மனிதரின் மாண்புக்கு மரியாதை அளியுங்கள்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
“மனிதரின் மாண்புக்கு மரியாதை அளியுங்கள்” என்றும், “பாதுகாப்பு நடவடிக்கைகள் இந்த அடிப்படை பரிமாணத்தை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது, மேலும் ஒவ்வொரு தனிநபரின் மாண்பையும் உரிமைகளையும் மதிக்கத் தவறக்கூடாது” என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
டிசம்பர் 12, வெள்ளியன்று, திருப்பீடத்தில் இத்தாலிய அரசின் தகவல் பாதுகாப்பு அமைப்பின் உறுப்பினர்களுக்கு வழங்கிய உரையின்போது இவ்வாறு தெரிவித்த திருத்தந்தை, இந்நாட்டின் உளவுத்துறை பணிகளின் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வகையில், தொழில்முறைத் திறனை வலுவான நெறிமுறைக் கொள்கைகளுடன் இணைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
“முதலில் நீங்கள் மேற்கொள்ளும் பணிக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன், இதற்குத் திறமை, வெளிப்படைத்தன்மை மற்றும் விவேகம் தேவை” என்று கூறிய திருத்தந்தை, “எல்லாவற்றிற்கும் மேலாக அமைதியைப் பாதுகாப்பதில் பங்களிக்கும் வகையில், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஆபத்துகளைத் தொடர்ந்து கண்காணிக்கும் பெரும் பொறுப்பை இது உங்களுக்கு வழங்குகிறது” என்றும் கூறினார்.
“இது மிகவும் கடினமான பணி என்றும், அதன் இரகசிய தன்மை காரணமாக, பெரும்பாலும் கையாளப்படும் ஆபத்து உள்ளது” என்றும் கூறிய திருத்தந்தை, “இருப்பினும் சமூகத்தில் ஏற்படவிருக்கும் ஆபத்தான சூழ்நிலைகளை முன்கூட்டியே கணிப்பதில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது” என்றும் சுட்டிக்காட்டினார்.
திருத்தந்தை தனது உரையில் மனித மாண்பு, தகவல் தொடர்பு அறநெறிகள் ஆகிய இரண்டு தலைப்புகளின்கீழ் தனது சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டார்.
01. மனிதரின் மாண்புக்கு மரியாதை அளியுங்கள்
“மனிதரின் மாண்புக்கு மரியாதை அளியுங்கள்” என்றும், “பாதுகாப்பு நடவடிக்கைகள் இந்த அடிப்படை பரிமாணத்தை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது, மேலும் ஒவ்வொரு தனிநபரின் மாண்பையும் உரிமைகளையும் மதிக்கத் தவறக்கூடாது” என்றும் கேட்டுக்கொண்டார்
“கடினமான சூழ்நிலைகளில், பொது நன்மைக்காக மற்ற அனைத்தையும் ஒதுக்கி வைக்க வேண்டியிருக்கும் போது, இந்த அறநெறிமுறை கோரிக்கையை மறந்துவிடும் ஆபத்து உள்ளது” என்றும், மேலும் “சமநிலையைக் கண்டறிவது எப்போதும் எளிதானது அல்ல” என்றும் அவர்களுக்கு எடுத்துக்காட்டினார்.
“சட்டம் வழியாக மக்களாட்சிக்கான ஐரோப்பிய ஆணையம் கூறியபடி, பாதுகாப்பு நிறுவனங்கள் பெரும்பாலும் மக்களைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்க வேண்டியிருக்கும், காரணம் அவர்களின் உரிமைகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன” என்றும் குறிப்பிட்டுக்காட்டினார்.
“அப்படியானால், மனித மாண்பின் அளவுகோலின்படி வரம்புகள் நிறுவப்படுவதும், உங்களைப் போன்றவர்கள் ஈடுபட்டுள்ள இந்தப் பணியில் வெளிப்படும் சோதனைகளுக்கு எதிராக விழிப்புடன் இருப்பது அவசியம்” என்றும் அறிவுறுத்தினார் திருத்தந்தை.
“உங்கள் செயல்கள் எப்போதும் அடையப்பட வேண்டிய பொது நன்மைக்கு சரியான அளவு விகிதத்தைக் கொண்டிருப்பதையும், தேசிய பாதுகாப்பு எப்போதும் மக்களின் உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிப்பதையும் உறுதி செய்யக்கூடியதாக இருக்க வேண்டும்” என்றும் விண்ணப்பித்தார் திருத்தந்தை.
“இந்த அர்த்தத்தில், பணிகளின் செயல்பாடுகள் முறையாக அறிவிக்கப்பட்டு வெளியிடப்பட்ட சட்டங்களால் நிர்வகிக்கப்பட வேண்டும், நீதித்துறை மேற்பார்வைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்” என்றும், மேலும் “வெளிப்படையான பொதுக் கட்டுப்பாடுகள் மூலம் வரவு செலவுகளைப் பற்றிய அறிக்கைகள் சரிபார்க்கப்பட வேண்டும்” என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை.
02. தகவல் தொடர்பு அறநெறிமுறை
“அண்மைய பத்தாண்டுகளில் தகவல் தொடர்பு உலகம் கணிசமாக மாறிவிட்டது” என்று தெரிவித்த திருத்தந்தை, “இன்று எண்மமுறை புரட்சி நம் வாழ்வின் ஒரு பகுதியாக அமைந்துவிட்டது” என்றும், மேலும் “நாம் தகவல்களைப் பரிமாறிக்கொள்வதும் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்வதும் இதில் அடங்கும்” என்றும் விளக்கினார்.
“புதிய மற்றும் எப்போதும் மேம்பட்ட தொழில்நுட்பங்களின் வருகை அதிக சாத்தியக்கூறுகளை வழங்குகிறது, ஆனால் அதேவேளையில் நம்மை தொடர்ச்சியான ஆபத்துகளுக்கும் ஆளாக்குகிறது” என்று எச்சரித்தார் திருத்தந்தை.
“தொடர்ச்சியான தகவல் ஓட்டத்திற்கு, உண்மையிலிருந்து போலிச் செய்திகளை வேறுபடுத்துதல், தனியுரிமையைப் பாதுகாத்தல், முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதைத் தவிர்ப்பது, அச்சுறுத்தலைப் புரிந்துகொள்வது மற்றும் வெறுப்பு மற்றும் வன்முறையைத் தடுப்பது போன்ற முக்கியமான விடயங்களைப் பற்றிய கவனத்துடன் கூடிய விழிப்புணர்வுத் தேவைப்படுகிறது” என்றும் எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.
“அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் அல்லது குடிமைச் சமூகத்தில் உள்ள பிற குழுக்களை அவமதிக்கவோ, தவறாகக் கையாளவோ, அச்சுறுத்தவோ அல்லது இழிவுபடுத்தவோ இரகசியத் தகவல்கள் பயன்படுத்தப்படாமல் இருப்பதை நாம் கண்டிப்பாக உறுதி செய்ய வேண்டும், இது திருஅவைத் துறைக்கும் பொருந்தும்” என்றும் குறிப்பிட்டார்.
“உண்மையில், பல்வேறு நாடுகளில், தவறான நோக்கங்களுக்காகச் செயல்படும் உளவுத்துறை பணிகளால், அதன் சுதந்திரத்தை ஒடுக்குவதால், திருஅவைப் பாதிக்கப்பட்டுள்ளது” என்றும், “இந்த ஆபத்துகள் எப்போதும் மதிப்பிடப்பட வேண்டும், மேலும் அத்தகைய வேலையைச் செய்யத் தயாராகி வருபவர்களிடமும், அதில் நீண்டகாலமாக ஈடுபட்டுள்ளவர்களிடமும் உயர்ந்த ஒழுக்க நிலை தேவை” என்றும் கேட்டுக்கொண்டார்.
இறுதியாக, “திருப்பீடம் மற்றும் வத்திக்கான் நகரத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதில் இத்தாலிய உளவுத்துறையின் முயற்சிகளுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறிய திருத்தந்தை அவர்களுக்குத் தனது ஆசீரை வழங்கி தனது உரையை நிறைவு செய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
