தேடுதல்

உரை வழங்கும் திருத்தந்தை உரை வழங்கும் திருத்தந்தை   (@Vatican Media)

தேவையில் இருப்போருக்குத் தொடர்ந்து உதவுங்கள்!

"இந்தக் கலக்கம் நிறைந்த காலங்களில், திருத்தந்தையின் ஆட்சிப்பீடம் உண்மையைப் பேசவும், இயேசு கிறிஸ்துவை ஒப்புரவு செய்யப்பட்ட மனிதகுலத்திற்கான ஒரே நம்பிக்கையாக அறிவிக்கவும் சுதந்திரமாக இருப்பது மிகவும் முக்கியம்" : திருத்தந்தை பதினான்காம் லியோ

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

பிப்ரவரி 18, புதன்கிழமையன்று, உரோமைக்கான திருப்பயணத்தின் போது "புனித பேதுருவின் ஆட்சிப் பீடத்திற்காக" (Pro Petri Sede) என்ற அமைப்பின் உறுப்பினர்களுக்கு வழங்கிய உரையில், திருத்தந்தையின் ஆட்சிபீடத்தை ஆதரிப்பதில் அவர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பைப் பாராட்டினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

இவ்வமைப்பின் வரலாற்று மரபை நினைவு கூர்ந்த திருத்தந்தை, ஒரு காலத்தில் திருத்தந்தையின் ஆட்சியை தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் பாதுகாத்த Papal Zouaves என்ற காலாட்படைப் பிரிவினரின் அர்ப்பணிப்பை நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

அவர்களின் ஆதரவின் தன்மை பரிணாம வளர்ச்சிப் பெற்றுள்ள நிலையில், குறிப்பாக இறைவேண்டலில், விசுவாசிகளுக்கு திருத்தந்தையின் ஆட்சிப் பீடத்தின் பங்களிப்பை விளக்கி, ஏழைகளுக்குத் தொண்டு மற்றும் நன்கொடைகள் வழியாக உதவுவதில் அவர்களின் அர்ப்பணிப்பு இன்றியமையாதது என்று எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.

இந்த அமைப்பின் தொடர்ச்சியான பங்களிப்புகளுக்கு, குறிப்பாக தனது முன்னாள் மறைமாவட்டமான சிக்லாயோவில் ஒரு பிறரன்புப் பணி திட்டத்திற்கு அவர்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவித்துக்கொண்ட திருத்தந்தை, "இது மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு ஒரு பயிற்சி மையத்தை நிறுவ உதவும்" என்றும், "இந்த சைகை, உடல் ரீதியான தூரத்தைப் பொருட்படுத்தாமல், தேவையில் இருப்போருடன் நெருக்கமாக இருக்க அனுமதிக்கிறது" என்றும் குறிப்பிட்டார்.

திருத்தந்தையின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான இவ்வமைப்பின் பணியின் தொடர்ச்சியான பொருத்தத்தை கோடிட்டுக் காட்டிய திருத்தந்தை, "இது நற்செய்தியை அறிவிக்கவும், நீதியைப் பாதுகாக்கவும், அமைதியை மேம்படுத்தவும், ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களை ஆதரிக்கவும் திருத்தந்தைக்கு உதவுகிறது" என்று எடுத்துக்காட்டினார்.

"இந்தக் கலக்கம் நிறைந்த காலங்களில், திருத்தந்தையின் ஆட்சிப்பீடம் உண்மையைப் பேசவும், இயேசு கிறிஸ்துவை ஒப்புரவு செய்யப்பட்ட மனிதகுலத்திற்கான ஒரே நம்பிக்கையாக அறிவிக்கவும் சுதந்திரமாக இருப்பது மிகவும் முக்கியம்" என்று குறிப்பிட்டார் திருத்தந்தை.

இறுதியாக, இவ்வமைப்பின் உறுப்பினர்களையும் அவர்களது குடும்பங்களையும் அன்னை கன்னி மரியாவின் பரிந்துரை மற்றும் புனித பேதுருவின் பாதுகாவலில் ஒப்படைத்து, தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கி தனது உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 பிப்ரவரி 2026, 13:38