தேடுதல்

குவாதலூப் அன்னை திருவிழாவன்று புனித பேதுரு பெருங்கோவிலில் திருப்பலி நிறைவேற்றும் திருத்தந்தை (கோப்புப் படம்) குவாதலூப் அன்னை திருவிழாவன்று புனித பேதுரு பெருங்கோவிலில் திருப்பலி நிறைவேற்றும் திருத்தந்தை (கோப்புப் படம்)   (@Vatican Media)

நற்செய்தி அறிவிப்பு என்பது இயேசு கிறிஸ்துவைப் பிரசன்னமாக்குவது!

திருத்தந்தை தனது செய்தியில், "நற்செய்தி அறிவிப்புப் பணி என்பது, இயேசு கிறிஸ்துவை பிரசன்னமாக்குவதும், தனிப்பட்ட மற்றும் சமூக வாழ்க்கையை வடிவமைக்கும் ஓர் உயிருள்ள உறவை வளர்ப்பதும் ஆகும்" என்று எடுத்துக்காட்டியுள்ளார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம - வத்திக்கான்

பிப்ரவரி 24 முதல் 26 வரை மெக்சிகோ நகரில் இடம்பெறும் குவாதலூபே நிகழ்வு குறித்த இறையியல்-மேய்ப்புப் பணி மாநாட்டிற்கு அனுப்பிய செய்தியொன்றில், குவாதலூப்பே அன்னை மரியாவை உண்மையான கலாச்சாரப் பண்பாட்டின் ஒரு மாதிரியாகவும், திருஅவையின் நற்செய்தி அறிவிப்புப் பணிக்கான வழிகாட்டும் அளவுகோலாகவும் முன்வைத்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

பிப்ரவரி 5 ஆம் தேதியிட்ட தனது செய்தியில், "கடவுள் தன்னை மக்களிடமிருந்து அந்நியப்படுத்திக்கொள்வதில்லை, மாறாக, அவர் மனித வரலாற்றில் நுழைகிறார், மனித வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறுகிறார், மக்களின் சுதந்திரத்தை மதிக்கிறார்" என்று மொழிந்துள்ளார்.

"நற்செய்தி அறிவிப்புப் பணி என்பது, இயேசு கிறிஸ்துவை பிரசன்னமாக்குவதும், தனிப்பட்ட மற்றும் சமூக வாழ்க்கையை வடிவமைக்கும் ஓர் உயிருள்ள உறவை வளர்ப்பதும் ஆகும்" என்று எடுத்துக்காட்டியுள்ளார் திருத்தந்தை.

உண்மையான பண்பாடு என்பது உள்ளூர் கலாச்சாரங்களை முழுமையாகப் பேணவோ நிராகரிக்கவோ இல்லாமல் அவற்றை மதிப்பதே என்பதைக் காட்ட, தெபேயாக்கில் (Tepeyac)  நடந்த நிகழ்வை எடுத்துக்காட்டி, "கிறிஸ்தவப் படிப்பினைகளை புதியதாகவும் முழுமையாகவும் வைத்திருக்கும் அதே வேளையில், ஒரு கலாச்சாரத்தில் உள்ள நல்லதை எடுத்து, அதை மேம்படுத்தி, மக்கள் கிறிஸ்துவைச் சந்திக்க உதவுகிறது" என்று விளக்கியுள்ளார் திருத்தந்தை.

"வெவ்வேறு கலாச்சாரங்களுக்குள் நம்பிக்கையைக் கொண்டுவரும் பண்பாடு எளிதானது அல்ல" என்று கூறியுள்ள திருத்தந்தை, ஒவ்வொரு கலாச்சாரத்திலும் ஏற்கனவே உள்ள இறைவனின் வார்த்தைகளை கண்டுபிடிக்க கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும்" என்று அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் "கிறிஸ்துவின் இறப்பு மற்றும் உயிர்த்தெழுதலின் அருளால் அனைத்து மனித அனுபவங்களும் மாற்றப்பட வேண்டும்" என்றும், "எந்தக் கலாச்சாரத்தையும் விசுவாசத்திற்கான இறுதி தரமாகப் பார்க்கக்கூடாது" என்றும் கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை.

சமகால நகர்ப்புற மற்றும் பன்முகச் சமூகங்களைக் குறித்துப் பேசியுள்ள திருத்தந்தை, "நம்பிக்கையின் பரவலை இனி சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது" என்று  குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய கலாச்சார சவால்களுக்கு பதிலளிக்கும் திறன் கொண்ட முதிர்ந்த மற்றும் மனசாட்சியுள்ள சீடர்களை உருவாக்குவதற்கு, 2007-ஆம் ஆண்டு அபரேசிதா ஆவணத்தின் தொடர்ச்சியாக, புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்புடன் கூடிய நம்பிக்கை உருவாக்கத்திற்கு அழைப்பு விடுத்து தனது செய்தியை நிறைவு செய்துள்ளார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 பிப்ரவரி 2026, 12:45