இரக்கப் பணிகளுடன் தாராளமான தவத்தையும் மேற்கொள்ளுங்கள்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
"இறைவேண்டல், நோன்பு மற்றும் தர்மம் மூன்றும் நம் வாழ்க்கையை ஒரு தனித்துவமான தலைசிறந்த படைப்பாக வடிவமைப்பதில் இறைவனுடனான நமது ஒத்துழைப்பைப் புதுப்பிக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பதினான்காம் லியோ
பிப்ரவரி 22, ஞாயிறன்று, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு வழங்கிய நண்பகல் மூவேளை இறைவேண்டல் உரையில் இவ்வாறு கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
இந்நாளில் திருஅவையில் சிறப்பிக்கப்பட்ட தவக்காலத்தின் முதல் ஞாயிறு குறித்த நற்செய்தி வாசகத்தை (காண்க. மத் 4: 1-11) மையமாகக் கொண்டு தனது கருத்துக்களை விசுவாசிகளுடன் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை
"பசி மற்றும் சோதனையுடன் போராடுவதன் மூலம், இயேசு மனித அனுபவத்தில் பங்கு கொள்கிறார்" என்றும், "தீமையை எவ்வாறு எதிர்ப்பது மற்றும் அலகையின் தந்திர வலைகளை எவ்வாறு அறுத்தெறிவது என்பதை நிரூபிக்கிறார்" என்றும் எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.
தவக்காலத்தை ஆன்மிகப் புதுப்பித்தல் மற்றும் தனிப்பட்ட மாற்றத்தின் காலமாகக் கருதி, இறைவேண்டல், நோன்பு மற்றும் தர்மம் செய்வதில் கவனம் செலுத்துமாறு கத்தோலிக்கர்களை ஊக்குவித்த திருத்தந்தை, "இந்தச் செயல்பாடுகள் தனிநபர்கள் தங்கள் வாழ்க்கையைத் தூய்மைப்படுத்தவும், பாவக் கறைகளை நீக்கவும், கடவுளிடம் நெருங்கி வரவும், முழு அன்பிற்கும் உண்மையான மகிழ்ச்சிக்கும் வழிவகுக்கும்" என்று வலியுறுத்தினார்.
அதேவேளையில், கடவுள் வழங்கும் நீடித்த மகிழ்ச்சிக்கு நிலையற்ற மாற்றாக செல்வம், புகழ் மற்றும் அதிகாரத்தின் சோதனைகளுக்கு எதிராக எச்சரித்தார் திருத்தந்தை.
தவம் மனிதகுலத்தை வளப்படுத்தவும் பலப்படுத்தவும் உதவுகிறது, தனிநபர்கள் அன்பில் வளரவும் கடவுளிடம் சரணடையவும் உதவுகிறது என்று படிப்பித்த திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அவர்களை மேற்கோள்காட்டினார் திருத்தந்தை.
மேலும் இரக்கப் பணிகளுடன் தாராளமான தவத்தையும் மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்த திருத்தந்தை, விசுவாசிகள் அமைதியாக இருக்க இடம் கொடுக்கவும், கடவுளின் வார்த்தையைப் பற்றி சிந்திக்கவும், குறிப்பாக வயதானவர்கள், ஏழைகள் மற்றும் நோயாளர்களிடம் இரக்கச் செயல்களில் ஈடுபடவும் வலியுறுத்தினார்.
இறுதியாக, விசுவாசிகளின் தவக்காலப் பயணத்தை அன்னை கன்னி மரியாவிடம் ஒப்படைத்து, இந்தப் புனிதமான அருளின் காலத்தில் அவரின் வழிகாட்டுதலையும் ஆதரவையும் மன்றாடி தனது மூவேளை இறைவேண்டல் உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
