மகிழ்வின் அடையாளங்களாகத் திகழ்வோம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
"இந்த திருவருகைக் காலத்தில், ஆண்டவருடைய சீடர்களாகிய நாம், மீட்பருக்காக காத்திருப்பதையும், உலகில் கடவுள் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதைக் கவனத்தில் கொள்வதையும் ஒன்றிணைக்க அழைக்கப்பட்டுள்ளோம்" என்று கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
டிசம்பர் 14, ஞாயிறன்று, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு வழங்கிய நண்பகல் மூவேளை இறைவேண்டல் உரையில் இவ்வாறு உரைத்தார் திருத்தந்தை.
திருவருகைக் காலத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையின் நற்செய்தி வாசகத்தை (காண்க. மத் 11: 2-11) மையமாகக் கொண்டு தனது சிந்தனைகளை விசுவாசிகளுடன் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை.
திருமுழுக்கு யோவான் நம்பிக்கையின் அடையாளம்
தனது சிறந்த படிப்பினைகளுக்காக திருமுழுக்கு யோவான் சிறையில் அடைக்கப்பட்ட போதிலும், அவர் எவ்வாறு நம்பிக்கை மற்றும் விடாமுயற்சியின் அடையாளமாகத் திகழ்ந்தார் என்பதை எடுத்துரைத்த திருத்தந்தை, அவர் சங்கிலிகளால் கட்டப்பட்டிருந்த நிலையிலும் கூட, உண்மை மற்றும் நீதியைத் தேடுவதில் இறைவாக்குரைத்தல் ஒரு சுதந்திரமான குரலாகவே உள்ளது என்ற செய்தியை அவர் எவ்வாறு வெளிப்படுத்தினார் என்பதையும் விசுவாசிகளுக்கு எடுத்துக்காட்டினார்.
சிறையில் இருந்தபோது, திருமுழுக்கு யோவான் கிறிஸ்துவின் செயல்களைப் பற்றிக் கேள்விப்பட்டதாகவும், அவை அவர் எதிர்பார்த்ததை விட வேறுபட்டவையாக இருந்தன என்றும் விளக்கிய திருத்தந்தை, அதற்குப் பதிலளிக்கும் விதமாக, யோவான் இயேசுவிடம், "வரவிருப்பவர் நீர்தானா, அல்லது வேறொருவரை எதிர்பார்க்க வேண்டுமா?" என்று கேட்க தூதர்களை அனுப்பினார் (மத் 11:3) என்றும், உண்மை, நீதி, சுதந்திரம் மற்றும் அமைதியைத் தேடுபவர்கள் பெரும்பாலும் இயேசுவிடம் இவ்வாறு கேள்வி கேட்பதாகவும் குறிப்பிட்டார்.
இயேசுவின் செயல்கள் மீட்பைக் கொணர்ந்தன
இயேசு தனது பதிலில், தனது பணியின் பலன்களை அதாவது, அவரது அடையாளத்தை வெளிப்படுத்தும் செயல்களான, பார்வையற்றோர் பார்வை பெறுகின்றனர்; கால் ஊனமுற்றோர் நடக்கின்றனர்; தொழுநோயாளர் நலமடைகின்றனர்; காது கேளாதோர் கேட்கின்றனர்; இறந்தோர் உயிர்பெற்று எழுகின்றனர்; ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது என்பதை சுட்டிக்காட்டுகின்றனர் என்று மொழிந்த திருத்தந்தை, இயேசுவின் இந்தச் செயல்கள் அவரால் கொண்டுவரப்பட்ட மீட்பை நிரூபிக்கின்றன என்பதை வலியுறுத்துகிறது என்றும் விவரித்தார்.
மேலும் ஏழைகளுக்கு அறிவிக்கப்பட்ட நற்செய்தியான இயேசுவின் உண்மையான நற்செய்தி இதுதான் என்று அடிக்கோடிட்டுக் காட்டிய திருத்தந்தை, கடவுள் உலகிற்கு வரும்போது, அது வாழ்க்கையின் மாற்றத்தில் தெளிவாகத் தெரிகிறது என்றும் கூறினார்.
துன்ப சிறையிலிருந்து மீட்கும் இயேசுவின் வார்த்தை
விரக்தி மற்றும் துன்பத்தின் சிறையிலிருந்து, இயேசுவின் வார்த்தையே நம்மை விடுவிக்கிறது என்று தொடர்ந்து கூறிய திருத்தந்தை, "ஒவ்வொரு இறைவாக்கும் அவரில் நிறைவேறுகிறது" என்றும், கிறிஸ்து கடவுளின் மகிமைக்கு நம் கண்களைத் திறக்கிறார், ஒடுக்கப்பட்டவர்களுக்கு குரல் கொடுக்கிறார், வெறுப்பு மற்றும் வன்முறையால் ஏற்பட்ட காயங்களை குணப்படுத்துகிறார், கிறிஸ்துவின் வழியாக, இதயத்தை இறப்பிற்கு இட்டுச் செல்லும் தீமையிலிருந்து மனிதகுலம் மீட்கப்படுகிறது என்றும் குறிப்பிட்டார்.
கிறிஸ்துவை நமது எதிர்நோக்காக அங்கீகரிப்போம்
திருவருகைக் காலத்தின் மூன்றாவது ஞாயிறு அல்லது மகிழ்வின் ஞாயிறைக் கொண்டாடும் வேளையில், மீட்பருக்காக காத்திருப்பதையும், உலகில் கடவுள் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதைக் கவனத்தில் கொள்வதையும் ஒன்றிணைக்குமாறு விசுவாசிகளை ஊக்குவித்தார் திருத்தந்தை
மேலும் வாழ்க்கை அர்த்தத்தை இழப்பது போல் தோன்றும் சோதனைக் காலங்களில், கிறிஸ்துவை நம் எதிர்நோக்காக அங்கீகரிப்பதன் மூலம் மகிழ்ச்சி வருகிறது என்பதை அவர் அனைவருக்கும் நினைவூட்டினார்.
நமது எதிர்நோக்கான இயேசுவுடன் மகிழ்வோம்
"ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள்" (பிலி 4:4) என்று கூறிய புனித பவுலடியாரின் வார்த்தைகளை மேற்கோள் காட்டிய திருத்தந்தை, "இயேசு நம் எதிர்நோக்காக இருப்பதால், குறிப்பாக வாழ்க்கையின் இருள் சூழ்ந்த நேரங்களில், வார்த்தைகளைக் கண்டுபிடிப்பது கடினமாக இருக்கும்போதும், நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்குச் செவிசாய்க்க நாம் சிரமப்படும்போதும், நாம் மகிழ்வடைவோம் என்றும் கூறினார்.
காத்திருப்பு, விழிப்பு மற்றும் மகிழ்ச்சிக்கு தகுந்த எடுத்துகாட்டகத் திகழும் புனித அன்னை கன்னி மரியாவின் பராமரிப்பில் விசுவாசிகளை ஒப்படைப்பதாகவும், ஏழைகளுடன் உணவையும் நற்செய்தியையும் பகிர்ந்து கொள்வதன் வழியாக அவரது மகனின் பணியைப் பின்பற்ற அவர் நமக்கு உதவ வேண்டும் என்று இறைவேண்டல் செய்து தனது மூவேளை உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
