தேடுதல்

திருத்தந்தை திருத்தந்தை   (ANSA)

கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான இறைவேண்டல் வாரம்!

அனைத்துக் கத்தோலிக்கச் சமூகங்களும், கிறிஸ்தவர்களிடையே முழுமையான மற்றும் வெளிப்படையான ஒன்றிப்பு நிலவ வேண்டி, இந்த இறைவேண்டல் நாள்களில் விசுவாசிகள் ஈடுபாட்டுடன் இறைவனிடம் தங்கள் மன்றாட்டுகளை எழுப்புமாறு அழைப்பு விடுத்தார் திருத்தந்தை.

ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்

ஜனவரி 18, ஞாயிறன்று, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான விசுவாசிகளுக்கு வழங்கிய நண்பகல் மூவேளை இறைவேண்டல் உரையின் இறுதியில், கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான இறைவேண்டல் வாரம் குறித்துக் குறிப்பிட்டார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

மேலும் இந்தக் கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான இறைவேண்டல் வாரத்தின் தோற்றம் குறித்து நினைவு கூர்ந்த திருத்தந்தை, அனைத்துக் கிறிஸ்தவர்களும் ஒரே குடும்பமாக ஒன்றிணைந்து வாழ ஆர்வத்துடன் இறைவேண்டல் செய்யுமாறு விசுவாசிகளைக் கேட்டுக்கொண்டார்.

கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான இறைவேண்டல் வாரத்தின் இந்த முயற்சி திருத்தந்தை பதிமூன்றாம் லியோ அவர்களால் பெரிதும் ஊக்குவிக்கப்பட்டது என்றும், இது சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான இறைவேண்டல் வாரத்தின் பரிந்துரைகள் முதன்முறையாக இணைக்கப்பட்டதன் வழியாக  மேலும் வலுப்பெற்றது என்றும் கூறினார் திருத்தந்தை.

தூய பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட, 'நீங்கள் ஒரே எதிர்நோக்கு கொண்டு வாழ அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்; அந்த ஒரே எதிர்நோக்கு இருப்பது போல, உடலும் ஒன்றே, தூய ஆவியும் ஒன்றே' (எபே 4:4) என்னும் இறைவார்த்தைகள் இந்த இறைவேண்டல் வாரத்திற்கான கருப்பொருளாக அமைந்துள்ளன என்றும் தெரிவித்தார் திருத்தந்தை.

மேலும் "இந்த ஆண்டுக்கான இறைவேண்டல்கள் மற்றும் சிந்தனைகள், ஆர்மீனிய அப்போஸ்தலிக்கத் திருஅவையின் மதங்களுக்கு இடையேயான உறவுகளுக்கான துறையால் ஒருங்கிணைக்கப்பட்ட கிறிஸ்தவ ஒன்றிப்புக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்றும் கூறினார் திருத்தந்தை.

அனைத்துக் கத்தோலிக்கச் சமூகங்களும், கிறிஸ்தவர்களிடையே முழுமையான மற்றும் வெளிப்படையான ஒன்றிப்பு நிலவ வேண்டி, இந்த இறைவேண்டல் நாள்களில் விசுவாசிகள் ஈடுபாட்டுடன் இறைவனிடம் தங்கள் மன்றாட்டுகளை எழுப்புமாறு அழைப்பு விடுத்த திருத்தந்தை, இந்தக் கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான இறைவேண்டல் வாரம் ஜனவரி 25, ஞாயிறன்று நிறைவடையும் என்றும் தெரிவித்தார்.

புனித பவுல் மனமாற்றத் திருவிழாவின் வழக்கமான மரபுப்படி, திருத்தந்தை அவர்கள் அன்று மாலை உரோமை நேரப்படி 5:30 மணிக்கு புனித பவுல் பெருங்கோவிலில் நடைபெறும் மாலைத் திருப்புகழ் வழிபாட்டிற்குத் தலைமை தாங்குவார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 ஜனவரி 2026, 13:36