தேடுதல்

திருத்தந்தை திருத்தந்தை   (ANSA)

பிரேசிலில் வீட்டுவசதி நெருக்கடியில் உறுதியான நடவடிக்கைக்கு அழைப்பு!

இந்தத் தவக்கால பரப்புரை அரசு அதிகாரிகளை பயனுள்ள பொது வீட்டுவசதி கொள்கைகளை ஊக்குவிக்க உதவும் என்று தனது செய்தியில் நம்பிக்கை தெரிவித்துள்ள திருத்தந்தை, மிகவும் வலுக்குறைந்தவர்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்த கூட்டு முயற்சிகளுக்கு அழைப்புவிடுத்துள்ளார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

பிரேசிலில் தேவையில் இருப்போருக்கு, அவர்களின் மாண்பைப் போற்றும் வகையில் வீடுகளை வழங்குவதில் புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்பை  வலியுறுத்தியுள்ள திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், இந்தப் பிரச்சனையை ஓர் அழுத்தமான தார்மீக மற்றும் சமூகப் பொறுப்பு என்று விவரித்துள்ளார்.

பிரேசிலில் ஆண்டுதோறும் நிகழும் உடன்பிறந்த உறவு தவக்கால பரப்புரைக்காக பிப்ரவரி 11 தேதியிட்ட செய்தியில், தவக்காலத்தின் போது நடத்தப்பட்டு, 60 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டின் ஆயர் பேரவையால் ஏற்பாடு செய்யப்படும் இந்நிகழ்வில், இறைவேண்டலை உறுதியான செயலாக மாற்ற கத்தோலிக்கருக்கு அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை.

இந்த ஆண்டு தவக்கால பரப்புரை போதுமான வீட்டுவசதி இல்லாததால் அவதிப்படும் மக்களை மையமாகக் கொண்டுள்ளது என்பதை நினைவுகூர்ந்துள்ள திருத்தந்தை, புனித அகுஸ்தினாரை மேற்கோள் காட்டி, தவக்காலத்தை உண்மையான மனமாற்றத்திற்கான "புனிதமான காலம்" என்று விவரித்துள்ளார்.

மேலும் "கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவே அடையாளம் காட்டும் ஏழ்மையான மற்றும் மிகவும் தேவையில் உள்ளவர்களுக்குத் தங்கள் உறுதிப்பாட்டை புதுப்பிக்க வேண்டும்" என்று அவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை.

'நான் உங்களை அன்புகூர்ந்துள்ளேன்" (Dilexi te) என்ற தனது அப்போஸ்தலிக்க அறிவுரை மடலைப் பற்றிக் குறிப்பிட்டு, வறுமைக்கான கட்டமைப்பு காரணங்களை நிவர்த்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை.

வீட்டுவசதி நெருக்கடியை தனிநபர், குடும்பம் மற்றும் சமூக நிலைகளில் விளைவுகளை ஏற்படுத்தும் ஒரு தீவிரமான பிரச்சனை என்று திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்கள் விவரித்ததை நினைவுகூர்ந்துள்ள திருத்தந்தை, "போதுமான வீட்டுவசதி இல்லாதது பரந்த பொருளாதார மற்றும் சமூகக் குறைபாடுகளை வெளிப்படுத்துகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

"தற்காலிக முயற்சிகளை மட்டுமல்ல, நீடித்த மன மாற்றத்தையும், வாழ இடமில்லாதவர்களுடன் ஒருமைப்பாட்டின் நிலையான அணுகுமுறையையும் ஊக்குவிக்க வேண்டும்" என்றும் எடுத்துக்காட்டியுள்ளார் திருத்தந்தை.

இந்தத் தவக்கால பரப்புரை அரசு அதிகாரிகளை பயனுள்ள பொது வீட்டுவசதி கொள்கைகளை ஊக்குவிக்க உதவும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள திருத்தந்தை, மிகவும் வலுக்குறைந்தவர்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்த கூட்டு முயற்சிகளுக்கு அழைப்புவிடுத்துள்ளார்.

இறுதியாக, பிரேசிலின் பாதுகாவலியான அபேரசிதா அன்னையிடம் இந்த முயற்சியை ஒப்படைத்து, அனைவருக்கும் மாண்புக்குரிய வீட்டுவசதியை உறுதி செய்வதற்காக உழைக்கும் அனைவருக்கும் தனது ஆசீரை அளித்து, தனது உரையை நிறைவு செய்துள்ளார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 பிப்ரவரி 2026, 11:18