தேடுதல்

வன்முறைக்கு விடை கொடுப்போம்; வாழ்வால் அமைதி படைப்போம்!

அமைதி என்பது கடவுள் தரும் அருட்கொடை. அதனை நாம் பெறுவதற்கும் தற்காத்துக் கொள்வதற்கும் இடைவிடாத பொறுமையும், அனைவரின் ஒன்றிணைந்த உழைப்பும் அவசியமாகும். இது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

ஏப்ரல் 15, புதன்கிழமையன்று, கேமரூன் நாட்டின் அரசு அதிகாரிகள், குடிமைச் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் தூதரக அதிகாரிகளுடனான சந்திப்பின் போது திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் ஆற்றிய உரை.

மதிப்பிற்குரிய அதிபர் அவர்களே, தூதரக அதிகாரிகளே, சகோதர,சகோதரிகளே!

எனக்கு அளிக்கப்பட்ட சிறப்பான வரவேற்பிற்கும், என் மீது காட்டப்பட்ட அன்பான வரவேற்பு வார்த்தைகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நிலவளம், கலாச்சாரம், மொழிகள் மற்றும் பாரம்பரியங்களின் செழுமை காரணமாக, பெரும்பாலும் 'குட்டி ஆப்பிரிக்கா' (Africa in miniature) என்று வர்ணிக்கப்படும் கேமரூன் நாட்டில் நான் இருப்பதை நினைத்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இத்தகைய பன்முகத்தன்மை நம் பலவீனம் அல்ல, அவை ஒரு பெரும் சொத்து . இது நம்மிடையே சகோதரத்துவத்தை வளர்ப்பதோடு, ஒரு நீடித்த அமைதியை உருவாக்குவதற்கான வலுவான அடித்தளமாகவும் அமைகிறது.

அமைதியின் தூதுவனும் காலத்தின் தேடலும்

நல்லிணக்கம், சகோதரத்துவம் மற்றும் அமைதியின் தூதுவனாகவும், ஒரு தொண்டனாகவும் உங்கள் முன்னே நான் நிற்கிறேன்.எனது இந்தப் பயணம், அனைத்து கேமரூன் நாட்டு மக்கள் மீதும் புனித பேதுருவின் வழித்தோன்றல் கொண்டுள்ள அன்பைப் பிரதிபலிக்கிறது; மேலும், உங்கள் ஒவ்வொருவரையும் பொதுநலனை நோக்கிய பயணத்தில் விடாமுயற்சியுடன் செயல்பட ஊக்குவிக்கிறது. நம்பிக்கையற்ற தன்மையும், கையாலாகாத நிலையும் நிறைந்த ஒரு காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்; இருப்பினும், நீதி, துணிவு மற்றும் அமைதிக்கான ஒரு ஆழமான தாகமும் பசியும் நம்மிடையே இன்னும் இருந்துதான் வருகிறது. குறிப்பாக, மிகவும் நீதியானதொரு உலகத்தைப் படைக்க அழைக்கப்பட்டிருக்கும் இளைஞர்களைச் சென்றடைய நான் பெரிதும் விரும்புகிறேன். மரியாதை, மனித மாண்பு மற்றும் மத சுதந்திரம் ஆகியவற்றின் அடிப்படையில், திரு அவைக்கும் கேமரூன் குடியரசுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் நான் விரும்புகிறேன்.

நம்பிக்கை, நல்லிணக்கம், நீதி மற்றும் அமைதி ஆகிய செய்திகளைக் கொண்டு வந்த எனது முன்னோடிகளின் வருகையை, கேமரூன் நாடு இன்றும் தன் நினைவுகளில் போற்றிப் பாதுகாக்கிறது. அவர்களுடைய வார்த்தைகள் இன்றும் பொருத்தமானவையாகவே இருக்கின்றன; 'நாம் இப்போது எங்கே இருக்கிறோம், இன்னும் செய்ய வேண்டியவை என்ன?' என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள அவை நம்மைத் தூண்டுகின்றன.

ஆட்சி என்பது அதிகாரம் அல்ல; அது சேவை

ஆட்சியாளர்கள் தங்களை அதிகாரம் செய்பவர்களாகக் காட்டிக்கொண்டாலும், உண்மையில் அவர்கள் மக்களுக்குத் தொண்டு செய்பவர்களே. அவர்கள் அதிகாரத்திற்காக ஆளாமல், பொறுப்புணர்வோடும் இரக்கத்தோடும் ஆட்சி செய்கிறார்கள் என்று புனித அகுஸ்தின் குறிப்பிட்டுள்ளார். இவ்வகையில், ஒருவரது நாட்டுக்குச் சேவை செய்வது என்பது, பெரும்பான்மையினர் மற்றும் சிறுபான்மையினர் என அனைவருக்குமான பொதுநலனுக்காகத் தன்னை அர்ப்பணிப்பதையும், அதே நேரத்தில் அவர்களுக்கு இடையே நல்லிணக்கத்தை வளர்ப்பதையும் குறிக்கிறது.

வன்முறையைத் துறந்து அமைதியை வாழ்வாக்குதல்

இன்று, கேமரூன் நாடு பல சிக்கலான சவால்களை எதிர்கொண்டுள்ளது. குறிப்பிட்ட சில பகுதிகளில் நிலவும் வன்முறை ஆழமான துயரத்தை ஏற்படுத்தியுள்ளது: உயிர்கள் பறிபோயுள்ளன, குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன, மேலும் இளைஞர்கள் தங்கள் நம்பிக்கையை இழந்து தவிக்கின்றனர்.ஒவ்வொரு புள்ளிவிவரத்திற்குப் பின்னாலும், உண்மையான மனிதர்களின் கதைகள் மறைந்துள்ளன. இதற்குப் பதிலாக, நாம் வன்முறையின் போக்கை நிராகரிக்க வேண்டும்; அன்பு மற்றும் நீதியின் அடிப்படையில் அமைந்த அமைதியைத் தழுவ வேண்டும். ஆயுதமற்ற, பகைமையை முறியடிக்கக்கூடிய, பிரிவினைகளைக் களைந்து  நம்பிக்கையை வளர்க்கக்கூடிய அந்த அமைதியை நாம் ஏற்க வேண்டும். அமைதி என்பது வெறும் முழக்கமாக மட்டுமே இருந்துவிடக் கூடாது; அது வன்முறையின் அனைத்து வடிவங்களையும் நிராகரிக்கின்ற ஒரு வாழ்க்கை முறையாக மாற வேண்டும்.

அமைதி என்பது கடவுள் தரும் அருட்கொடை. அதனை நாம் பெறுவதற்கும் தற்காத்துக் கொள்வதற்கும்  இடைவிடாத பொறுமையும், அனைவரின் ஒன்றிணைந்த உழைப்பும் அவசியமாகும்.இது ஒவ்வொருவரின் கடமையாகும். குறிப்பாக குடிமைச் சமூகத்தில் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு இதில் மிகப்பெரிய கடமை உள்ளது. ஆட்சி செய்வது என்பது மக்களின் குரலுக்குச் செவிசாய்ப்பதும், குடிமக்களை மதிப்பதும், தீர்வுகளை ஒன்றாக இணைந்து தேடுவதுமே ஆகும். இந்தச் செயல்பாட்டில் குடிமைச் சமூகம் ஒரு மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. பல்வேறு அமைப்புகள்,பெண்கள் மற்றும் இளைஞர் அமைப்புகள், மனிதாபிமான அமைப்புகள் மற்றும் மதத் தலைவர்கள் என அனைவரும் சமூக ஒருமைப்பாட்டிற்குத் தங்கள் பங்களிப்பை வழங்குகின்றனர். அவர்கள் நெருக்கடி காலங்களில் உடனடி உதவி புரிகின்றனர், பாதிக்கப்பட்டவர்களுக்குத் துணை நிற்கின்றனர், உரையாடல்களை ஊக்குவிக்கின்றனர் மற்றும் நிலையான தீர்வுகளைக் கண்டறிய உதவுகின்றனர்.

பெண்களின் அளப்பரிய பங்களிப்பு

பெண்களின் மிக முக்கியமான பங்கினை நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். நீதியற்ற செயல்களால் பெரும்பாலும் முதலில் பாதிக்கப்படுபவர்கள் அவர்களாகவே இருந்தபோதிலும், அவர்கள் சோர்வில்லாத அமைதித் தூதுவர்களாக விளங்குகிறார்கள். கல்வி புகட்டுவதிலும், பிணக்குகளைத் தீர்ப்பதிலும், சமூகத்தைக் கட்டியெழுப்புவதிலும் அவர்கள் ஆற்றிடும் பணி அளப்பரியது; எனவே, முக்கிய முடிவுகளை எடுக்கும் தளங்களில் அவர்களின் கருத்துக்கள் முழுமையான அங்கீகாரத்தைப் பெற வேண்டும்.

ஊழலற்ற நிர்வாகமும் வெளிப்படைத்தன்மையும்

பொது வளங்களை நிர்வகிப்பதில் வெளிப்படைத்தன்மையும், சட்டத்தின் ஆட்சிக்கு மதிப்பளிப்பதும், இழந்த நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்பதற்கு இன்றியமையாதவை. அரசு நிறுவனங்கள் நிலைத்தன்மையின் தூண்களாகத் திகழ வேண்டும்; அரசுத் தலைவர்கள் பிளவுகளை உருவாக்குபவர்களாக இல்லாமல், மக்களை இணைக்கும் பாலங்களாகச் செயல்பட வேண்டும். பாதுகாப்பு என்பது அவசியமானது என்றாலும், அது எப்போதும் மனித உரிமைகளை மதிக்கும் வகையில் இருக்க வேண்டும்; ஒவ்வொரு மனிதனும் தான் பாதுகாக்கப்படுவதாகவும், மதிக்கப்படுவதாகவும் உணர்வதை அது உறுதி செய்ய வேண்டும்.

உயரிய பொறுப்புகள் எவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோ, அவர்கள் தங்கள் அர்ப்பணிப்புள்ள பணி மற்றும்  நேர்மையின் மூலமாகவே அத்தகுதிக்கானச் சான்றினை வழங்க வேண்டும். ஊழல் முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டும்; ஏனெனில் அது நம்பிக்கையைச் சிதைப்பதோடு, அதிகாரத்தின் மாண்பையும் சீர்குலைக்கிறது. உண்மையான முன்னேற்றம் என்பது முழுமையான மனித மேம்பாட்டிலிருந்து உருவாவதாகும். அதாவது, ஒரு சமூகம் செழிக்கத் தேவையான வாழ்வின் அனைத்து அங்கங்களும் சமச்சீரான வளர்ச்சியடைவதையே இது குறிக்கிறது.

இளைஞர்களே நாட்டின் நம்பிக்கை

தனது சோதனைகளைக் கடந்து, நிலைத்தன்மை மற்றும் அனைவருக்குமான செழுமையை நோக்கி முன்னேறுவதற்குத் தேவையான வளங்களைக் கேமரூன் பெற்றுள்ளது. உரையாடல், நீதி மற்றும் மேம்பாடு ஆகியவை கடந்த காலக் காயங்களை மறுமலர்ச்சிக்கான ஊற்றுகளாக மாற்றும் வல்லமை கொண்டவை. குறிப்பாக, இளைஞர்களே தேசத்தின் நம்பிக்கையாகத் திகழ்கின்றனர். அவர்களின் துடிப்பும் படைப்பாற்றலும் விலைமதிப்பற்றவை; ஆனால், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் முறையான வாய்ப்புகளின் மூலம் அவர்கள் ஊக்கப்படுத்தப்பட வேண்டும். ஏமாற்றத்தையும் வன்முறையையும் தடுப்பதற்கு மட்டுமல்லாமல், இடப்பெயர்வு, சமூகப் புறக்கணிப்பு மற்றும் சீரழிவான நடத்தைகள் போன்ற சவால்களை எதிர்கொள்வதற்கும் இது மிக அவசியமாகும்.

ஊக்கமளிக்கும் விதமாக, கேமரூன் நாட்டு இளைஞர்கள் ஆழமான ஆன்மீக உணர்வைக் கொண்டுள்ளனர்; அது அவர்களின் இலட்சியங்களுக்கு ஒரு அர்த்தமுள்ள வடிவத்தைத் தருகிறது. சமய மரபுகள் நல்வழியில் ஆற்றுப்படுத்தப்படும்போது, அவை சமூகத்தில் அமைதி, நீதி மற்றும் ஒருமைப்பாட்டை வளர்க்கும் பெரும் ஆற்றலாக உருவெடுக்கின்றன. மதங்களுக்கிடையேயான உரையாடல்களும், தலைவர்களுக்கு இடையிலான ஒத்துழைப்பும் பதற்றங்களைத் தணிக்கவும், தீவிரவாதத்தைத் தடுக்கவும் மற்றும் ஒருவரை ஒருவர் மதித்து நடக்கும் பண்பை ஊக்கப்படுத்துவதுடன், சமூக ஒற்றுமைக்கான வலுவான அடித்தளமாகவும் இவை அமைகின்றன.

திருஅவையின் உறுதிமொழியும் ஆசீர்வாதமும்

கல்வி, மருத்துவம் மற்றும் அறப்பணிகள் வாயிலாக, எவ்வித வேறுபாடுமின்றி அனைத்து மக்களுக்கும் பணியாற்றுவதில் கத்தோலிக்க திருஅவை  என்றும் உறுதியுடன் உள்ளது. மனித மாண்பையும் நல்லிணக்கத்தையும் மேம்படுத்துவதிலும், உலகெங்கிலும் உள்ள கேமரூன் நாட்டு மக்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்துவதிலும், அரசு அதிகாரிகளுடனும் பிறருடனும் இணைந்து செயல்பட திருஅவை  விழைகிறது.

கடவுள் கேமரூன் நாட்டை ஆசீர்வதிப்பாராக; அதன் தலைவர்களை நல்வழிப்படுத்தி, குடிமைச் சமூகத்தை  வலுப்படுத்துவாராக; மேலும், நீதி மற்றும் அமைதியில் வேரூன்றிய ஒரு எதிர்காலத்தை அனைவரும் இணைந்து கட்டியெழுப்புவதற்கான அருளை அந்நாட்டு மக்கள் அனைவருக்கும் வழங்குவாராக. உயரிய பொறுப்புகள் எவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோ, அவர்கள் தங்கள் அர்ப்பணிப்புள்ள பணி மற்றும் தூய நேர்மையின் மூலமாகவே அத்தகுதிக்கானச் சான்றினை வழங்க வேண்டும்.""ஊழல் முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டும்; ஏனெனில் அது நம்பிக்கையைச் சிதைப்பதோடு, அதிகாரத்தின் மாண்பையும் சீர்குலைக்கிறது.""உண்மையான முன்னேற்றம் என்பது முழுமையான மனித மேம்பாட்டிலிருந்து உருவாவதாகும்—அதாவது, ஒரு சமூகம் செழிக்கத் தேவையான வாழ்வின் அனைத்து அங்கங்களும் சமச்சீரான வளர்ச்சியடைவதையே இது குறிக்கிறது. 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 ஏப்ரல் 2026, 11:15