நீங்கள் பெற்றுக்கொண்ட தனிவரத்தை வாழ்ந்துகாட்டுங்கள்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
"தனிவரத்தைப் பெறும் ஒவ்வொரு சகோதரியும் சகோதரரும் அதை முழுமையாக வாழ அழைக்கப்படுகிறார்கள்" என்றும், "அது நிலையானதாக இல்லாது, ஒரு துடிப்பான மற்றும் படைப்பாற்றல் திறன் கொண்டதாக மாறுகிறது" என்றும் கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ
ஜனவரி 29, வியாழக்கிழமையன்று, 'ரெஞும் கிறிஸ்தி' (Regnum Christi) எனப்படும் அப்போஸ்தலிக்க வாழ்க்கைக் கழகங்களின் பொதுப் பேரவைகளின் பங்கேற்பாளர்களைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு தெரிவித்த திருத்தந்தை, அவர்கள் பெற்றுக்கொண்டுள்ள தனிவரத்தை ஆழப்படுத்தவும், நிர்வாகத்தைப் புதுப்பிக்கவும், உறவு ஒன்றிப்பை வலுப்படுத்தவும் கேட்டுக்கொண்டார்
தொடர்ந்து பொதுப் பேரவைக் குறித்துப் பேசிய திருத்தந்தை, "உங்களின் நம்பிக்கையைப் பரப்புவதற்கு தெளிவான அடையாளத்தைக் கொண்டிருப்பது முக்கியம்" என்றும், "நவீன கலாச்சாரத்தால் விழுங்கப்படுவதிலிருந்து உங்களைக் காத்துக்கொள்ளவதில் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்றும் அறிவுறுத்தினார்.
அவர்கள் ஒவ்வொருவரும் பெற்றுக்கொண்டுள்ள தனிவரத்தை 'தூய ஆவியாரின் உயிருள்ள கொடை' என்று விவரித்த திருத்தந்தை, "இது ஒவ்வொரு உறுப்பினராலும் அன்றாட வாழ்வில் மிகவும் ஆழமாக வாழ்ந்துக்கட்டப்பட வேண்டும்" என்று அவர்களிடம் வலியுறுத்தினார்.
"தலைவர்கள் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி மற்றவர்களை சுதந்திரமாகவும் பொறுப்புடனும் வழிநடத்தவும், பகிரப்பட்ட முடிவுகளை ஊக்குவிக்கவும், ஒவ்வொரு நிறுவனத்தின் தனித்துவமான உணர்வை மதிக்கவும் வேண்டும்" என்று அவர்களிடம் எடுத்துரைத்தார்.
"குழும ஒன்றிப்பைப் பொறுத்தளவில், 'ரெஞும் கிறிஸ்தி' குழுமம் இன்னும் அதிகமான ஒன்றிப்பை திருமுழுக்கின் மாண்பின் அடிப்படையில் அதன் பல்வேறு இறையழைத்தல்கள் மூலம் வெளிக்காட்ட வேண்டும்" என்று வலியுறுத்திய திருத்தந்தை, ஒன்றிப்பும் பன்முகத்தன்மையும் ஒன்றையொன்று பூர்த்தி செய்கின்றன என்ற அர்ப்பண வாழ்வின் (Vita consecrata) படிப்பினையையும் எடுத்துக்காட்டினார்.
இறுதியாக, பங்கேற்பாளர்களுக்குத் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்ட திருத்தந்தை, கடவுளின் வழிகளில் ஆழமான நம்பிக்கை கொண்டிருக்க ஊக்குவித்தும், அவர்களின் பணியை விடியற்காலையின் விண்மீனான அன்னை கன்னி மரியாவிடம் ஒப்படைத்தும் தனது உரையை நிறைவு செய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
