தேடுதல்

திருத்தந்தையின் முதல் புதிய நூல் திருத்தந்தையின் முதல் புதிய நூல்  

அமைதியான இதயங்களால் மட்டுமே அமைதியைக் கட்டியெழுப்ப முடியும்!

திருத்தந்தை தனது முதல் புதிய நூலில், "அமைதி என்பது வெறும் இறைவேண்டல் அல்லது ஆன்மிகச் சிந்தனை மட்டுமல்ல" என்று சுட்டிக்காட்டியுள்ளதுடன், "குழந்தைகளுக்கு மற்றவர்களை மதிக்க கற்றுக்கொடுப்பது, தற்பெருமையை விட்டுவிடுவது, மௌனம், தியானம் மற்றும் செபத்திற்கு நேரம் ஒதுக்குவது மூலம் நாம் ஒவ்வொரு நாளும் பயிற்சி செய்ய வேண்டிய ஒன்று இது" என்று விவரித்துள்ளார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

"உங்களுக்கு அமைதி உரித்தாகுக!" (Peace Be with You!) என்ற தலைப்பில் தான் எழுதியுள்ள முதல் புதிய நூல் ஒன்றில், கடவுளிடமிருந்து வந்த கொடை மற்றும் தனிப்பட்ட பொறுப்பு ஆகிய இரண்டிலும் அமைதியின் தன்மையைப் பற்றி தனது சிந்தனைகளை வழங்கியுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

"உண்மையான அமைதி இதயத்தில் தொடங்குகிறது" என்றும், "மோதல் அல்லது சுயநலம் மூலம் அதை அடைய முடியாது" என்றும் தனது நூலில் கோடிட்டுக்காட்டியுள்ள திருத்தந்தை, கசப்பான தேசியவாதம் மற்றும் பேராசை ஆகியவை போர்க்களத்தில் போர்கள் தொடங்குவதற்கு முன்பே அமைதியை அழித்துவிடுகின்றன" என்றும், "அமைதியான உலகத்தை உருவாக்குவதற்குத் தனிப்பட்ட மாற்றம் முக்கியமானது" என்றும் வலியுறுத்தியுள்ளார்.

"நட்பின் வழியாக மட்டுமே யாரையும் அறிய முடியும்" என்ற புனித அகுஸ்தினாரின் உள்ளுணர்வை எடுத்துக்காட்டியுள்ள திருத்தந்தை, மனிதகுலம் ஒத்துணர்வையும் புரிதலையும் கடைப்பிடிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.

அமைதி என்பது கிறிஸ்துவின் பிறப்பின் போது வானதூதர்களால் முதன்முதலில் அறிவிக்கப்பட்ட கடவுளின் ஒரு கொடை என்பதை விசுவாசிகளுக்கு நினைவூட்டியுள்ள திருத்தந்தை, "சிலுவையில் இயேசுவின் தியாக மரணத்தின் மூலம், மனிதகுலம் கடவுளுடன் ஒப்புரவு செய்யப்பட்டது" என்று குறிப்பிட்டுள்ளார்.

கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையையும் அமைதியையும் வெளிப்படுத்தும் வகையில், நல்லெண்ணத்துடன் அமைதிக்காக உழைக்க விசுவாசிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை.

"அமைதி என்பது வெறும் இறைவேண்டல் அல்லது ஆன்மிகச் சிந்தனை மட்டுமல்ல" என்று சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை, "குழந்தைகளுக்கு மற்றவர்களை மதிக்க கற்றுக்கொடுப்பது, தற்பெருமையை விட்டுவிடுவது, மௌனம், தியானம் மற்றும் செபத்திற்கு நேரம் ஒதுக்குவது மூலம் நாம் ஒவ்வொரு நாளும் பயிற்சி செய்ய வேண்டிய ஒன்று இது" என்று விவரித்துள்ளார்.

மேலும் உலகளாவிய மோதல்களை எதிர்கொள்ளும் போது, ​​இறைவேண்டலை ஒரு வன்முறையற்ற பதிலாகவும், பொது நன்மையை மட்டுமே நாடும் வலிமையாகவும் ஊக்குவித்துள்ளார் திருத்தந்தை.

இறுதியாக, "அரசியல் தலைவர்களும் அனைத்துலகச் சமூகமும் உரையாடல், தூதரக உறவு மற்றும் மோதல் தீர்வை வளர்த்து, நீதியான மற்றும் நீடித்த அமைதியை நோக்கிச் செயல்பட வேண்டும்" என்று அழைப்பு விடுத்து தனது சிந்தனைகளை நிறைவு செய்துள்ளார் திருத்தந்தை.

ஹார்பர் காலின்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள இந்நூல் பிப்ரவரி 24 செவ்வாயன்று, ஆங்கிலம் பேசும் நாடுகளில் வெளியிடப்படுகிறது. கடந்த 2025-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட திருத்தந்தையின் முந்தைய படைப்பான “E Pace Sia!” இன் மொழிபெயர்ப்பான இந்த நூல், நமது பிளவுபட்ட உலகில் அமைதியின் ஆழமான பங்கை வலியுறுத்துகிறது. அவரது தொடக்க உரைகள், மறையுரைகள் மற்றும் செய்திகளைத் தாங்கி வந்துள்ளது இந்நூல்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 பிப்ரவரி 2026, 12:07