தேடுதல்

பங்கேற்பாளர்களுடன் திருத்தந்தை பங்கேற்பாளர்களுடன் திருத்தந்தை   (ANSA)

உரையாடல் மற்றும் அமைதியின் தூதர்களாகத் திகழ்ந்திடுங்கள்!

"மோதலால் காயமடைந்த உலகில், நாம் குற்றச் செயல்களை நிராகரித்து, அமைதியை வளர்க்கும் உரையாடலுக்கு உறுதியளிக்க வேண்டும்" : திருத்தந்தை பதினான்காம் லியோ

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

"இத்தாலிய தூதரகத்தின் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இன்று உங்களை வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்றும், "புனித கதவின் வழியாக நீங்கள் மேற்கொண்ட உங்கள் திருப்பயணம் நமது பகிரப்பட்ட நம்பிக்கையை குறிக்கிறது, இது ஓர் உறுதியற்ற வேட்கை அல்ல, ஆனால் நன்மை மற்றும் நீதிக்கான உறுதியான நாட்டம்" என்றும் கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

டிசம்பர் 13, சனிக்கிழமையன்று, இத்தாலிய தூதரகத்தின் ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொள்ளும் அதன் பங்கேற்பாளர்களுக்கு வழங்கிய உரையில் இவ்வாறு கூறிய திருத்தந்தை, தூதரக உறவுகளின் மேன்மையைக் குறித்து அவர்களுடன் பகிர்ந்துகொண்டார்.

"தூதரக உறவுகளில், நம்பிக்கை மிக முக்கியமானது. கடினமான காலங்களில் கூட, தொடர்ந்து உரையாடலைத் தேட இது நம்மைத் தூண்டுகிறது" என்று கூறிய திருத்தந்தை, "ஒப்பந்தங்கள் ஒன்றுக்கொன்றான ஒப்பந்தத்தால் முத்திரையிடப்படுவது போல, உண்மையான தூதரக உறவு சுயநலம் அல்லது போட்டியை அடிப்படையாகக் கொண்டது அல்ல, நேர்மையை அடிப்படையாகக் கொண்டது" என்றும் குறிப்பிட்டார்.

"ஒப்புரவையும் அமைதியையும் வெளிப்படுத்திய இயேசுவின் முன்மாதிரியை நாம் நோக்குகிறோம்" என்றும், "அவரைப் பின்பற்றுபவர்களாகிய நாமும், நம்பிக்கை, புரிதல் மற்றும் பொதுவான தளத்தைத் தேடுதல் ஆகியவற்றின் மதிப்பீடுகளால் வழிநடத்தப்பட்டு, உரையாடலை வளர்க்க அழைக்கப்படுகிறோம்" என்றும் எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.

"பன்முக கலாச்சார உலகில், உரையாடல் மொழி அவசியம்" என்றும், "இது ஒருவருக்கொருவர்மீதான மரியாதையை உருவாக்குகிறது மற்றும் ஒருங்கிணைப்பை ஊக்குவிக்கிறது" என்றும் கூறிய திருத்தந்தை, "பன்னாட்டு அரங்கில், நேர்மை மற்றும் புரிதலில் நம்மையே நாம் பயிற்றுவிக்கும்போது, இந்த அணுகுமுறை ஒத்துழைப்பையும் அமைதியையும் வளர்க்கும்" என்றும் விளக்கினார்.

"கிறிஸ்தவர்களாகிய நாம் வார்த்தையின் மக்களாக இருக்க அழைக்கப்படுகிறோம், அதாவது, இது செவிசாய்த்து பதிலளிக்கும் மற்றும் அமைதியையும் குணப்படுத்துதலையும் உறுதி செய்கிற வார்த்தை" என்று சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.

மேலும் "இந்த வார்த்தைகள் வலிமை வாய்ந்தவை, அவை ஒன்றை பிரிக்கவோ அல்லது ஒன்றிணைக்கவோ முடியும்" என்றும் கூறிய திருத்தந்தை, "இவற்றில் நல்லிணக்கத்தை உருவாக்கும் மற்றும் பிரிவினைகளைச் சரிசெய்யும் வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றை நாம் அறிவார்ந்த விதத்தில் பயன்படுத்துவோம்" என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

"மோதலால் காயமடைந்த உலகில், நாம் குற்றச் செயல்களை நிராகரித்து, அமைதியை வளர்க்கும் உரையாடலுக்கு உறுதியளிக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை, "அறுபது ஆண்டுகளுக்கு முன்பு, திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்கள், ஐக்கிய நாடுகள் அவையில், "இனி போர் வேண்டாம், அமைதி மனிதகுலத்தை வழிநடத்த வேண்டும்" என்று கூறி அமைதிக்கு அழைப்பு விடுத்தார்" என்று சுட்டிக்காட்டினார்.

“தூதரக உறவுகளை வளர்ப்பவர்களாகிய உங்களை, உரையாடல் மற்றும் அமைதியின் தூதர்களாக இருக்க நான் ஊக்குவிக்கிறேன்” என்றும், “இத்தாலிய மற்றும் ஐரோப்பிய கலாச்சாரத்தின் மையத்தில் உள்ள கிறிஸ்தவ மனிதநேயத்தின் விழுமியங்களை உங்கள் பணி பிரதிபலிக்கட்டும்” என்று கூறிய திருத்தந்தை அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் தனது அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கி தனது உரையை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 டிசம்பர் 2025, 13:30