புனித சார்பெல் கல்லறையில் திருத்தந்தையின் இறைவேண்டல்!
ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்
அன்புநிறைந்த சகோதரர் சகோதரிகளே,
புனித சார்பெல் மக்லூஃப் கல்லறைக்கு திருப்பயணியாக வர எனக்கு வாய்ப்பளித்த கடவுளுக்கு நான் நன்றி செலுத்துகிறேன். எனது முன்னோடிகள் குறிப்பாக அவருக்கு அருளாளர் மற்றும் புனிதர் பட்டம் அளித்த புனித ஆறாம் பவுல் அவர்கள் இதே செயலைச் செய்ய மிகவும் விரும்பி இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
அன்பு நண்பர்களே, புனித சார்பெல் இன்று நமக்கு கற்பிப்பது என்ன? எந்நூலையும் எழுதியிராத, தனிமை மற்றும் அமைதியான வாழ்க்கை வாழ்ந்த, ஆனால் உலகம் முழுவதும் புகழ் பெற்ற இவரின் பாரம்பரியம் என்ன?
இங்கே அவரது பாரம்பரிய குறித்த விளக்கத்தை கூற விரும்புகிறேன். தூய ஆவியானவர் அவரை வடிவமைத்ததன் மூலம் கடவுளை அறியாத மக்களுக்கு இறைவேண்டல் செய்யும் வழியைக் காட்டவும், இரைச்சலில் மூழ்கியிருப்போர் அமைதியைக் கடைப்பிடிக்கக் கற்பிக்கவும், ஆடம்பரத்தில் வாழ்வோர் பணிவுடன் வாழ வழிகாட்டவும், செல்வத்தைத் தேடுவோர் வறுமையில் வாழ வேண்டும் என்று உணர்த்தவும் அவரால் முடிந்தது. இந்த நடத்தைகள் அனைத்தும் கலாச்சாரத்திற்கு எதிரானவை என்றாலும், பாலைவனத்தில் நடப்பவர்களை புதிய, தூய நீர் ஈர்ப்பது போல அவை நம்மைத் ஈர்க்கின்றன.
திரு அவையின் ஆயர்கள் மற்றும் திருநிலைப்படுத்தப்பட்ட அருள்பணியாளர்களாகிய நமக்கு, நமது இறையழைத்தலின் நற்செய்தியை மையப்படுத்திய கோரிக்கைகளை புனித சார்பெல் அவர்கள் நினைவூட்டுகிறார். அதேநேரத்தில், அவரது மன உறுதி, எவ்வளவு ஆழமானதாக இருந்தது என்பது அனைத்துக் கிறிஸ்தவர்களுக்கும் ஒரு செய்தியாக அமைத்துள்ளது.
புனித சார்பெல் அவர்களின் பாரம்பரியத்தில் இன்னொரு முக்கியமான அம்சம் உள்ளது. அது என்னவென்றால், எல்லா நன்மைகளுக்கும் அருளுக்கும் ஊற்றாகிய நம்முடைய இறைத்தந்தையிடம், நமக்காகப் பரிந்து பேசுவதை ஒருபோதும் அவர் நிறுத்துவதில்லை என்பதுதான். அவர் மண்ணுலக வாழ்வு வாழ்ந்தபோது, அவரிடமிருந்து ஆறுதலையும், மன்னிப்பையும், இறைவனிடமிருந்து வரும் அறிவுறுத்தல்களையும் பெற்றுக்கொள்ள பலர் அவரிடம் சென்றனர்.ஆனால் புனித சார்பெல் இறைபதமடைந்த பிறகு அவருடைய பணி பல மடங்கு பெருகி, இரக்கத்தின் நதியைப் போல ஆனது.
இந்தக் காரணத்தினால்தான், ஒவ்வொரு மாதமும் இருபத்தி இரண்டாம் தேதி, பல்வேறு நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான திருப்பயணிகள் இங்கு வந்து, ஒரு நாள் இறைவேண்டலில் செலவிட்டு, தங்கள் ஆன்மாக்களையும் உடல்களையும் புதுப்பித்துக் கொள்கின்றனர்.
சகோதரர், சகோதரிகளே நாம் இன்று திரு அவை, லெபனோன் தலத்திருஅவை மற்றும் உலகத்தின் தேவைகளை புனித சார்பெல்லியின் பரிந்துரை செபத்தில் ஒப்படைப்போம். இதயங்களில் மனமாற்றம் இல்லாமல் அமைதி இல்லை என்பதை அனைத்துப் புனிதர்களும் நமக்கு நினைவூட்டுகிறார்கள். எனவே, நாம் கடவுளிடம் திரும்பவும், நம் அனைவருக்கும் மனமாற்றத்தின் வரத்தைக் கேட்கவும் புனித சார்பெல் நமக்கு உதவுவாராக!
அன்பு நண்பர்களே, புனித சார்பெல் மூலமாக கடவுள் இங்கே ஏற்றிய ஒளியின் சின்னமாக, நான் ஒரு விளக்கை கொடையாக இங்குக் கொண்டு வந்துள்ளேன். இந்த விளக்கை நான் அளிப்பதன் மூலம், லெபனோனையும் அந்நாட்டு மக்களையும் புனித சார்பெல்லின் பாதுகாப்பில் ஒப்படைக்கிறேன், அதனால் அவர்கள் எப்போதும் கிறிஸ்துவின் ஒளியில் நடப்பார்களாக!
நாம் கொடையாகப் பெற்ற புனித சார்பெல்லுக்காக கடவுளுக்கு நன்றி செலுத்துகிறோம். அவருடைய நினைவை உள்ளத்தில் கொண்டுள்ள உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்கிறேன். கடவுளின் ஒளியில் தொடர்ந்து நடந்திடுங்கள்!
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
