தேடுதல்

திருத்தந்தை திருத்தந்தை   (ANSA)

துருக்கி மற்றும் லெபனோன் திருத்தூதுப் பயணத்தால் அமைதி சாத்தியமாகும்!

துருக்கியில், திருத்தந்தை லியோ அவர்கள் நீசேயா திருச்சங்கத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தில், கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயு மற்றும் பல்வேறு திருச்சபைகளின் தலைவர்களுடன் இணைந்து இறைவேண்டல் செய்தார்.

ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்

அண்மையில் துருக்கி மற்றும் லெபனோன் நாடுகளுக்கு தான் மேற்கொண்ட திருத்தூதுப் பயணம், நம்பிக்கைகள் மற்றும் கலாச்சாரங்களைக்  கடந்து மக்கள் இணைந்து செயல்படும்போது அமைதி சாத்தியமாகும் என்பதை வலியுறுத்தியதாகக் கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

டிசம்பர் 07, இஞ்ஞாயிறு, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விசுவாசிகளுக்கு வழங்கிய நண்பகல் மூவேளை இறைவேண்டல் உரையின் இறுதியில் இவ்வாறு உரைத்தார் திருத்தந்தை.

மேலும் துருக்கியின் கத்தோலிக்க சமூகம் மேற்கொண்ட  உரையாடல் மற்றும் சேவைக்காக பாராட்டு தெரிவித்த திருத்தந்தை, அந்நாட்டை ‘இணைவாழ்வின் பல்வண்ணக் கூட்டமைப்பு' (mosaic of coexistence) என்று வர்ணித்தார்.

பெய்ரூத் துறைமுகத்தில் இடம்பெற்ற  குண்டு வெடிப்பால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களைச் சந்தித்தபோது தனது ஆறுதலை அவர்களுடன் பகிர்ந்துகொண்டதாகக் கூறிய திருத்தந்தை, இடம்பெயர்ந்தவர்கள், கைதிகள் மற்றும் ஏழைகள்மேல் அம்மக்கள் கொண்டுள்ள அர்ப்பணிப்பால் தான் உத்வேகம் பெற்றதாகக் கூறினார்.

கிறிஸ்தவர்கள், மற்றும் பிற மதங்களைச் சேர்ந்த மக்களுடன் இணைந்து, அமைதியை உருவாக்க உதவ முடியும் என்ற தனது நம்பிக்கையை, வலுப்படுத்தியதாக கூறினார் திருத்தந்தை.

துருக்கியில், திருத்தந்தை லியோ அவர்கள் நீசேயா திருச்சங்கத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தில், கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயு மற்றும் பல்வேறு திருச்சபைகளின் தலைவர்களுடன் இணைந்து இறைவேண்டல் செய்தார். இது கத்தோலிக்க மற்றும் ஆர்த்தடாக்ஸ் திருச்சபைகளுக்கு இடையே இருந்த ஒருவருக்கொருவர்மீதான திருஅவை விலக்குகளை (mutual excommunications) முடிவுக்குக் கொண்டு வந்த அறிவிப்பின் 60-வது ஆண்டு நிறைவைக் குறித்தது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 டிசம்பர் 2025, 14:56