிரூபிக்கிறது என்றும் கூறினார் திருத்தந்தை.

ஜெர்மன் சினோடல் வழி: சிதைவு இல்லாத கலாச்சாரம்

ஜெர்மன் தலத்திருஅவையில் விவாதிக்கப்பட்ட சீர்திருத்தங்கள் குறித்து திருத்தந்தை கூறுகையில், உலகம் முழுவதும் ஒன்றிணைந்த பயணம் (synodality) வெவ்வேறு வடிவங்களை எடுக்கிறது என்றும், அது முறிவுக்கு வழிவகுக்காது என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

ஆனால் சில ஜெர்மன் கத்தோலிக்கர்கள் தங்களின் குரல்கள் கேட்கப்படாததாக உணர்கிறார்கள் என்று எச்சரித்த அவர், ஜெர்மன் ஆயர்களுக்கும் வத்திக்கானுக்கும் இடையே ஆழமான உள் உரையாடல் மற்றும் தொடர்ச்சியான ஒருங்கிணைப்புக்கு அழைப்பு விடுத்தார்.

மத்திய கிழக்கிலிருந்து ஒரு கொடையாக ஒன்றிப்பு

மத்திய கிழக்கின் துன்புறும் திருச்சபைகள் பரந்த உலகிற்கு என்ன மாதிரியான செய்தியை வழங்குகின்றன என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, போர் மற்றும் இடப்பெயர்வுக்கு மத்தியில் மனிதத் தொடர்புக்கு (மனித உறவுக்கு) அவர்கள் அளித்த சாட்சியத்தை அவர்களிடம் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

எண்மமுறை (டிஜிட்டல்) தனிமைப்படுத்தலால் குறிக்கப்பட்ட இக்காலத்தில், சமூகம், இரக்கம் மற்றும் பகிரப்பட்ட மீள்தன்மை ஆகியவை உலகளவில் ஒன்றிப்புணர்வை மீட்டெடுக்க உதவும் என்று அவர்கள் வலியுறுத்துவதாகவும் கூறினார் திருத்தந்தை.

இறுதியாக, "உண்மையான மனித உறவுகள்தான் அமைதியின் அடித்தளம்" என்று கூறி செய்தியாளர்களுடனான சந்திப்பை நிறைவு செய்தார் திருத்தந்தை

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 டிசம்பர் 2025, 13:49