தேடுதல்

கிறிஸ்துவின் சேனை என்ற துறவு சபையினருடன் திருத்தந்தை கிறிஸ்துவின் சேனை என்ற துறவு சபையினருடன் திருத்தந்தை   (ANSA)

அதிகாரத்தை ஆதிக்கமாக அல்ல, சேவையாக ஏற்றுக்கொள்ளுங்கள்!

திருத்தந்தை தனது உரையில், தனிப்பட்ட அல்லது மறை மண்டில நலன்களில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, அவர்கள் தங்கள் பணியைத் தொடரும்போது உள் மனச் சுதந்திரத்துடனும் நம்பிக்கையுடனும் எதிர்காலத்தைப் பார்க்குமாறு அவர்களை ஊக்குவித்தார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

பிப்ரவரி 19, வியாழக்கிழமையன்று, கிறிஸ்துவின் சேனை என்ற துறவு சபையினரை அவர்தம் ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தை முன்னிட்டு திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், துறவு வாழ்க்கையில் அதிகாரத்தின் பங்கை கட்டுப்பாடு அல்லது ஆதிக்கத்திற்கான வழிமுறையாக அல்லாமல் சேவையாக ஏற்றுக்கொள்ள வேண்டுமென அழைப்பு விடுத்தார்.

"கிறிஸ்துவை நோக்கி வழிநடத்துதல், ஆன்மிக மற்றும் உடன்பிறந்த உறவுக்கான பணியை வளர்ப்பது மற்றும் மாண்பு மற்றும் சுதந்திரத்திற்கான ஒருவருக்கொருவர்மீதான மரியாதையை உறுதி செய்வதில் அதிகாரம் கவனம் செலுத்த வேண்டும்" என்று அவர்களுக்கு நினைவூட்டினார் திருத்தந்தை.

"துறவு வாழ்வில் உண்மையான அதிகாரம் என்பது மற்றவர்களை எவ்வாறு வழிநடத்துவது மற்றும் ஆதரிப்பது என்பதை அறிவதாகும்" என்று கூறிய திருத்தந்தை, "இது பணிவு, வெளிப்படைத்தன்மை மற்றும் ஒரு சமூகமாக ஒன்றாக முடிவுகளை எடுப்பதன் வழியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்" என்று எடுத்துரைத்தார்.

இச்சபையின் கடினமான வரலாற்றை ஒப்புக்கொண்ட திருத்தந்தை, உறுப்பினர்கள் நற்செய்திக்கான தங்கள் உறுதிப்பாட்டை தொடர்ந்து புதுப்பிக்க ஊக்குவித்ததுடன், அவர்களின் தனிவரத்தை திருஅவைக்கு ஒரு "மதிப்புமிக்க பங்களிப்பாக" எடுத்துக்காட்டினார்.

சமூகத்திற்குள் உள்ள அனைத்துக் குரல்களும் கேட்கப்படுவதை உறுதிசெய்து, வெளிப்படைத்தன்மை, கூட்டுப் பொறுப்பு மற்றும் அதிகாரப் பகிர்வு ஆகியவற்றின் அடிப்படையில் நிர்வாகத்தை வளர்க்குமாறு தலைவர்களை வலியுறுத்தினார் திருத்தந்தை.

இறுதியாக, தனிப்பட்ட அல்லது மறை மண்டில நலன்களில் (regional interests) கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, அவர்கள் தங்கள் பணியைத் தொடரும்போது உள் மனச் சுதந்திரத்துடனும் நம்பிக்கையுடனும் எதிர்காலத்தைப் பார்க்குமாறு அவர்களை ஊக்குவித்து தனது உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.

1941-ஆம் ஆண்டு மெக்சிகோவில் நிறுவப்பட்ட இச்சபை உறுப்பினர்களுடனான சந்திப்பு, திருஅவைக்குள் அவர்களின் பணி மற்றும் நோக்கத்திற்கு உண்மையாக இருக்க ஊக்குவிக்க திருத்தந்தைக்கு இது ஒரு நல்ல வாய்ப்பை வழங்கியது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 பிப்ரவரி 2026, 12:28