தேடுதல்

கிறிஸ்துவின் உயிர்ப்பு ஒரு புதிய தொடக்கம்!

கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் என்பது ஒரு புதிய தொடக்கம், இறப்பை விட வலிமையான ஒரு புதிய படைப்பு என்பதை உயிர்ப்புப் பெருவிழா நமக்கு நினைவூட்டுகிறது. இந்த நம்பிக்கையை இவ்வுலகிற்குக் கொண்டு வருவதற்கும், உயிர்த்தெழுதலின் மகிழ்ச்சியை வாழ்ந்து காட்டுவதற்கும், இறப்பு இன்னும் தன் நிழலை வீசும் இடமெல்லாம் வாழ்வின் ஒளியைப் பரப்புவதற்கும் இது நமக்கான ஓர் அழைப்பு.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஏப்ரல் 05, ஞாயிற்றுக்கிழமை காலை 10.15 மணிக்கு, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் இடம்பெற்ற ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாத் திருப்பலியில் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் வழங்கிய மறையுரை.

அன்பான சகோதரர் சகோதரிகளே,

இன்று, படைப்பு முழுவதும் புதிய வாழ்வின் சுடரொளியால் நிறைந்துள்ளது! கிறிஸ்து உயிர்த்தெழுந்தார், அவருடன் நாமும் புதிய வாழ்வுக்கு உயிர்த்தெழுகிறோம். இந்த உயிர்ப்புச் செய்தி, கடந்த காலத்திற்கான ஒரு வாக்குறுதி மட்டுமல்ல, அது  ஓர் உயிருள்ள நம்பிக்கை, இறப்பின் ஆழங்களையும் வெல்லும் ஓர் ஒளி. இறப்பு தன் வல்லமையை இழந்துவிட்டது; அது இனி நம்மைக் கட்டுப்படுத்துவதில்லை.

ஆயினும், இந்தச் செய்தியைப் புரிந்துகொள்வது கடினம் என்பதை நாம் அறிவோம். இறப்பின் அச்சுறுத்தல் உண்மையானது, அது நமக்குள்ளும் நம்மைச் சுற்றியும் இருக்கிறது. உள்ளுக்குள், நமது பாவங்களாலும், ஏமாற்றங்களாலும், தனிமையாலும் நாம் பாரம் சுமக்கிறோம். கவலைகள், மனக்கசப்புகள், ஏன் துரோகம் போன்றவற்றால் நாம் பாரம் சுமக்கிறோம். சில வேளைகளில், வாழ்க்கையின் சவால்கள் ஓர் இருண்ட சுரங்கப்பாதையில் சிக்கிக்கொண்டது போல, நம்மை நிலைகுலையச் செய்யலாம்.

மேலும் வெளியே, சுயநலம், வன்முறை, வறுமை, போர் போன்ற உலகின் அநீதிகளில் இறப்பு தென்படுகிறது. ஏழைகள் சுரண்டப்படுவதிலும், படைப்புகளுக்கு இழைக்கப்படும் தீங்கிலும் நாம் அதைக் காண்கிறோம். ஆனால், சரியாக இந்த இருளில்தான், ஆண்டவரின் பாஸ்கா விழா நம்மை அண்ணாந்து பார்க்கவும், நம் இதயங்களைத் திறக்கவும் அழைக்கிறது. துன்பத்தின் நடுவிலும் கூட, உயிர்த்தெழுதல் நம்பிக்கையையும் வெற்றியையும் தருகிறது.

கிறிஸ்துவின் வெற்றியை நாம் சிந்தித்துப் பார்க்கும்போது, ​​உயிர்த்தெழுதல் என்பது வெறும் கடந்தகால நிகழ்வு மட்டுமல்ல; அது இன்றைய உலகில் மாற்றத்தை உண்டாக்கும் ஒரு வலிமை என்பதை நினைவில் கொள்வோம். தீமை நம்மைச் சுற்றிலும் இருப்பது போல் தோன்றினாலும், புதிய வாழ்வு தோன்றுகிறது. உயிர்த்தெழுதலின் அடையாளங்கள் எங்கும் காணப்படுகின்றன; பெரும்பாலும் அவை மிகவும் எதிர்பாராத இடங்களில்கூட இருக்கின்றன.

கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் என்பது ஒரு புதிய தொடக்கம், இறப்பை விட வலிமையான ஒரு புதிய படைப்பு என்பதை உயிர்ப்புப் பெருவிழா நமக்கு நினைவூட்டுகிறது. இந்த நம்பிக்கையை இவ்வுலகிற்குக் கொண்டு வருவதற்கும், உயிர்த்தெழுதலின் மகிழ்ச்சியை வாழ்ந்து காட்டுவதற்கும், இறப்பு இன்னும் தன் நிழலை வீசும் இடமெல்லாம் வாழ்வின் ஒளியைப் பரப்புவதற்கும் இது நமக்கான ஓர் அழைப்பு.

மகதலா மரியாவைப் போல, கிறிஸ்து உயிரோடு இருக்கிறார் என்று உலகிற்கு அறிவிக்கும் பொருட்டு, நாமும் மகிழ்ச்சியுடன் ஓடுவோம். மேலும், உயிர்த்தெழுந்த கிறிஸ்துவாகிய நமது பாஸ்கா, நம் அனைவரையும் ஆசீர்வதித்து, உலகிற்கு அமைதியைக் கொண்டு வருவாராக!

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 ஏப்ரல் 2026, 13:00