திருத்தந்தையுடன் உக்ரைன் அதிபர் சந்திப்பு!
ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்
உக்ரைன் மற்றும் இரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையேயான சாத்தியமான பேச்சுவார்த்தைகளுக்கான களமாக திருப்பீடம் செயல்படத் தயாராக உள்ளது என்று கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
டிசம்பர் 9, இச்செவ்வாயன்று, திருத்தந்தையர்களின் கோடைவிடுமுறை இல்லமான காஸ்தல் கந்தோல்போவில் உக்ரைன் அதிபர் வலோடிமிர் ஜெலென்ஸ்கி அவர்களைச் சந்தித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை.
மேலும், தற்போதைய தூதரக உறவுக்கான முயற்சிகள் நீதியான மற்றும் நீடித்த அமைதிக்கு வழிவகுக்கும் என்று கூறிய திருத்தந்தை கடத்தப்பட்ட உக்ரைனியக் குழந்தைகள் தங்கள் குடும்பங்களிடம் பாதுகாப்பாகத் திரும்புவதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இருவருக்குமிடையேயான இந்தச் சந்திப்பு முக்கியமாக உக்ரைனில் நடந்து வரும் போர் குறித்து விவாதிக்கப்பட்டது என்று திருப்பீடச் செய்தித் தொடர்பகம் தெரிவித்துள்ளது.
திருத்தந்தை கடந்த ஜூலை மாதம் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியைச் சந்தித்தபோது, உக்ரைன் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்காக தனது ஆறுதலைத் தெரிவித்தார் என்றும், அம்மக்களுக்காக, தான் தொடர்ந்து இறைவேண்டல் செய்வதாக உறுதியளித்தார் என்றும் திருப்பீடச் செய்தித் தொடர்பகம் கூறியுள்ளது.
இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி அவர்கள், கடத்தப்பட்ட உக்ரேனியக் குழந்தைகளை மீட்டுக்கொண்டு வரும் முயற்சியில் திருத்தந்தை தனது ஆதரவை வழங்கியதற்காக நன்றி தெரிவித்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
